டாம் பாய்Tom boy😎

" அப்பா, "கவிதை குவியல்" தளம் நடத்தின கதை போட்டியில நான் ஜெயிச்சுட்டேன்."
" அப்படியா, வாழ்த்துக்கள், ஆமா இப்ப தான் ஞாபகம் வருது, நானும் தான் அந்த போட்டியில கலந்துகிட்டேன்"
" ஆமாம்பா, ஆனா உங்க பேர் ஜெயிச்சவங்க லிஸ்டல இல்லையே"
" அப்படியா, நான் எந்த தலைப்புல கதை எழுதனேன்னு உனக்கு தெரியும் இல்ல"
" தெரியும்ப்பா, காந்தியும் நவகாளியும்"
" நான் போட்டிக்கு போடறதுக்கு முன்னாடி  அந்த கதையை நீயும் படிச்ச இல்ல"
" ஆமாம்பா, படிச்சேன்"
" நீ கூட ரொம்ப நல்லா இருகுன்னு சொன்னியே"
" நிச்சயமா அப்பா, ரொம்ப நல்ல ஒரு படைப்பு அது"
" பின்ன, ஏன் என் பெயர் வெற்றி பெற்ற பட்டியலில் வரல"
" ஏன்னு தெரியலை அப்பா"
" சரி நீ என்ன கதை அனுபிச்ச"
" டாம் பாய்" என்ற தலைப்புல, ஏற குறைய குறு நாவல் வடிவத்தில"
" எங்க காமி, உன் கதையை படிக்கிறேன்"
" நிச்சயமா அப்பா, இந்தாங்க இந்த செல் போன் செயலியில் இருக்கு, படிங்க..."

