பாலனின் லுங்கி

பல வருடங்களுக்கு பின் டெல்லியில் இருந்து நவ்யுக் எக்ஸ்ப்ரசில் மதியம் இரண்டு மணிக்கு பிறந்த ஊரான மதுரைக்கு  வந்து இறங்கினார் பாலன், வீடு நடந்து செல்லும் தூரத்தில்தான், ஆனால் ஏப்ரல் மாத வெயில், சூடு மிக அதிகமாக இருந்தது, ஆட்டோ பிடித்து செல்லலாம் என ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார், ரோட்டில் ஏராளமான நடை பாதை கடைகள் அதில் ஒரு கடையில் குறைந்த விலை காட்டன் துணிகள் என்று கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தான் வியாபாரி, சட்டைகள், பணியன்கள், உள்ளாடைகள் அத்துடன் லுங்கிகளும், வித விதமாக தொங்க விடப்பட்டிருந்தன, மூன்று லுங்கிகள் இருநூறு ரூபாய் என்று யாரோ ஒரு வாடிகளையாளரிடம் சொல்லிக்கொண்டிருந்தான், தன்னையும் அறியாமல் அந்த சிறிய கடையில் தொங்க விடப்பட்டிருந்த லுங்கியில் கைவைத்தார்

         டெல்லியில் நிரந்தரமாக இருப்பதால் பாலனுக்கு  லுங்கி கட்டும் பழக்கம் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்துவிட்டது, குர்தாவும், பைஜாமாவும், ஷார்ட்ஸ் மற்றும்  டி ஷர்டிற்கு மாறிவிட்டது வாழ்க்கை, ஆனால் லுங்கியில் மீது இருந்த காதல் மட்டும் குறையவில்லை அவருக்கு, டெல்லியில் லுங்கி கட்டிய மனிதர்களை எங்காவது கண்டால் நின்று ஒரு நிமிடமாவது பேசிவிட்டுச் செல்வார், அதில் அவருக்கு அலாதிப்பிரியம்

         கடைசியாக அவரிடம் ஒரே ஒரு லுங்கி மட்டும் தான் இருந்தது, மகள் லுங்கி எனக்கு வேண்டும், மனைவி கைலி எனக்கு வேண்டும் என்று குளித்தபின் தலைத்துவட்டுவதற்காக சண்டைபோட்டுக்கொண்டனர், அது மட்டுமல்ல அதை லுங்கியென்று  சொல்வதா, அல்லது கைலியென்று சொல்வதா என்பதிலும் இருவருக்கும் பட்டிமன்றம் அடிக்கடி நடக்கும், லுங்கி டான்ஸ் பாடல் வந்த பின்தான் பட்டிமன்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எப்பொழுதும் லுங்கி என்றே சொல்லும் மகளோ பார்த்தீர்களா அம்மா நான் தான் வெற்றிபெற்றேன் லுங்கிதான் சரியான வார்த்தை என்று இன்று வரை பெருமை அடித்துக் கொண்டிருக்கிறாள்

        ஆக இவர்களின் லுங்கிச்சண்டையை தீர்த்துவைக்க சொத்துப்பிரிப்பது போல லுங்கியை இரண்டாக கிழித்து எடுத்துக்கொள்ள கூறிவிட்டார் பாலன்

         லுங்கி என்பது எவ்வளவு சவ்கரியமான ஒன்று, சாதாரணமாக மூஞ்சை துடைத்திக்கொள்வதில் இருந்து மூக்கை சீந்தி துடைத்துக்கொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல், சில எதிர்பாராத நேரங்களில் படுக்கை இல்லாமல் இரவில் தூங்க நேர்ந்தால் பாயிக்கு பாயாகவும், போர்வைக்கு போர்வையாகவும், ஒரு சின்ன வீட்டுக்குள் தூங்குகின்றோம் என்ற உணர்வை லுங்கியை தவிர வேற எந்த துணிகளாலும் கொடுக்க முடியாது, அதுமட்டுமல்ல, கிராமங்களில் இருக்கும் குளம், குட்டையில் எத்தனை சிறுவர்கள் லுங்கியை காற்றாடைத்த ட்யூபைப் போல உபயோகித்து நீச்சல் கற்றிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, அது மட்டுமா, சில நேரம் கடை, கன்னிக்கு பைகளை எடுத்துச் செல்ல மறந்தால் இருக்கவே இருக்கிறது நமது லுங்கிப் பை, பெண்கள் சீலையின் மடியிலும், முந்தானையிலும் காய்கறி வாங்கி வருவது போல ஆண்களுக்கு பொருட்கள் வாங்கிவர லுங்கி உதவுகிறது, அது மட்டுமல்ல வீட்டு பெண்களுக்கு எத்தனையோ துவாலைகளை வாங்கி கொடுத்தாலும் குளித்தபின் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜாவான லுங்கியில் தலைத்துவட்டுவதே ஆலாதி என்கின்றனர்

