நான் தவித்த வேளை

நான் தவித்த வேளை
தென்காசி பட்டிணத்தில் பிறந்து வளர்ந்த சந்துருவும்,மாசியும் ஒரே தெருவில் அக்கம்பக்கத்து வீட்டில் வாழ்ந்து வந்தவர்கள். அவர்களின் பெற்றோர்களும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.குழந்தைகளாக இருந்த பொழுதில் ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிட்டுத் தூங்குவது வழக்கமாக நடப்பது. இருவரும் நடைவண்டியிலிருந்து மரக்குதிரை வரை விளையாட்டிலும் ஒன்றாக விளையாடி அண்ணன் தம்பியைப்போல் வளர்ந்தனர்

சேர்ந்தே பள்ளிக்குச் செல்வதும் விடுமுறை நாட்களில் பான்போலியில் உள்ள திருமலை கோவிலுக்குச் செல்வதும் படி ஏறும் பொழுது போட்டிபோட்டுக்கொண்டு மலை மேல் ஒருவரை ஒருவர் சளைக்காமல் ஓடி கோவிலில் சந்தித்து இருவரும் முருகனை வழிபட்டு,பின் இறங்கும் வேளையில் மீண்டும் ஒரு போட்டி யார் யாரை முந்துவது என படிகளில் இறங்கி வீடு வந்தவுடன் இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டி தழுவிக்கொள்வர்.
அவர்களுக்கு ஒரு பிடித்தமான பொழுது போக்கு, அவர்கள்
இரண்டுவரங்களுக்கு ஒரு முறை இலஞ்சிக் குமாரனை காண குடும்பத்துடன் செல்லுவது.காலையிலேயே ஒரு வீட்டில் இருந்து கல் தோசையும் அடுத்தவன் வீட்டில் அதற்கு வேண்டிய கெட்டி சட்டினியும்,மிளகாய்பொடியை எண்ணையில் குழைத்து வேண்டியஅளவில் டப்பாவில் வைத்து கொண்டு,சூடான காப்பியை பிளாஸ்கில் எடுத்து கொண்டு வருவதும் நடக்கும். இரட்டை மாட்டு வண்டியில் வயல் வெளியை பார்த்து கொண்டு செல்வது ஒரு சுவையான பயணம்.இலஞ்சி குமரனுக்கு செல்லும் பாதையில் உள்ள சிறிய ஓடையில் தண்ணீரில் கால்களை வைத்து நனைத்துக் கொண்டே ,காலைப் பசிக்குத் தோசைமேல் சிறிது நீரை தெளித்து பின் பொடியுடன் சாப்பிடுகையில் தங்களையே மறப்பர்.இவ்வாறு இரு குடும்பங்களும் இணைந்து தங்கள் வாழ்க்கையை நல்ல படியாக நடத்திவந்தனர்.காலம் உருண்டோடிட இருவரும் உயர் பள்ளி படிப்பை முடித்து,
பின் மதுரையில் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்தனர். கல்லூரியில் சந்துரு பொறியியலையும் மாசி தொழில் நுட்ப கல்வியையும் தேர்தெடுத்து படிக்க சென்றனர். பெற்றோர்கள் அவர்கள் சென்றதும் எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும் நீங்கள் எப்பொழுது வருவீர்கள்,வீடே நீங்கள் இல்லாமல் வெறுமையாக உள்ளது என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவர். பதிலுக்கு அவர்களும் நாங்களும் விடுமுறைக்கு வந்து விடுகிறோம் என எழுதி அந்த அன்புகொண்ட மனங்களை ஆசுவாசப்படுத்துவார்கள். கல்லூரி விடுமுறைக்கு வந்தவுடன் நேரம் போவது தெரியாமல் இருவரும் குற்றாலத்தில் மெயின் அருவியில் குளித்து கோவிலுக்குள் சென்று குற்றாலநாதரை வழிபடுவதும்,சிலநாட்களில் ஐந்தருவியில் குளித்து நடக்கும் வழியில் திறந்த கடையில் செய்யும் மசால் வடையை ருசிப்பதும், அம்மாவின் கோபத்திற்கு ஆளாவதும் ஒரு வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சி. வீட்டில் கால் வைத்ததும் அம்மாவின் குரல் உயரும், சில நிமிடங்கள் இருவரும் மௌனமாக இருப்பர், அம்மாவே அவர்களை அழைத்து உங்கள் நன்மைக்காக தானே நான் கூறினேன். எந்த எண்ணையில் செய்ததோ, சுத்தமாக இருக்காதே நாளைக்கு உடம்புக்கு சுகக் குறைவு வரக்கூடாதே என அடுக்க, மாசி உடனே அம்மா நாம செய்கிற வடையில் அந்த சுவை வருவதில்லை என வாய்மொழிய சந்துரு அவனுடன் சேர்த்து "உம்" கொட்ட அம்மா நீங்கள் திருந்தவே மாட்டீர்கள் என ஒரு பொய் கோபத்துடன் சமையல் அறைக்குச் செல்வாள் .
