ஊஞ்சல் மூர்த்தி

தனக்குத்தானே பேசிக்கொள்ளும்
ஊஞ்சல் மூர்த்தியை நாம் பார்க்க செல்லலாம் என்று ரங்கராஜ் இன்று என்னை கூட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு போனான்.

இந்த விஷயத்தில் எனக்கு நிறைய சங்கடம் இருக்கிறது. அவரை எனக்கு முன்பின் தெரியாதே. தனக்குத்தானே பேசும் ஒரு நபரின் அந்தரங்கத்தில் நாம் இப்போது நுழைவானேன் என்று மெல்ல போவதற்கு தயங்கினேன்.

நீ நினைப்பது போல் அவர் அப்படி ஒன்றும் கிடையாது. அவர் பேசும் போது நாம் காது கொடுத்து கேட்டால் விஷயம் முடிந்து விடுமே என்றான்.

ஆனாலும்.... என்று இழுத்தேன்.

இதோபார்... நாட்டில் எத்தனை பேர் எத்தனை விதமாக எழுதுகிறார்கள் அதையெல்லாம் நாம் மெய்யுருக படிக்கவில்லையா... அதை விட இது மேல் என்று சொல்லவும் நான் செல்ல வேண்டியதாயிற்று.

ஊஞ்சலில் ஆடிக்கொண்டே அவர் ஏதேனும் பேசுவாரா என்று கேட்டேன். அப்படி இல்லையாம். அவர் பேசினால் நாம்தான் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே கேட்க வேண்டுமாம். ரொம்ப நாள் கழித்து ஊஞ்சலில் ஆடும் வாய்ப்பாவது கிடைக்கிறதே என்று நினைத்தேன்

நாங்கள் போனபோது வெளுத்த தாடியோடு திண்ணையில் அவர் பேப்பர் படித்து கொண்டிருந்தார்.

அங்கிருந்த சற்றே நீளமான ஒரு பலகையை ஊஞ்சல் போல் தொங்க விட்டு நான்கு முனைகள் இரும்பு வளையத்திலும் ஒரு பழைய கயிறை கட்டி வைத்திருந்தனர்.

வா, ஆடலாம் அவராக பேசுவார் அதுவரை நாம் பொறுமையோடு இருக்க வேண்டும் என்று ரங்கராஜ் தாவி ஏறி எனக்கும் வழி விட்டு இடம் கொடுத்தான். நாங்கள் காலை உந்தி உந்தி ஆட ஆரம்பித்த முதல் நிமிடம் கழிந்து அவராக ஒன்றை சொன்னார்.

"ஒன்றை நம்புகிறவன் அதை நம்பாதவர்களுக்கு சிக்கல்களை உருவாக்குகிறான்.
ஒன்றை நம்பாதவன் அதை நம்புபவர்களுக்கு பயங்களையும் உருவாக்குகிறான்".

எப்படி இருக்கு என்பதுபோல் ரங்கராஜ் என்னை பார்த்தான். மீண்டும் உடனே ஊஞ்சல் மூர்த்தி பேப்பரில் அடுத்த பக்கத்தை பிரட்டிக்கொண்டே "சிக்கலும் பயமும் மனிதனிடமிருந்து மனிதனை பிரித்து வைக்கிறது. அவன் ஆவியில் படிந்திருக்கும் ஆதி விடுதலை உணர்வுகளை நிர்மூலம் செய்துவிட்டு எப்படி விசுவாசமிக்க அடிமையாக செயலாற்றுவது என்று நாளெல்லாம் சிந்திக்கிறான்"
என்று கூறினார்.

முன்னாடி சொன்னதுக்கு இதுவும் நல்லா இருக்கு இல்ல என்ற ரங்கராஜ் ஒரு தாளை எடுத்து வைத்துக்கொண்டு அவர் சொன்னதை சொல்வதை எல்லாம் எழுத ஆரம்பித்தான்.

"சிந்தனைதான் கொக்கரிக்கும் அவனது பண்பட்ட நடத்தை என்று முடிவு செய்யப்படுகிறது. மனிதன் தன் திட்டமிட்ட ஒழுக்கத்தின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த கவனமே
இன்றிருக்கும் எல்லா சீர்கேடுக்கும் தாய்."

எனக்கு என்னவோ போல் இருந்தது. ரங்கராஜிடம் இவரை நல்ல டாக்டரிடம் காட்டலாமே என்றேன்.