          ஆக பாலனின் வீட்டில் பாகம் பிரிக்கப்பட்ட லுங்கி ஆங்காங்கே கிழி பட்டதும் பணி மாற்றம் செய்யப்பட்டதை ஒரு நாள் காண நேரிட்டது பாலனுக்கு இரண்டாக கிளிக்கப்பட்ட  லுங்கியிலிருந்து கைக்குட்டை அளவு கிழிக்கப்பட்ட ஒரு குட்டித் துணியை வைத்து பாலனின் மகள் டேபிள் துடைக் கொண்டிருந்தாள், மற்றொரு குட்டித் துணியை வைத்து  மனைவி அடுப்பிலிருந்த பாத்திரத்தை இறக்கி வைத்துக்கொண்டிருந்தாள், இருவரும் வேலையை முடித்ததும் அத்துணிகளை ஒரே இடத்தில் வைத்தனர், ஆம் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் அவன் இறந்த பின் பிணம் என்று சொல்வது போல, லுங்கியாக இருந்தது இன்று கரித்துணியாகவும், தூசி துடைக்கும் துணியாகவும் மாறியிருந்தது

         அங்கே ஒரே இடத்தில் வைக்க பட்ட இரு துணிகளையும் பார்க்கும் போது பாலனின் மனதில் வலி ஏற்பட்டது, ஒன்றாக பிறந்த இரு குழந்தைகள் காணாமல் போய் எதிர் பாராத விதமாக சந்தித்துக்கொண்டது போல மனதில் தோன்றியது மட்டுமல்லாமல் பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் குடும்ப கஷ்டத்தினால் உணவகத்தில் பணி புரியும் சிறுவர்களை காணும்போது மனதில் ஏற்படும் வலி பாலனுக்கு இருந்தது, அத்துடன் அத்துணிகள் இரண்டும் நாங்கள் என்ன பாவம் செய்தோம், எங்களை ஏன் பிரித்துவிட்டீர்கள், உங்களை நம்பித்தானே வந்தோம் என்று கேட்பது போல தோன்ற, வேதனை அதிகரித்தது

"எப்பொருள் யார்யார் வாய்க் கேட்ப்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு"

தலைத்துவட்ட என்று சொல்லி கிழித்து கொடுக்கப்பட்ட லுங்கி இங்கே கரித்துணியாக காணப்பட்டது, ஆக பொருள் புரியாமல் கிழித்துவிட்டோமே என தோன்றியது பாலனுக்கு

         மனிதர்களுக்கு மட்டும்தான் அன்பு, பாசம், உணர்வு இருக்க வேண்டுமா, துணிகள் பருத்தியிலிருந்துதானே வருகிறது, அவைகளும் ஒரு காலத்தில் ஏதோ ஒரு அம்மாவின் அரவணைப்பில் தானே வாழ்ந்திருக்கிறார்கள் என்றெண்ணி, விருட்டென்று எழுந்து அங்கே ஒன்றாக இருந்த லுங்கியில் பாகங்களை கையிலெடுத்தார், அத்துடன் மற்ற பாகங்கள் எங்கே என மனைவி மற்றும் மகளிடம் சண்டையிட்டு தேடச்சொல்லி அனைத்து பாகங்களும் கிட்டியப்பின் ஒரு பெரிய மிலிட்டரி ஆப்பரேசனுக்கு கிளம்பும் முன் வரை படத்தை விரித்து வைத்து பார்ப்பது போல பார்த்து எல்லா பாகங்களும் சரியாக இருக்கிறது என்றதும், வேகமாக அனைத்தையும் துவைத்து, காய வைத்து, ஒரு தெருக்கோடி தையல்க்காரனிடம் கேட்டதைவிட அதிக பணம் கொடுத்து ஒன்றாக தைக்க வைத்து, இஸ்திரி செய்து அழகாக மடித்து அவர் பெட்டிக்குள் வைத்த பின் அது அவரைப் பார்த்து நன்றி சொல்வதைப்போல உணர்ந்து நிம்மதியடைந்தார்

          அன்று வெகு நேரம் அவர் யாரிடமும் பேசவில்லை, மகள் கேட்டாள் மெதுவாக அப்பா என்னவாயிற்று உங்களுக்கு, அந்த கொஞ்ச நேரத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி போல இருந்தது உங்களின் நடவடிகை என்றாள், பாலன் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு உணர்வுகளை வார்த்தைகளால் உணர்த்த முடியாது, உணர்வுகள் கற்றுக்கொடுத்து வருவதில்லை அது ஒரு சுயம்பு மகளே, நீ இன்னும் கொஞ்சம் பெரியவளான பின் புரிந்துகொள்வாய் என்றார்....

          என்ன சார் லுங்கி வேண்டுமா, ரெம்ப நேரமா லுங்கியை கையில் பிடித்து பார்த்துக்கிட்டே இருக்கேன்களே என்றான் கடைக்காரன்

          கடையில் தொங்க விடப்பட்டிருந்த லுங்கியை வாஞ்சையோடு வருடிக்கொடுத்துவிட்டு, மீண்டும் ஒரு பாவம் செய்ய விருப்பமில்லாதவறாய் வேண்டாம்பா, சும்மாதான் பார்த்தேன் என்று சொல்லிவிட்டு, வீட்டை நோக்கி நடக்க துவங்கினார், இப்போது வெயில் சுடவில்லை அவருக்கு, மனது சுட்டுக்கிடந்தது, வாழ்க்கையில் சில காயங்கள் கடைசிவரை ஆறாமல் சூடாகத்தான் இருக்கும் போல...


முற்றும்....

எழுதியவர் : மேஜர் முருகன் (7-Jun-21, 8:55 am)
சேர்த்தது : Major Murugan
பார்வை : 80

மேலே