நான்கு ஆண்டுகள் ஓடி விட்டது.
இருவரும் படிப்பை முடித்துவிட்டு தென்காசிக்கு வந்தபொழுது அவர்களின் பெற்றோர்கள் இனி வேலைக்கு செல்வதற்கு முன் தங்களுடன் சில மாதங்கள் இருக்க வேண்டும் என கூற,மாசியும் சந்துருவும் அதற்கு சம்மதித்து தென்காசியில் தங்கி மீண்டும் தங்கள் குழந்தைக்கால நினைவுகளை மீண்டும் உயிர்பெற செய்தனர். அவர்கள் விளையாடி களித்த இடங்களெல்லாம் இப்பொழுது வீடுகளாகவும் உணவு விடுதிகளாகவும் துணி கடைகளாகவும் மாறி கண்களுக்கு விருந்தாகி புதிய தென்காசியையே படைத்திருந்தது.

சில மாதங்கள் சென்றபின் அவர்களின் கல்லூரி நண்பன் எழுதிய கடிதம் அவர்களை சென்னைக்கு அழைத்துவந்தது.
அவர்களுக்கு சிங்கப்பூரில் அவனுடைய மாமாவின் கம்பெனியில் வேலைக்கு அமரும் வாய்ப்பு கிடைத்தது. சிங்கப்பூரில் வேலை கிடைத்ததும் இருவரின் மனதிலும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகியது. சென்னையில் இருந்து அவர்கள் பயணம் செய்ய வேண்டிய நல்ல நாளை தெரிந்துகொண்டு அதற்கான விதி முறைகளை அனுசரித்து பயண சீட்டையும் வாங்கி பின் தங்கள் பெற்றோர்களுக்கு நேரில் சென்று அறிவித்தனர்.
பெற்றோர்கள் மகிழ்வுடன் அவர்களை ஆசிர்வதித்தாலும் அடுத்தமுறை மகனைக் காணுவது சில வருடங்களாகும் என அறிந்த பொழுது,மனதில் ஒரு சிறு துயரம் கண்களில் கண்ணீராக வெளிப்பட்டது. தென்காசியில் அன்று மாலை தெற்கிலிருந்து காற்று வீச மிதமான குளிரை அதனுடன் கொண்டு வந்தது. கேரளாவில் மழை பெய்ய ஆரம்பித்ததின் அறிகுறி இது என்பதை சிறு வயதில் இருந்து சந்துருவும் மாசியும் அறிவர் .
சிலு சிலு என்று அடித்த காற்றில் மாடியில் கயிற்று கட்டிலில் உட்கார்ந்திருந்த சந்துரு அப்படியே உறங்கி விட்டான்.
