தலைப்பு நல்லதொரு குடும்பம்
தலைப்பு: "நல்லதொரு குடும்பம்"
காலை எழுந்தது முதல் ..பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி கணவரை அலுவலகம்
அனுப்பிவிட்டு அப்பாடா என்று காபி கப்பை கையில் எடுத்துக்கொண்டு
தொலைக்காட்சியில் பழைய பாடல்களை கேட்டுக்கொண்டே அன்றைய நாளிதழை
புரட்டிக்கொண்டிருந்தாள் கவிதா...
வீட்டில் இருவரும் வேலைக்கு போனால்தான் குடும்பத்தை சிறப்பாக கடன்
வாங்காமல் நடத்தமுடியும் ...இதோ தீபாவளி வந்துவிட்டது ...துணி எடுக்கவே
கணிசமான தொகை போய்விடும் அப்புறம் பட்டாசு பட்சணம் என்று சேர்த்து வைத்த
சேமிப்பில் கை வைக்க வேண்டும் என்று கணவர் சிவா புலம்புவதை காதில்
வாங்கிக்கொண்டே ...எதுவும் தெரியாதவள் போல் கவிதா இரவு நேர உணவை
முடித்தாள்... இரவு கணவன் சொன்னதை நினைத்துப் பார்த்தாள் ...
இருவரும் வேலைக்கு சென்றால் தான் வாழ்க்கையை கடன் வாங்காமல்
ஓட்டமுடியும் என்று சொன்னாரே ...எனக்கு வீட்டு வேலையை தவிர எதுவும்
தெரியாதே ...மற்றபடி தையல் இப்போதுதான்
கற்றுக்கொள்கிறேன்....
தையல் கற்றுக்கொள்ளும் விஷயம் கணவருக்கு தெரியாது... பிள்ளைகளும்
கணவரும் சென்றபிறகு...பக்கத்து தெருவில் தோழி ஒருத்தி தையல்
கற்றுக்கொடுக்கிறாள் ...கணவரிடம் சொன்னால் திட்டுவாரோ என்ற பயத்தில்
சொல்லவில்லை..
தையலை நன்றாக கற்றுக்கொண்டு... சம்பாதிக்கவேண்டும்
...இப்போதுதான் ..பெண்களுக்கு பிளவுஸ் தைக்க ..அதுக்கு டிசைன் வைக்கவே
அதிகம் தேவைப்படுகிறதே என்று நினைத்துக் கொண்டு ..எழுந்து வேலைகளை
முடித்துவிட்டு, குளித்து உடை மாற்றி சாப்பிட்டுவிட்டு... கிளம்பும்
நேரத்தில் காலிங்பெல் அடிக்க...கதவை திறந்தவளுக்கு கொஞ்சம் ஷாக்...
கணவன் சிவா நிற்பதை பார்த்தவள் ...கொஞ்சம் தடுமாறி, "என்னங்க...
இப்போ வந்து இருக்கீங்க? ...உடம்புக்கு ஏதும்", என்று கழுத்தில் கை
வைத்து காய்ச்சலா என்று பார்க்கப் போனவளை..
தன் பக்கம் இழுத்து.... "என்ன மேடம்.. எங்கோயோ கிளம்புவது போல்
இருக்கிறது... பக்கத்து வீட்டு மாமியோட வெளில எதுவும் போறியா... மாமி
எங்காத்துக்காரர் வந்துருக்காரு எங்கேயும் வரமுடியாதுன்னு சொல்லிட்டு
வா",என்ற கணவனை, "கையிலதான் போன் இருக்குள்ள.. இன்னைக்கி லீவு..
வீட்டுக்குதான் வந்துகிட்டு இருக்கேனு சொல்லியிருந்தா என்ன?"
"...அது ஒரு சர்ப்ரைசா இருக்குமேன்னுதான் ... தீபாவளிக்கு
ட்ரெஸ் எடுக்க போலாமேன்னு ...இன்னைக்கி தோனுச்சி அதான் அப்படியே
திரும்பிட்டேன்"
"..நேத்து ராத்திரி ஏதோ பொலம்புனீங்க... ரெண்டு பேரும் வேலைக்கு
போனாதான் அப்படி இருக்க முடியும் ...இப்படி இருக்க முடியும்னு"
". ஒங்கிட்ட பொலம்பாம வேற யார் கிட்ட போய் பொலம்பச்
சொல்ற... அது அப்பப்ப... வந்து போகும்.. அதுக்காக அதையே நெனச்சிக்கிட்டு
இருக்கறதா... அதெல்லாம் நான் கவனித்துக்கொள்கிறேன் ...என்னடி சொல்ற இப்போ
போலாமா..வேண்டாமா..."
"...பிள்ளைகள் வந்தவுடன் போலாமேங்க", என்ற மனைவியை பார்த்து
கண்ணடித்தான் சிவா...
"மேடம் போர தையல் கிளாஸ் எந்த அளவுக்கு இருக்கு?"
கொஞ்சம் பயம் கலந்த முகம்போல் வைத்துக்கொண்டு...
"உ...உங்களுக்கு எப்படி"
"ரொம்பதான் பயந்தவடி நீ...", என்று அவள் தையலுக்கு
எடுத்துச்செல்லும் கைப்பையை காட்டினான்... "இதை எப்பவோ நான்
பார்த்துட்டேன்", என்று சிவா சொல்ல...
"இப்போதாங்க கொஞ்ச நாளா போறேன்", என்றாள்...
"சரி ஒனக்கு ஒரு தையல் மிஷின் வாங்கி தரேன் ... அதுக்கு நீ ஒன்னு
கத்துக்கணும்.."
'என்ன' என்பது போல் கணவனை பார்த்தவள்.
"நிறைய துணி வாங்கி துணிப்பை.. தயாரிக்கலாம் ...அன்றாடம் கடையில்
கிடைக்கும் பிளாஸ்டிக் பையை நிராகரித்து... தினமும் முட்டை வாங்கினால்கூட
ஒரு கருப்பு கலர்ல ஒரு கவர் தராங்க.. அது எதுல செய்றாங்க தெரியுமா?
தொழிற்சாலையோட கழிவுகளில் இருந்து"
"அச்சச்சோ..", என்று முகம் சுளித்தாள்...
"சரிங்க இன்னைக்கே போய் துணிப்பை தைக்க கத்துக்கிறேன்",
என்றாள் கவிதா...
"ஹலோ மேடம் இன்னைக்கி வேண்டாம் ..நாளைக்கு போங்க தையல் கிளாஸ்க்கு",
என்ற கணவனை முறைத்துக்கொண்டே சிரித்தும் கொண்டாள்...
கொஞ்சம் கொஞ்சமாக கவர் பையை நிராகரித்து துணிப் பைக்கு மாற்றம்
கொண்டு வரவேண்டும் ...இதை நாமே முதலில் ஆரம்பிச்சி இரண்டு பைக்கு ஒரு பை
இலவசம்ன்னு கொடுப்போம் முதலில்.. இதற்கான லாபமெல்லாம் பிறகு
பார்த்துக்கலாம்.. ஏதோ நம்மால் முடிந்த சிறு முயற்சி இது.. சரியா", என
கணவனிடம் கண்ணடித்து சொன்னாள் கவிதா...