லொக்டவுணில் ஒரு கலியாணம் - பாகம் 02

"எல்லாம் உன்ர கலியாண விசயம் தான்..." - தாய் பவளம்

"அவர்... தரகர் ஒன்றும் சொல்லேல்லயோ... காலமும் நெருங்கிட்டு இருக்கு... கொரோனா வேற கூடுது.... சீக்கிரமே பார்க்க சொல்லுங்கோம்மா" - ஆதி

"ஏன் அண்ணா அலையிறாய்... எல்லாம் நடக்கும் போது நடக்கும்..." - கவியழில்

"ஓமடி... நீ சொல்லுவாய்... இப்போ இல்லாட்டிக்கு நாற்பது வயதுக்கு பிறகு பொம்பளை பார்த்து கட்டுறதுக்கிடையில் முடியெல்லாம் வெளிறி விழுந்திடும்... " - ஆதி

"இப்போ மட்டும் என்னவாம் வாழுது... மீசையும் நரைச்சிட்டுது..." - கவியழில் அவனை வம்புக்கு இழுத்தாள்

"அம்மா... பார்ரனை... அடிச்சுப் போடுவன் பிறகு..." - ஆதி

"அவள் சும்மா பம்பலுக்கு டா... அவளுக்கு தானே முதல்ல மாப்பிள்ளை பார்த்திட்டு இருந்தோம். இப்போ திடீரென்று உனக்கு பார்க்கிற பொறாமை போல..." - தாய் நக்கலாய் சொல்ல

"இவளுக்கு இனி மாப்பிள்ளை பார்க்காதிங்க... முப்பதைஞ்சு, நாற்பது வயசு மட்டும் இருக்கட்டும்... அப்போ தெரியும்..." - ஆதி

"ஹெல்லோ அண்ணா... சாஸ்தியார் சொன்னதுக்காக உனக்கு விட்டுக் கொடுத்திருக்கிறன். அடுத்த வருஷம் எனக்கு கலியாணம் நடக்கவில்லை என்று வையி... உன்னை மாதிரி எல்லாம் பார்த்திட்டு இருக்கமாட்டன். யாரையாச்சும் இழுத்திட்டு ஓடிடுவன்... வேணும் என்றால் இருந்து பாரு..." - கவி

"ஆமாமாம்... நீ செய்தாலும் செய்வாய்..." - தாய் பவளம்


"அண்ணா... உனக்கு இன்னும் பொண்ணு கிடைக்கலை என்று தானே பிரச்சனை.... நீ ஏன் இந்த சீனாக்காரிகளை பார்த்து கட்டிக்க கூடாது..." - கவி மீண்டும் வம்பிழுக்க

"கடைசியில் அது தான் நடக்கும் போல... நல்ல வெள்ளையும் சொள்ளையுமாக தான் இருக்கிறாளவை..." - ஆதியும் பதிலுக்கு கூறினான்.

"ஓம் ண்ணா... எங்கட வீட்டிலயே அட்டை, நத்தை, மட்டத்தேள், கரப்பான், பூரான் என்று எல்லாம் இருக்கு... காய்கறி செலவும் மிச்சம் தானே..." - கவி

"உவாக்க்... நினைச்சாலே அருவருக்குது...." - தாய் பவளம்

"அண்ணோய்... அண்ணோய்...." வீதியில் இருந்து குரல் வந்தது.

"அப்பன்... கொஞ்சம் எட்டி பாரப்பன்.... படலைக்கே யாரோ கூப்பிடுறினம் போல..." - ஆதியிடம் தாய் கூறினாள்

அதற்கிடையில் வெளியில் எட்டிப் பார்த்த கவியழில் "ஆ... உள்ளுக்க வாங்கோ அங்கிள்..." என வரவேற்றுக் கொண்டு "அம்மா... தரகர் அங்கிள் வாறார்" அம்மாவை பார்த்து கூறினாள்.

"பிள்ளை... உந்த நாயை கொஞ்சம்ம்ம்...." தரகர்

"கட்டி தான் நிற்குது அங்கிள்... நீங்கள் பயப்படாம வாங்கோ" - கவி

"ஆதிட விசயமா தான் இருக்கும் என்று நினைக்கிறன் பா... இண்டைக்கு ஒரு முடிவெடுத்திடோனும்..." நடராசாவை பார்த்து ரகசியமாக கூறினார் பவளம்.

"என்ன நடா ண்ணே... எப்பிடி இருக்கிறியள்..." - தரகர்

"நாங்கள் நல்லா தான் இருக்கிறோம்... உன்னை தான் பிடிக்க முடியுதில்லை... போன் பண்ணினாலும் ஆன்ஸர் இல்லை..." - நடராசா

"அண்ணே அதை ஏன் கேட்கிறீங்கள்... கோதாரி விழுந்த ஒன்லை கிளாஸ் என்று பிள்ளைகள் ஆள் மாறி ஆள் போனை எடுத்திட்டு போயிடுதுகள்... அந்த நேரத்தில் யாராச்சும் கோல் பண்ணினால் அதையும் எனக்கு சொல்லுறதில்லை.... நான் படுகிற துன்பம் இருக்கே ண்ணே..." - தரகர் லிங்கம்

"ஆ... தம்பி... கோவிக்காம கையை காலை கழுவிப்போட்டு உள்ளவாடாப்பன்... பக்கத்தில சவர்க்காரமும் இருக்கு..." - நடராசா

"ஓமோம் அண்ணே... இதில என்ன இருக்கு.... நாம தான் பாதுகாப்பா இருக்கோனும்..." - தரகர்

"ஓமோம்.... இப்போ ஊருக்குள்ளேயே கொரோனா வரத் தொடங்கிட்டுது. வலு அவதானமாக தான் இருக்கோனும்..." நடராசா கூறினார்

"ஓமண்ணே.... உதால இப்ப கலியாணம் எல்லாம் காதும் காதும் வைச்ச மாதிரியெல்லே செய்து முடிச்சிடுறினம் என..." - தரகர்


"ஓ... செலவும் மிச்சம் தானே... மாப்பிள்ளை வீடு, பொம்பளை வீடு, ஐயர். இது போதும் தானே.... எதுக்கு வீண் செலவெல்லாம் என...." - நடராசா


"அது சரி... நம்ம ஆதிட விசயம் எந்த மட்டில நிற்குது தம்பி..." - பவளம்

"அதுபற்றி கதைச்சிட்டு போக தான் அக்கா வந்தனான். இரண்டு, மூன்று வரன் வந்திருக்கு. இனி நீங்கள் தான் பார்த்து சொல்லோனும்..." - தரகர்

அனைவரது முகத்திலும் சந்தோசமும் ஆர்வமும் ஒருசேர குடிகொண்டது.

-கலியாண பேச்சு தொடரும்

எழுதியவர் : பெழ்லி (27-May-21, 1:26 pm)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 115

மேலே