பயண நாளும் வந்தது உறவுகளுடன் பெற்றோர்கள் அவர்களை வழி அனுப்ப சென்னைக்கு வந்தனர்.விமான நிலையத்தில் எல்லோருடனும் பேசி கொண்டிருந்த சந்துருவும் மாசியும் சில நேரங்களில் கண் கலங்கி பேச முடியாமல் விக்கித்து போன தருணங்களும் உண்டு. அப்பொழுது இருவரின் பெற்றோர்களும் அவர்களை தட்டி கொடுத்து இரண்டு வருடங்கள் சீக்கிரம் ஓடி விடும்,கவலை வேண்டாம் என தேற்றியது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. ஒலி பெருக்கியில் அவர்களது விமான எண்ணை அறிவித்ததும் எல்லோரிடமும் கைகளை குலுக்கி விடைபெற்று வரிசையில் சென்று நின்றனர். புதிய வேலை புதிய இடம் விமான பயணம் புதிய மனிதர்கள் என பல எண்ணங்கள் மனதில் ஒரு பயத்தை உண்டு பண்ணியது. அவ்வெண்ணங்களில் குழம்பி தங்கள் உறவுகளின் கை அசைத்தலை கண்டு இயந்திரமாக தங்கள் கைகளையும் அசைத்தனர். விமானத்தில் ஏறி இருக்கையில்
அமர்ந்ததும் மனதில் ஒரு தனிமை,ஒரு வெறுமை நாம் செய்வது சரியா என்ற கேள்விகள் யாவும் எழுந்தது.
அதில் இருந்து மீள்வதற்குள் விமானம் வான் நோக்கி தன் பயணத்தை தொடங்கி இருந்தது.
சில மணி நேர பயணத்தில் விமானத்தில் உணவும் பருகுவதற்கு பானங்களும் வர அவற்றில் சிலவற்றை மற்றவர்களைப் பார்த்து தானும் வாங்கி உட்கொண்டனர்.
விமானம் பயணத்தை முடித்து கீழ் இறங்கியது. சிங்கப்பூர் விமான நிலையத்தைக் கண்டு அதன் நேர்த்தியையும் அழகையும் ரசித்து வியந்து உள்ளே சென்றனர். உள்ளே சென்றதும் தான் சிறு வயதில் படித்த சொர்கபுரியோ இது என மலைத்து நின்றனர்.
கண்கள் காண்பதெல்லாம் புதுமையாகவும் கனவுலகமோ என்ற பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.
இவ்வாறு முழ்கி இருந்தவர்களை எழுப்பியது ஒலிபேசியில் தமிழ் மொழியில் அறிவிப்பு ஒன்று. அவர்களின் பெயரை அழைத்து அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பவரின் பெயரையும் அவர் நிற்கும் இடத்தையும் அறிவித்தது.
சந்துருவும் மாசியும் அவ்விடத்திற்கு விரைந்திட அங்கு வந்தவர் இவர்களை அடையாளம் கண்டு தமிழில் பேசி தனது வணக்கத்தை தெரிவித்து பயணம் நன்றாக இருந்ததா என வினவி, தான் அவர்கள் வேலைக்கு சேரும் அலுவலகத்தின் பிரதிநிதி என்றும் அவர்களை கூட்டிச் செல்ல வந்திருப்பதாகவும் தெரிவித்தார். இருவரும் அவர் தமிழ் மொழியில் பேசியதைக் கேட்டதும், அதுவரை அவர்களை வாட்டியத் தனிமை உணர்வுகள் விடை பெற்று செல்வதை உணர்ந்தனர்.கலகலப்புடன், வந்தவர் கையை பற்றி தங்களின் வணக்கத்தை அவருக்கு தெரிவித்து அவருடன் நடந்தனர். முப்பது நிமிடங்கள் சொகுசு வண்டியில் பயணம்,வழி நெடுக காணும் காட்சிகள் யாவும் ஒரு மாய உலகத்தை கண் முன் நிறுத்தியது போன்ற உணர்வுகள்.
இப்படியும் ஒரு நகரமா என்னும் வியப்பு. அந்த மயக்கம் கலையும் முன்னாலேயே ஒரு அடுக்கு மாளிகையின் முன் சொகுசு வண்டி நின்றது. வந்தவர் தான் வரதராஜன் என்றும் ராஜ் என அழைக்கலாம் என்றும் கூறினார்.
அவர்களிடம் தான் இந்தக் கட்டிடத்தில் நாற்பதாவது மடியில் இருப்பதாகவும் அவர்கள் இருவரும் நாற்பத்தொன்றாவது மாடியில் தங்க வசதிகள் செய்ய பட்டிருக்கின்றன எனவும் கூறி அவர்களது அறையின் சாவியை கொடுத்தார் . தங்கள் நன்றியை தெரிவித்து விட்டு இருவரும் மின் தூக்கியை நோக்கி நடந்தனர். மின் தூக்கி நாற்பத்தியொன்றாவது மாடியை மிக வேகமாக அடைந்தது.
