பஃறுளி ஆறாய்

பஃறுளி ஆறாய்.....
====================================ருத்ரா
அன்பே
என்று அழைத்து
உனக்கு
கடிதம் ஒன்று போட‌
என் பேனா நாவுக்கு
எச்சில் ஊறியது.
நீ யாரோ?
நான் யாரோ?
பார்த்த கண்களுக்கு
முகம் மட்டுமே அகம்.
மற்ற
முகவரி பற்றி கவலையில்லை
சாதியும் மதமும் சிந்திக்கவில்லை.
காகிதம் முன்னே
காதலுக்கு கடிதமாய்
சிவப்புக்கம்பளம் விரித்தது.
எழுத்துக்கள்
உயிர்த்துப்பூத்து பூமரங்கள் ஆயின.
ஆயினும்
அடி நீரோட்டத்தில்
சாதித் தீயின்
"கௌரவம்" காக்க‌
அரிவாள்கள் முட்காடு ஆனதில்
நம் அகநானூறும் கலித்தொகையும்
படுகொலையாகி
பச்சை ரத்தத்தின் ஆறு
பஃறுளி ஆறாய்
பாய்ந்து பெருகுகின்றதே!
"யாவரும் கேளிர்"
என்ற
உலக மானிடச்சொல்லாக்கம்
நம் உள்ளூர் வெறியில்
உருக்குலைந்து போகுவதோ?

===========================================
07.06.2016 ல் எழுதியது.

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (7-Jun-21, 9:17 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 43

சிறந்த கவிதைகள்

மேலே