எதற்கு என்றான்... பின் இப்போது அவருக்கு என்ன... அவர் நன்றாக இருக்கிறார் அல்லவா என்றான்.

நான் அமைதியாக இருந்தேன்.

அதன் பிறகே அசாதாரண சூழல் ஒன்று அங்கே உருவாகியது.

ஊஞ்சல் மூர்த்தி ரங்கராஜிடம் இவன் யார் என்று என்னை சுட்டிக்காட்டி கேட்டார்.

இவனுக்கு ஸ்வரங்களை வடிகட்டி சொற்களை உருவாக்க தெரியும். நேற்றுதான் கரிய மேகத்திலிருந்து இறங்கி வந்தான் என கூறினான்.

மூர்த்தி பார்வையால் என்னை அலைக்கழிக்கவும் நான் சூழலில் ஒரு அமானுஷ்ய தன்மை ஈடு செய்வதை உணர்ந்தேன்.

நீருக்குள் காற்றை முக்கி வைக்கும் கவிதை ஒன்று பிரேதமாகி இருக்கிறது. அதை உன் ஸ்வரங்கள் மூலம் உயிர் கூட்ட முடியுமா? நான் ஸ்தம்பிக்கும்படி உன்னால் நடந்துகொள்ள முடியுமா என்று மூர்த்தி கேட்டார்.

ரங்கராஜ் இடைமறித்து அவன் வலது காலில் நட்ஷத்திர மரு உண்டு. அவனால் முடியும். நீங்கள் அவனை இன்னும் கூட வற்புறுத்தி கேளுங்கள் என்று உத்வேகம் கொடுத்தான்.

என் நிலைமை கடும் சிக்கலாகி வருவதை உணர்ந்தேன். நான் இங்கே வந்திருக்க கூடாது. என்ன ஆவலில் வந்தேன் என்பதை நான் யோசிக்கவும் முடியவில்லை.

மீண்டும் காலையில் இருந்து எனக்கு என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று யோசிக்க ஒரே குழப்பமாக இருந்தது. இன்று விடிந்து விட்டதா அல்லது கனவில் இருக்கிறேனா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

எனக்கு தாகமாக இருக்கறது. நான் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன்.

'மாக்கியவெல்லி நீர் கொண்டு வா' என்று ரங்கராஜ் கத்தினான்.

ஒரு பட்டையான அகலமான கத்தியின் மேற்பரப்பில் ஒரு குவளையில் நீர் நிரப்பி கொண்டு வந்தான் ஒரு சிறுவன். அவன் நெஞ்சில் ஓர் நாட்டின் வரைபடம் டாட்டூவாக வரையப்பட்டு இருந்தது. பார்க்க இத்தாலி போல் இருந்தது. அவன் கொண்டு வந்த குவளையில் நீரில் புகை இருந்தது.

ஊஞ்சல் மூர்த்தி சாம்பலில் இருந்து பிறக்கும் ஒரு உயிருக்கு எந்த திசையில் உணவு கிடைக்கும் என்று கேட்டுவிட்டு என்னையே பார்த்தார்.

எல்லா திசைகளிலும் என்றேன்.

நீரை பருகச்சொல் ரங்கராஜ் என்றார். ரங்கராஜ் என் வாயில் அந்த குவளையை சரித்தான்.
ஏதேதோ வாசனையும் நாற்றமும் என் நினைவை குழப்பியபடி அந்த நீர் உள்ளே இறங்கியது.

தாகம் முற்றாக தீர்ந்தது.

மாக்கியவெல்லி... இவர் என்ன எழுதுவார் என்று கேள். நீ அதை முன்பே படித்திருக்கிறாயா என்று சொல் என்றார் ஊஞ்சல் மூர்த்தி.

நான் என்ன எழுதி இருக்கிறேன்? ஒன்றும் இல்லை. மனதை அறுக்கும் வார்த்தைகளை விட்டு விலகி ஓடவே யத்தனிக்கிறேன்.

ஒரு மலருக்கு குருதி செலுத்துவது, அல்லது ஆக்சிஜன் கொடுப்பது போன்ற நுட்பமான செயல்தான் எழுதுவது என்பது.

ஆனால் நான் ஒரு கொலையாளி. குற்றங்கள் என்னை கருத்தில் கொள்ளாதபோதும் ஏதேதோ ஒரு மயக்கமூட்டும் மனதில் இருந்து அக்குற்றங்களை படி எடுத்து வரும் சந்தேகத்தின் தீவிரவாதி என்றேன்.