வெளியே வந்து சிறிய சன்னலில் இருந்து விளக்குகளால் அலங்கரிக்க பட்ட சிங்கப்பூரை சிறிது ரசித்தோம், பின்னர் எங்கள் சாவியை கொண்டு அந்த வீட்டின் கதவை திறக்க அங்கு நாங்கள் கண்ட முதல் அறையின் அமைப்பை கண்டு வியந்தோம். மாசி சிறு குழந்தையை போல் துள்ளிக் குதித்து என்னை பார்த்து ஆச்சரியம் கலந்த ஒரு சிரிப்புடன் கட்டிக்கொண்டான்.
நானும் அந்த அமைப்பின் அழகில் கிரங்கினேன். பின்னர் சமையல் அறை, பாத்ரூம் முதலியவை எங்கள் கருத்தை மேலும் கவர்ந்தது.
மெல்ல படுக்கை அறையை திறந்தோம் எவ்வளவு அருமையாக உள்ளது என வியந்து, கொண்டுவந்த பெட்டியைக் கீழே வைத்து, பாத்ரூமில் சென்று முகம் கழுவி துவாலினால் துடைத்து படுக்கையில் உட்கார்ந்தோம்.
பெட்டியில் உள்ள துணிகளை எடுத்து அங்குள்ள பீரோவில் வைக்க அதன் கதவை திறந்த மாசி அலறினான். அங்கு நானும் அவனும் கண்ட காட்சி எங்களை உலுக்கியது.
அங்கு ஒரு பெண் கத்தியினால் குத்தப்பட்டு ரத்தம் தோய்ந்த நிலையில் . மாசியும் நானும் வெலவெலத்து போய் உரைத்து நிற்க எங்கள் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. அதிகாலையில் யார் எனக் குழம்பினாலும் இதை தெரிவிக்கலாம் எனக் கதவை திறக்க அங்கு சிங்கப்பூர் போலீஸ் எனக் கூறியபடி நால்வர் தங்கள் போட்டோ பதித்த அடையாள அட்டைகளை காட்டி உள்ளே நுழைந்தனர். எங்கள் பெயரையும் அடையாள ஆதாரத்தையும் கேட்க நாங்கள் சிங்கப்பூரில் இறங்கியதையும் சில நிமிடங்களுக்கு முன் தான் இந்த வீட்டில் நுழைந்ததையும் கூறி, அவர்களிடம் எங்கள் ஆதாரமாக பாஸ்போர்ட் ,விமான பயண சீட்டு, எங்களுக்கு வந்த அலுவலக கடிதம் ஆகியவற்றைக் காட்டினோம்.
நாங்கள் பேசும் நேரத்தில், மற்ற போலீஸ் காரர் எதோ
இவரிடம் கூற, அவர் எங்களை விட்டு மிக விரைவாக படுக்கை அறைக்கு சென்றார். சில நிமிடங்களில் அவர் வெளியே வந்து தனது கைப் பேசியில் ஏதோ கூற, நிசப்த இரவை ஒலிசயரன்கள் கொண்ட வாகனங்கள் கலைக்க,
என்ன நடக்கிறது என அறியாத திகைப்பில் நானும் மாசியும் ஒரு மூலையில் நின்றோம். இரவின் அமைதியை குலைத்துக் கொண்டு சயரனுடன் இரண்டு வாகனங்கள் நாங்கள் தங்கியிருந்த கட்டிதத்தின் முன் வந்து நின்றிட
அந்த கைப்பேசியில் பேசிய போலீஸ் எங்களை உடனே அவரை தொடரச் சொன்னான். என்ன நடக்கிறது இங்கு என்பதை அறிய அவரிடம் பேச்சு கொடுக்க முற்பட்ட எங்களை கை செய்கையில் அடக்கி, வாகனங்களில் ஏறிட கூறினான்.
இவை யாவையும் மரியாதையுடன் செய்தான். மிரட்டவோ கத்தவோ இல்லை.