இரண்டு முறை தன் மகன் எழுதின
டாம் பாய் கதையை படித்தவர்
" டேய், தமிழ், இது சிலப்பதிகாரத்தை அப்படியே உல்டா பண்ணிட்ட, சரியா"
" எப்படி அப்பா கண்டு பிடிச்சீங்க"
" அது ஒன்னும் பெரிய விஷயமே இல்லை"
" கதை எப்படி "
" நல்லா இருக்கு, ஆனா பரிசு வாங்கற ஆளவுக்கு சரக்கு இல்லையே"
" ஏன் அப்பா"
" சொன்ன கோவிச்சக்க மாட்டியே"
" சொல்லுங்கப்பா"
" இளங்கோவடிகள், இத படிச்சிருந்தா , உன் மேல கேஸ் போடிருப்பாரு"
" ஏன்"
" பின்ன, அவர் கதையை உல்டா பண்ணி, கதை முழுக்க புதுமையை புகுத்துறேன் என்ற பேர்வழின்னு, மிகப்பெரிய கலாச்சார சீர்கேடு பண்ணியிருக்க"
" அப்பா, தப்பா நினைக்காதீங்க, உங்க புரிதல் மிகவும் தப்பு"
" என்ன தப்பு, நீ எழுதின இந்த கதை கரு மிக, மிக தவறு"
" நான் ஒன்னும் ஊர்ல நடக்காதத எழுதலையே"
" ஊர் உலகத்துல, எவ்வளவோ அசிங்கம் நடக்கும், கருமம் கண்றாவி எல்லா நிகழும், அது தான் தினசரி பத்திரிகையில சுவாரிசயமா படிக்க காலையிலேயே வந்துடுதே, அந்த கண்றாவிய மீண்டும் நீ கதையா வேற எழுதனுமா, அதுவும் உயர்ந்த சிலப்பதிகாரத்தை சிதைக்கனுமா"
" அப்பா, நான் சிலப்பதிகாரத்தை எந்த விதத்தலையும் சிதைக்கனும்னு இந்த கதையை எழுதல, உங்க பார்வையே தவறு"
" அப்ப, நீ கதையில படைத்திருக்கிற டாம்பாய் ( பெண் தான் நடை, உடை பாவனையில் ஆணாகவே, பல சமயங்களில் குணங்களிலும் ஆணு நிகராக)
கதாபாத்திரம் செய்யும் காரியங்கள் எல்லாம் சரியா"
" கண்ணகியை "டாம்பாய்" ஆக்கிட்டேன், கோவலனை மனைவிக்கு கட்டுபடும் ஆண் மகனாக படைத்துள்ளேன், இது தவறா"
" தவறு தான்"
" உங்க எண்ணம், சிந்தனை  எனக்கு நல்லா புரியுது"
" என்ன சொல்ல வற"
" உங்க எண்ணம் முழுவதும் ஆணாதிக்க சிந்தனை, அதான் இந்த படைப்பின் மீது இவ்வளவு கோபம்"
" அப்ப டாம்பாயா வலம் வர அந்த பொண்ணு , மாதவிக்கு பதிலா மாதவன்னு ஒரு பையனோட, தன் புருஷன் இருக்கும் போதே கண்டபடி ஊர் சுத்தருது ஞாயமா"
" சிலப்பதிகாரத்துல, கோவலன் செய்தது ஞாயமா, அவன் கண்ணகிக்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்தான், ஏன் உங்களுக்கு தெரியாதா"
" அதனால, பழி வாங்குறேன் என்ற பேர்வழின்னு , ஒரு பொண்ணு ஆம்பள மாதிரி எல்லா அட்டகாசம் பண்ணனுமா"
" உங்களுக்கு பெண்கள் ஆதிக்கம் செய்யறத ஏத்துக்க முடியில, அதான் இப்படி கோப படறீங்க"
" என்னத்தான், புருஷன் கையாளாகதவன் ஆனாலும், அந்த பொண்ணு, அந்த மாதவனோட ஒரே பைக்கில போறது, வெளியூர் அவனோட போகும் போது ஒரே ஓட்டல்ல தங்குறது, ஒரு கட்டத்துல, அவனோட உடலால கலக்குறது, இதெல்லாம் சுத்தமா சரியில்லை"
" உங்க பழைய கண்ணாடி போட்டு இந்த கதை படிச்சா அப்படித்தான்பா தெரியும், என் கதைபடி என் கதாநாயகி ஒரு டாம்பாய் கேரெக்டர். அப்ப அவ எவ்வளவு புதுமையா இருப்பான்னு யோசிங்க, எவ்வளவு தெளிவா இருப்பான்னு யோசிங்ங, அப்புறம், அவளோட பெத்தவங்க அவளுக்கு கட்டி வைத்த கணவனால, அவளுடைய அடிப்படை சிற்றின்ப வாழ்கையை அவனால கொடுக்க முடியில, சரி பொருள் இட்டவும் அவனால முடியில, ஒரு பொம்மை புருஷன அவ எவ்வளவு நாள் பார்த்து கொண்டே இருப்பா, அதான் அவ பொங்கி எழுந்தா, இதுல என்ன தவறு"
" பெண் என்பவள் கண்ணாடி மாதிரி"
" புரியலை"
" கண்ணாடி உடைஞ்சா ஒட்ட வைக்க முடியுமா"
