லொக்டவுணில் ஒரு கலியாணம் - பகுதி 03
![](https://eluthu.com/images/loading.gif)
"அம்மா.... அண்ணாவோட முகத்தை பாருங்கோவன்... ஆனந்த தாண்டவம் தெரியுது..." கவியழில் வம்பு இழுத்தாள்
"இப்ப நாங்களும் உங்களை பற்றி தான் கதைச்சுக்கொண்டு இருந்தனாங்கள்... என்ன இன்னும் ஒன்றையும் காணேல்ல. என்ன செய்யிறதென்று... சரி சரி... கொண்டு வந்த வரன்களை காட்டுங்கோ பார்ப்போம்...." - பவளம்
"என்னக்கா பண்ணுறது... நீங்கள் வேற அவசரம் என்றுட்டீங்கள். வீடு வீடா, ஊர் ஊரா அலைஞ்சு திரிஞ்சு தான் பிடிக்க வேண்டி இருந்தது என... பொருத்தமுமெல்லே இருக்கோனும். மற்றது.... கண்ட ஆக்களையும் சேர்க்கேலாதெல்லே... அதையும் பார்க்க தானே வேணும்..." - தரகர்
"உண்மை தான்... எங்களுக்கு இருக்கிற பயம் அடுத்த மாசத்துக்க செய்ய முடியாமல் போயிடுமோ என்று தான்... மகள்ட கலியாண வேலையை நிற்பாட்டிப்போட்டு தான் இவனுடைய வேலையை ஆரம்பிச்சது... அதுவே மனசுக்கு உறுத்தல் தான்... "
"அதெல்லாம் தலைகீழா நின்று சரி செய்து வைச்சிடுவேன் அக்கா... கவலைப்படாதீங்கோ... இப்போதைக்கு என்கிட்ட மூன்று வரங்கள் அமைஞ்சிருக்கு. அதில் ஒன்று நல்ல உச்ச பொருத்தம் இருக்கு. மற்ற இரண்டும் கொஞ்சம் பொருத்தம் குறைவு..." - தரகர்
"உச்ச பொருத்தம் இருக்கென்டால் அதையே பார்த்து முடிச்சுவிடுமேன்... பிறகென்ன..." - பவளம்
"பிள்ளை நல்ல வடிவு க்கா. உந்த சினிமா நடிகைகள் மாதிரி தான்... அடக்க ஒடுக்கம் எல்லாம் சொல்லத் தேவையில்லை. எல்லாவிதத்திலும் உங்க குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணு தான். ஆனால்..." - தலையை சொறிந்தபடி தரகர் கொஞ்சம் இழுத்தார்.
"அடேய் தம்பி... இது என்னுடைய மகனோட கலியாணம். எதையும் மறைக்காம சொல்லு... இல்லாட்டிக்கு என்ன நடக்கும் என்று தெரியும் தானே..." - நடராசா சற்று கடும் தொனியில் கூறினார்.
"ஐயய்யோ... நடா அண்ணே... உங்க வீட்டுக்கு அப்பிடி பண்ணுவேனா... உண்மை நிலவரத்தை சொல்லி கதைச்சிட்டு போக தான் வந்தனான்..."
"என்ன பிரச்சினை சொல்லுங்கோ... எங்கட ஆட்கள் இல்லையே அவையள்..." - பவளம்
"அதுவும் தான்... அடுத்தது கொஞ்சம் கஷ்டப்பட்ட குடும்பம் அக்கா. தம்பசிட்டி தாண்டி உள்ளுக்க போகனும். ஒரு சின்ன கிராமம். தோட்டம் தான் செய்யிறவை. பெருசா வருமானம் எல்லாம் இல்லை. ஒரே ஒரு மகள் தான். படிப்பும் பெரிசா இல்லை. ஓ.எல். கூட பெயில். பொடியல் இல்லாததால தாய் தகப்பனோட கூடமாட ஒத்தாசையா இருக்குது. அதுதான்..."