ஏறியவுடன் இன்னும் ஒரு வாகனம் விளக்குகளுடன் ஒலியையும் கொண்டு அங்கு வந்து நின்றது. அதில் வந்து இறங்கியவரை பார்த்ததும் போலீஸ் அவருக்கு வணக்கம் செலுத்த, அவர் எங்களிடம் தமிழில் உங்களை நாங்கள் விசாரணைக்கு கூட்டிச் செல்கிறோம் என மொழிந்து வாகனங்களை செய்கையினால் போக சொன்னார். போலீஸ் காரில் பயணம் செய்யும் பொழுதும், மனமெல்லாம் ஒரு நிலை இல்லாமல் என்ன ஆகுமோ என்ற பயத்தில் மூழ்கி இருந்த போதும், எனக்கு அந்த அதிகாலையில் நகரத்தின் அழகை ரசிக்கமுடியாமல் இருக்க முடியவில்லை. விளக்குகள் வானளாவிய கட்டிடங்களை அலங்கரித்து பலவித வண்ணங்களில் அந்த கட்டிடங்கள் ஜொலித்துக்கொண்டிருந்தன. சில நிமிடங்களில் எங்கள் கார் ஒரு பெரிய வளைவு பொருத்தப்பட்ட கட்டிடத்தில் நுழைந்து நின்றது.
ஒரு போலீஸ் நபர் எங்கள் காரில் உள்ளவரிடம் பேசினார் பின்னர் அந்த கட்டிடத்தின் உள்ளே சென்று சில நிமிடங்களில் திரும்பினார். எங்களை இறங்கச் சொல்லி நடத்தி அந்த கட்டிடத்தின் உள்ளே அழைத்து சென்றார். அங்கு மிக பிரகாசமாக பெரிய விளக்குகளுடன் இருந்த ஒரு அறையில் எங்களை அமர வைத்தார்.
கண்முடி திறப்பதற்குள் ஒரு அதிகாரி எங்களிடம் விசாரிக்க வந்தார்.
அவர் தமிழில் எங்களை பற்றிய விவரங்களைக் கேட்டு குறிப்பெடுத்து கொண்டார். அவரைத் தொடர்ந்து மேலும் சிலர் வந்து நடந்தவைகளைக் கேட்டனர்.
அதில் கடைசியாக வந்தவர் எங்களை மற்றொரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கு நிற்கச்சொல்லி அவர் அறையின் கதவை மூடினார்.
சில வினாடியில் தண்ணீர் எங்கோ வருவது போல சத்தம் வந்தது. எங்கே என்று நான் பார்வையை திருப்ப ஒரு கண்ணாடி துளையில் இருந்து தண்ணீர் என்மேல் பீச்சி அடிக்கப்பட்டது. நான் இதை சற்றும் எதிர் பார்க்காததால் திடுக்கிட்டு கைகளால் என் முகத்தை மூட முயன்றேன். சில நிமிடங்களில் போதும் போதும் என நான் உரக்கக் கத்தினேன்.
அப்பொழுது ஒரு பெண்ணின் சிரிப்பும் பின்னர் சிலரின் கைதட்டலும் கேட்டது கூடவே எக்காள குரலில் என்ன அண்ணா மீண்டும் கனவா இப்போது எங்கே சிங்கப்பூரா அல்லது வேறு ஏதாவது நாடா? இந்த சிறிய துளித் தண்ணீர் முகத்தில் பட்டதற்கு எவ்வளவு பெரிய கூப்பாடு
உன்னை எப்பிடியாவது உடனே வெளியூருக்கு அனுப்பவேண்டும் இல்லையென்றால் தினமும் காலையில் இந்த நிலை தான் என சிரித்துக் கொண்டே மற்றவருடன் வெளியே சென்றாள் என் செல்ல தங்கை. இவ்வளவும் கனவா எப்படி நிஜமாக நிகழ்வது போல் இருந்தது. காலை கனவு பலிக்கும் எனக் கூறிக்கொண்டே என் பற்பசையை தேடி எடுத்து வெளியே உள்ள தண்ணீர் தொட்டிக்கு விரைந்தேன்.
ஏங்க அதிகாலை கனவு பலிக்கும் தானே !

எழுதியவர் : கே என் ராம் (30-Apr-21, 12:16 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 176

மேலே