ஒரு துளி கடல்
உன் ஒருதுளி கடலிலே
மூழ்கிட வந்தேன் .....
பொன்நெற்றியிலே ஒருமுறை
முத்தமிட வந்தேன் ....
கணநேர தீண்டலில்
காயங்கள் போக்கி
சாபங்கள் ஏதுமில்லா
சரித்திரம் படைப்போம் .....
இதமான முத்தத்தில்
இளைப்புகள் போக்கி
சாயங்கள் ஏதுமில்லா
சித்திரங்கள் புனைவோம் .....
உருவடிக்கும் உயிர்க்கடலில்
உத்தேசமாய் நீந்திவந்தேன் .....
உள்துடிக்கும் உணர்வுக்கடலில்
பல்கடித்து பதறிநின்றேன் ......
ஏனடி விழியுதிரம் வடிக்கிறாய் .....
சொப்பனத்தில் கண்டவனை
சொடுக்கிடும் நொடியில் கண்டதாலா .....
கற்பனையில் கவர்ந்தவனை
கண்ணெதிரில் கண்டதாலா .....
காதல்மேகமொன்று கருகொண்டுவந்து
கனவிலே நம்முள்ளம் நனைத்திட .....
ஓடும்நதிநீரெல்லாம் சலசலப்புநீங்கி
காதிலே நம்பெயரை உச்சரித்திட .....
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட
சுபசூட்சுமமொன்றை நம்மனம் அறிந்ததுவோ .....
மன்மதலோகமதில் மந்திரமாய்மீட்டிய
மோகராகமொன்று நம்செவி தீண்டியதுவோ .....
தேடியலைந்த காலமெல்லாம்
தொலைந்தோடி போகட்டும் .....
சந்தோசமாய் சுதந்திரக்கொடியேற்றி
இச்சொந்தக்கொடியெனை சேரட்டும் .....
பவித்திரமான புதுபந்தக்கொடியிதுவோ
இடைஞ்சலின்றி நீளட்டும் .....
எங்கெங்கோ தேடியலைந்தேன்
ஆங்காங்கே பாடித்திரிந்தேன் ......
ஒற்றைக்காலில் கொத்தநிற்கும்
வெங்கொக்கினையும் வென்றுநின்றேன் .....
நித்திரையின்றி நிலமகளை
தேடிவாடிய தேவனின்
தேடல்காலத்தையும் வென்றேன் .....
காத்திருக்கும் வெண்ணிலவு
காட்சிக்கு உவமையாம் .....
பூத்திருக்கும் பொன்மலர்கள்
எங்காதலுக்கு கவிதையாம் ....
வாடிநிற்கும் வாஞ்சைமலர்கள்
எம்தவிப்புக்கு உவமையாம் .....
ஓடிநிற்கும் காலங்கள்
எம்தேடலுக்கு சாட்சியாம் ......
உனைத்தேடி நானலைந்தேன்
கருவிழித்திரையில் காட்சிவிழுந்த
ஒவ்வொரு நொடியும் ......
உரிமைக்காரியே எனைத்தேடி
நீயலைந்த கதைசொல்லுதடி
விழும் ஒவ்வொரு துளியும் .....
ஏக்கங்கொண்டு வடித்தது போதாதென
இன்னமும் வடிக்கிறாயா .....
ஆனந்தங்கொண்டதால் போகியென
கடைசியாய் வடிக்கிறாயா ......
போதுமடி ....
பேரலைகள் பொங்கும் காலங்கூட
கொஞ்சநேரந்தானடி .....
கூர்துளிகளை கொட்டும் காலமோ
கொன்றொழிந்ததடி ......
நங்கையவள் கண்ணீரை
கரந்தாங்கும் கவிதையெல்லாம்
காலாவதி ஆனவையடி .....
என்மங்கையுன் கண்ணீரோ
இனியென் மார்மீதே விழவேண்டுமடி ......
கரமதில்தாங்கும் கற்பனைகூறி
என்னிலுனைபிரித்து எதிரில்
நிறுத்த மாட்டேனடி .....
கார்முகிலே உனையென்னோடு
சேர்த்தணைத்து யென்மார்பில்
இறுத்தி வைப்பேனடி .....
என்பாதி நீயென
ஏகப்பழசையெல்லாம் சொல்லேனடி ......
என்னுள் எல்லாம் நீயேயென
மன சூளுரை கொடுப்பேனடி.....
இறுதியாய் இவ்வோருறுதி .....
இந்நொடி தாண்டி
நீயென்னவள் ஆவாய் .....
கோடுதாண்டிய கோமகளை தூக்கிச்சென்ற
பத்துத்தலை பயில்வானேதும்
பறந்துவந்து உம்முன்நின்றால்
பதற்றமின்றி ஒருகுரல்கொடு ......
அக்கணமேயவன் மொத்தத்தலையும்
உன்மொட்டுப்பாதத்தில் வைக்க
எனக்கொரு பார்வைக்கொடு ......
வழியும் உன்ஒருதுளி கடலிலே
மூழ்கிடத்தான் வந்தேன் .....
பொன்நெற்றியிலே ஒருமுறை
முத்தமிடத்தான் வந்தேன் ....
இனியுமென்னை காக்கவைக்காதே ....
ஓடோடிவந்தெனை கட்டிவிடு ......