"உதெல்லாம் ஒரு விசயமே... இப்ப யார் சாதி பார்க்கிறாங்கள். எங்களுக்கு காணி, பூமி, நகை நட்டு, சீதனம் எதுவுமே வேண்டாம்... குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணா இருந்தா போதும்... முதல்ல பொண்ணை பார்ப்போம். பிடிச்சிருந்தால் மேற்கொண்டு கதைப்போம்... என்னப்பா நீங்கள் சொல்லுறீங்கள்..." - பவளம்
"உன்ர பேச்சுக்கு மறுபேச்சு இருக்கேப்பா... எனக்கு ஓகே தான். முடிவெடுக்க முதல் ஆதியையும் கொஞ்சம் கேட்டுக்கோ... அவனுக்குள்ளேயும் ஏதாவது கனவுகள், கற்பனைகள் இருக்கும்...." - நடராசா
"ஓமோம்... இந்த காலத்து பிள்ளைகள் ரொம்பவே முன்னேற்றம்... ஒருக்கா கேட்டு தெரிஞ்சுக்கிறது நல்லம் தான்..." - தரகர்
"அந்த வயசெல்லாம் தாண்டியாச்சு அங்கிள்... இப்போ பேப்பர் ல பொண்ணு என்று எழுதி இருந்தாலே சரி என்ற நிலை தான்... இல்லையா அண்ணா..." - நக்கலாய் சொன்னாள் கவி
ஆதியின் முகத்தில் கோபம் தெரிந்தாலும் காட்டிக்கொடுக்காமல் கவியின் தலையில் செல்லமாய் குட்டு ஒன்று குட்டி வைத்து மற்றவர்களுடன் சேர்ந்து புன்னகைத்தான்.
"நீங்கள் நல்ல போட்டோ ஒன்றை வாங்கிட்டு வாங்கோ.... போட்டோவை பார்ப்போம். பிடிச்சிருந்தால் நேர் ல பார்த்து சட்டுபுட்டுன்னு கதைச்சு பேசி முடிச்சு வைச்சிடுவோம்... அப்பிடி இல்லாட்டிக்கு மற்ற வரன்களை பற்றி கதைப்பம் என..." - தாய் பவளம்
"அப்ப சரி நடா ண்ணே... இப்பவே போய் போட்டோவை வாங்கிக்கொண்டு நாளைக்கு விடியவெல்லனவா வாறன் என..." - தரகர் புறப்பட்டார்.
கிராமப்புறம் என்பது உறுத்தலாக இருந்தாலும் வடிவான பிள்ளை என்று சொன்னதில் கொஞ்சம் மயங்கித்தான் போனான். போட்டோ வரட்டும் பார்த்துக்கலாம் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டான்.
இருந்தாலும் ஆதிக்கு பாதி கடல் தாண்டிய சந்தோசம். இந்த சந்தோசத்தை நண்பர்களுடன் பகிர்ந்து சந்தோசப்படோனும் என உள்ளுணர்வு சொல்லியது. மளமளவென வெளிக்கிட்டு தன்னுடைய நண்பர்களை சந்திக்க புறப்பட்டான்.
"என்ன தம்பி... வெளியே போறியோ..." - தாய்
"ஓமம்மா... உதில சுரேஸ் ட வீடு வரைக்கும் போயிட்டு வாறன் மா..."
"சரி... பார்த்து போயிட்டு வாப்பன்... மாஸ்க் கொண்டு போறாய் தானே... மாஸ்க்கை போட்டுக்கோ... கழட்டாதே..." - தாய்
"மாஸ்க் போட்டிருக்கிறன் மா... கன நேரம் நிற்கமாட்டன். உடனே வந்திடுவன்..." - ஆதி
-கலியாண பேச்சு தொடரும்
#லொக்டவுணில்_ஒரு_கலியாணம்