" இது  மிக பழங்கதை அப்பா, காலம் மிகவும் மாறிவிட்டது. ஆணுக்கு ஏற்படற அடிப்படை ஆசை பெண்களுக்கு ஏற்பட்டு, அதை அவள் தன் விருப்பமான ஒருவருடன் அடைவது தவறா"
"தவறு தான்"
" அப்ப, அதை ஆண் ஒருவன் அதே தப்பு செய்தா?"
" அது... அது..."
" உங்ககிட்ட பதில் இல்ல"
" நீ ஆயிரம் சமாதானம் சொன்னாலும், கணவனுக்கு உன் டாம்பாய் கேரெக்டர் துரோகம் பண்ணிட்டா"
" இப்பவும் சொல்றேன், அவ தர்ககுறி இல்ல, அவ விட்டல் பூச்சியும் இல்ல"
" நீ சமாளிக்கிற"
" இல்ல, இல்லவே இல்ல, உங்க கூற்றுபடி அவ புருஷன் ஒன்னுதுக்கும் உதவாதவனாக ஆனாலும், கன்னி கழயாம கற்போட அவனோட குடும்ப நடத்தினா, கைதட்டி பாராட்டுவீங்க, இல்ல"
" சரி அந்த பொண்ணுக்கு தன் கணவன் சரியில்லைன்னு தெரிஞ்ச அப்புறம், அவ பெற்றோர் கிட்ட சொல்லி பிரியலாமே, ஏன் மறுமணம் என்கிற கருமத்தை கூட செய்துயிருக்கலாமே"
" அவள் நோக்கம் கதைப்படி அவ புருஷனை வெறுக்கல, மருத்துவத்தின் மீது அவளுக்கு நம்பிக்கை இருக்கு, அப்படி மருத்துவம் நம்பிக்கை தறவில்லைன்னா, மறுமணம் பற்றி கண்டிப்பா யோசிப்பா, இப்ப அவள் பிரதான தேவை பொருள் ஈட்டுவது, வாழ்க்கையில் பெரிய அளவுக்கு முன்னேறுவது "
" அப்ப, நல்ல வைத்தியர் கிட்ட காண்பித்து , அவளோட புருஷன் சிற்றின்ப உடல் தகுதி அடையும் வரை அவள் காத்திருக்கலாமே, ஏன் அவள் அவ்வாறு செய்யவில்லை"
" அப்பா, இந்த விஞ்ஞான உலகத்துல அவ பண்ணது மிக பெரிய தப்பு இல்ல, அது ஒரு சின்ன விபத்து. அவ்வளவே. ஒரு வேளை அந்த மாதவன் ஏன் அவள் மறுமணம் செய்ய போகும் கணவனா கூட இருக்கலாம் இல்லையா"
" என்னவோ, என்னோட எண்ணம் இதை ஏற்க மறுக்கிறது"
" மறுக்கல அப்பா, அது காலகாலமா, இந்த கலாச்சாரம், பண்பாடு எல்லாம், பெண்கள் கற்பையே சுத்தி, சுத்தி வரதனால, உங்கள மாதிரி, ஏன் ஒட்டு மொத்த ஆண் சமூகத்தால இதை ஏத்துக்க முடியில, இதை மிக, மிக ஆழமா பெண்கள் மனதிலேயும் விதைச்சுடீங்க.
இந்த மாதிரி ஆயிரத்தில் ஒரு பெண் உருவெடுத்தா, உடனே
காரி உமிழ்வீங்க, இது எல்லாமே ஆண் ஆதிக்க புத்தி, ஆண் தப்பு செய்தா, அவன் என் செய்வான் , வீட்ல சாப்பாடு செரியில்லைன்னா, ஓட்டல்ல தானே சாப்பிடுவான். ஆனா ஒரு பெண் தவறு செய்தா... ஈர பேனாக்கி, பேன பெருமாள் ஆக்கிடுவீங்க. அதனால தான் இந்த மாதிரி டாம்பாய் பெண்கள் உருவானாங்க. நிறையவே எதிர்காலத்துல உருவெடுப்பாங்க. அவங்க சமூகத்த சீரழிக்க மாட்டாங்க, நிச்சயமா சமூகத்த சீர்படுதுவாங்க"
" நீ போகாது ஊருக்கு வழி சொல்ற"
" அப்பா பல ஊர் தாண்டி வந்துட்டோம், அதை நீங்க புரிஞ்சிக்கோங்க, ஒரு காலத்துல நைட் ஷிப்ட் வேலைக்கு பெண்கள் போவாங்களா, இல்ல நம்ம தான் அவங்கள நம்பி அனுப்புவோமா, ஆனா இப்ப நைட் ஷிப்ட் வேளைக்கு பெற்றோர்கள் நம்மளே அனுப்புறோம் இல்ல"
" இது பெண்கள் அடைந்த முன்னேற்றம்"
" அது மாதிரி பெண்கள் மன ரீதியா பல முன்னேற்றங்கள் நல்ல முறையில் அடையறாங்க, நிச்சயமா இந்த சமூகத்தை ஒரு ஆக்க பூர்வமான, ஆரோக்கியமான சமூகமா பெண் மாத்துவாங்க. அதன் சின்ன பங்களிப்பே என் படைப்பான டாம்பாய்"
" சரி என் படைப்புக்கு ஏன் பரிசு தரல"
" அது ஒரு குழுவோட முடிவு"
" அப்ப, என் கதையை நிராகரிக்க பட்டதா"
" பரிசு, ஐந்து பேருக்கு தானே"
" அந்த குழு ஆசிரியருக்கு போன் போடு"