ரங்கராஜ் என்னை கீழே படுக்க சொன்னான். நான் மறுப்பேதும் சொல்லாமல் ஒரு பச்சை தென்னை மட்டை மேல் அவன் சொன்னதுபோல் படுத்து கொண்டேன்.

மாக்கியவெல்லி தன் ரப்பர் செருப்பால் என் நெஞ்சில் மிதித்து ஏறி நின்றான். அது அப்போது குளுமையாக இருந்தது. அவன் சிறிய பாதங்கள் எந்த நோவையும் எனக்கு தரவில்லை.

நீ என்ன பார்க்கிறாய் என்று அந்த மாக்கியவெல்லி முதன் முதலாக என்னிடம் கேட்டான்.

நீ தெரிகிறாய்.... உனக்கும் மேல் ஒரு ஆகாயம். அதில் துண்டாடிய சில மேகங்கள் ஊர்கின்றன.

அதற்கு பெயரிடுவோமா என்றான்.

முதல் மேகத்துக்கு நீயே சொல்ல வேண்டும் மாக்கியவெல்லி....

கலிகுலா என்றான்.

நான் யூதாஸ் என்றேன்.

அந்த சிறுவன் காலநகர்வு என்பது மேகத்தில் இப்போது தெரிகிறதா என்று கேட்க... ஆம் அதன் வடிவம் சிதைவடைந்து தாழ்ந்து குவிந்து மாறுகிறது. அதன் வர்ணங்கள் ஊதாவில் இருந்து ஆங்கிலேய நாட்டில் இருக்கும் ஒரு டிசம்பர் மாத பூவின் நிறத்தில் மாறி வருகிறது என்றேன்.

ஊஞ்சல் மூர்த்தி என்னை மீண்டும் அமர்த்தி வைக்க சொன்னார்.

நான் அமர்ந்தேன்.

ரங்கராஜ் ஒரு கோப்பை நிறைய க்ரீன் டீ கொண்டு வந்து குடிக்க கொடுத்தான்.

வா அறைக்குள் நாம் செல்வோம் என்றான்.

அந்த அறை என் அறைதான்.

கடைசியாக நான் கலைத்து போட்ட புத்தகம் அப்படியே இருந்தது. சாம்பல் நிற பூனைக்குட்டி வந்து போன அடையாளம் இருந்தது. என் பேனாவும் இருந்தது. சால்வடார் டாலியின் படமும் இருந்தது ஆகவே நான் இருப்பது எல்லாம் என் அறைதான் என்றால் ஊஞ்சல் மூர்த்தி சொன்னதெல்லாம் என்ன என்று புரியவில்லை.

ரங்கராஜ் உண்மையில் இங்கே என்ன நடக்கிறது. நீ உண்மையில் என் நண்பன் ரங்கராஜ்தானே? என் குழப்பம் நீடிக்கிறது என்றேன்.

ஊஞ்சல் மூர்த்தி என்னருகே வந்தார்.

நீ எங்கிருந்து வந்தாயோ அதை ஒரு நாவலாக்கும் முயற்சியில் நான் இருக்கிறேன். அதனால் நீ ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

நீ ஒரு கிழக்கத்திய நாட்டில் சாதாரண நகரமொன்றில் ஒரு வீட்டின் ஒப்பனை அறை பரணில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைதான்.
இங்கே எப்படி வந்தாய் என்ற ஆய்வே இந்த நாவல் என்றார்.

மேலும் மேலும் என் குழப்பம் அதிகரித்தது.

மேல்மங்களம் என்ற கிராமத்தில் என் முன்னோர் இருந்தனர். கிழக்கத்திய நாடு என்றால்... என நான் கேட்டேன்.

என் மனம் நெடிய பதைபதைப்புடன் இருந்தது. இங்கே எல்லாமே சிக்கல். எல்லாமே குழப்பம் என்று தெரிந்தது.

நான் வாய் திறந்து என்னை யாரோ பயன்படுத்துகின்றனர் என்றேன்.

ஊஞ்சல் மூர்த்தி மெதுவாக சொன்னார்...

அதுதான் நீ முதலில் எழுதிய நாவலின் தலைப்பு. எங்கே அப்படியே நீ தொடர்ந்து பேசு கேட்கலாம் என்றார்.


=================____=============

எழுதியவர் : ஸ்பரிசன் (30-May-21, 1:28 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : oonjal moorthi
பார்வை : 151

மேலே