" நான், விஸ்வநாதன் பேசுறேன், கதை போட்டியில, காந்தியும் நவகாளியும் கதை எழுதியிருந்தேன். ஏன் என் கதை தேர்வு செய்யவில்லை"
" சார், நாங்க பத்து பேர் சேர்ந்த குழு தேர்ந்தெடுத்தது, ஐந்து படைப்பு தான், அதுல உங்க கதை தேர்வு ஆகவில்லை"
" சரி, என் மகன், தமிழ், எழுதின டாம்பாய் எப்படி தேர்வு செய்தீங்க"
" சார், டாம்பாய் அது தான் சார் டாக் ஆப் த டவுன். வித்தியாசமான சிந்தனை, குறுநாவல் வரலாறுல இந்த டாம்பாய் ஒரு மயில் கல். நல்ல மெசேஜ் உள்ள கதை கரு, அதனால அதை முதல் கதையா தேர்வு செய்தோம்"
" அப்படியா ரொம்ப சந்தோஷம். உங்க கதை தளம் ரொம்ப கிழ்தரமா போகுது. அதனால நான் உங்க தளத்தில் இருந்து விலகுகிறேன்"
" சார், கோப படாதீங்க, அடுத்த போட்டியில் கலந்து நீங்க வெற்றி அடைங்க"
" நான், ஏற்கனவே நிறைய வெற்றிய குவிச்சுட்டேன். உங்க பரிசு கிடைக்வில்லை என்று எனக்கு துளிக்கூட கவலை இல்லை, ஒரு தவறான கதைக்கு முதல் பரிசு தந்த உங்கள் தளத்தை வன்மையா கண்டிக்கிறேன்"
" சார்....சார்..."

மறு நாள் காலை...

"டேய், தமிழ், இந்தா இதை பத்திரமா ரெஜிஸ்டர் போஸ்ட் பண்ணிடு, இது என் பொக்கிஷம்"
" என்னப்பா இது"
" என் பார்வையில் இந்தியா"
" ஓ, உங்கள் பல நாள் கனவு"
" ஆமாம் சாகித்திய அகாடமி விருது"
" நிச்சயம் இம்முறை உங்களுக்கு கிடைக்கும் அப்பா"
" முயற்சி திருவினையாக்கும்"


டெலிபோன் அடித்தது.
" சொல்லுங்க"
" விஸ்வநாதன்"
" அவர் நோ மோர்"
" சாரி, நாங்க சாக்கித்திய அகடாமியில் இருந்து பேசறோம், அவர் எழுதிய இந்தியா என் பார்வையில் இந்தாண்டு ......

கண்களில் கண்ணீருடன் தமிழ்.
அப்பா...நீங்க உண்மையிலேயே ஜெயிச்சுடீங்க. You made it.

- பாலு.

எழுதியவர் : பாலு (30-Apr-21, 7:39 pm)
சேர்த்தது : balu
பார்வை : 104

மேலே