முடிவுகள்

முடிவுகள்

அது ஒரு அமைதியான பூங்கா. . இருவரும் ஒருவர் முகம் ஒருவர் பார்க்காமல் மௌனமாக உட்கார்ந்து இருந்தார்கள். கைகள் கைபேசியில் எதையோ நகர்த்திக் கொண்டிருந்தது. மனம் எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருந்தது. பறவைகளின் சத்தம். மனிதர்களின் நடமாட்டம். எதையுமே அவர்கள் பொருட்படுத்தவில்லை. அவரவர் முடிவில் உறுதியாக இருப்பதுபோல் தெரிகிறது ,அதனால் தான் இவ்வளவு நேரம் இருவரும் அமைதியாக பேசாமல் உட்கார முடிந்தது.

“ சரி, என்னோட முடிவு இதுதான். இதுல எந்த மாற்றமும் இல்லை. நான் தெளிவா இருக்கேன். இந்த சமூகம் என்ன பத்தி என்ன நினைக்குது, அத பத்தி எல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை. நான் எப்படி வாழனும், எப்படி இந்த சமூகத்தில் நடந்துக்கனுமுன்னு எனக்கு தெரியும். மத்தவங்க முடிவு என்மேல திணிக்க முடியாது” என்று மென்மையாக சொல்லிவிட்டு நகர தீர்மானித்தாள்.

“கொஞ்சம் நில்லுங்க, நீங்க தப்பா முடிவு எடுக்கிறீர்கள். நீங்க இன்னைக்கு எடுக்கிற முடிவு சரியா இருக்கலாம். ஆனா காலங்கள் மாறும். அப்ப நீங்க வருத்தப்படுவீங்க. நாம எடுத்த முடிவு தப்பானது என நினைத்து, உங்க மன நிம்மதியை இழந்து விடுவீர்கள். ஒன்னும் அவசரம் இல்லை. கொஞ்சம் காலங்கள் எடுத்துக்குங்க .மீண்டும் நீங்க எடுத்த முடிவு சரியான்னு, கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பிறகு இதே இடத்துல இறுதியா ,உறுதியா சொல்லுங்க. நான் உங்க முடிவு மனப்பூர்வமா ஏத்துகிறேன்”, என்று அன்பு கலந்த அக்கறை கலந்த மனதோடு மெல்ல சொல்லிவிட்டு அவன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து கொண்டிருந்தான்.

இருவரும் வெவ்வேறு திசையை நோக்கி நடந்தார்கள்.

காலம் வேகமாக ஓடியது

அவன் ஒரு திசையில். இவள் ஒரு திசையில். இருவரும் வெவ்வேறு திசையில் வெவ்வேறு இடத்தில் வாழ்ந்தாலும், நினைவுகள் ஏனோ ஏதோ ஒரு இழப்பின் வெளிப்பாட்டை ஞாபகப்படுத்துவது போலவே இருந்தது இருவருக்கும்.

ஒரு ஆண் எதையாவது இழந்துவிட்டால் ,அவன் இழந்ததை பற்றி அதிகம் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டான். அதை அவனுடைய முகம் வெளிப்படையாகவே காட்டிக்கொடுத்துவிடும். அதே நிலையில் தான் அவன் ஒவ்வொரு நாளும் காலையில் ஜன்னலுக்கு அருகில் நின்று கொண்டு, கிழக்கு நோக்கி சூரியன் எழுந்துவரும் அந்த வருகையை பார்த்துக் கொண்டிருப்பான் .என்றாவது ஒருநாள் நமக்கும் இதேபோல், அதிகாலை சூரியனைப் போல், ஒரு நிலை உருவாகும் என்று முகத்தில் ஏக்கம் அதிகமிருந்தது. மனது தவிப்போடு இருந்தது .அவனுடைய இழப்பை பகிர்ந்து கொள்வதற்கு நம்பிக்கைக்குரிய எவரும் அவனருகில் இப்பொழுது இல்லை. அமைதியாய் கொஞ்ச நேரம் வானத்தில் அதிகாலையில் எழுந்து வரும் கதிரவனை பார்த்த ஆனந்தத்தில் அடுத்த வேலைக்கு தயாரானான்.

இழப்பு ஆணுக்கு மனதுக்குள்ளேயே குப்பையை போல் மக்கிப் போய் விடும். ஆனால், பெண்ணுக்கு அது அப்படி அல்ல.

அவள் எதை இழந்தாலும் மறைக்க முடியாது . ஏதாவது ஒரு வகையில் அந்த இழப்பு ,அவள் என்ன இழந்தாள், யாரிடத்தில் இழ்ந்தால், என்பதை வெளிக்காட்டி விடும்.
ஆனால் இவள் புதுமையானவள். துணிவு படைத்தவள். நெஞ்சுறுதி கொண்டவள். சமூகம் என்ன சொல்கிறது என்பதற்காக வாழக்கூடாது, நாம் என்ன நினைக்கிறோம், எப்படி வாழ வேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும்/ இப்படி வாழ ஆசைப்பட்டவள்.

உடல் அளவில் அவளுக்குள் ஏற்படும் மாற்றங்களை சமூகத்திற்கு வெளிக்காட்டாமல் மறைக்க முடியவில்லை. அதற்கான விளக்கத்தை கொடுக்காமல் இருக்கவும் முடியாது. தன்னிலை விளக்கம் இந்த சமூகத்திற்கு அவள் தரவேண்டிய அவசியமில்லை. இருந்தும் இந்த சமூகம் எதிர்பார்க்கிறது. இவள் இந்த சமூகத்தின் எதிர்பார்ப்பை எப்படி எதிர்கொள்ள போகிறாள் என்பதுதான் அவனுடைய கேள்வி?

’ சமூகம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை’ இது அவளின் எண்ணம்.

உந்தன் இந்த நிலைக்கு நான்தான் காரணம் .இது சமூகம் உன்னைப்பற்றிய கேள்விக்கு என்னிடம் இருந்து வரும் விளக்கம். இது அவனின் எண்ணம்.

இருவரும் வெவ்வேறு இடத்தில் வாழ்ந்தாலும், அவர்களின் எண்ணங்களின் நிலைப்பாடு ஒன்றாகத்தான் இருந்தது. ஒரே பாதையில் அவர்களின் எண்ணங்கள் பயணித்தது.

இப்ப இது சரியா இருக்கும் நீ எடுக்குற முடிவு.
ஆனா காலப்போக்கில் இது உனக்கு தவறுன்னு தோணும் அவன்.

இல்லை .நான் எப்பவுமே நான் எடுத்த முடிவுல உறுதியாய் இருப்பேன். மாற மாட்டேன். இந்த சமூகத்துக்காக ,இந்த சமூகம் என்னைப் பற்றி தப்பாக எதைப் பேசினாலும். அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன் .இது அவள்

அவர்கள் அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். சமூகம் என்பது ஒவ்வொரு மனிதனின் கூட்டுக் கலவை. ஒவ்வொரு தனிமனிதனின் சங்கம பூங்கா. இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டோடு எண்ணங்களோடு வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு .


எனக்கு நீ எப்படி எப்பொழுதும் அவசியம் இல்லை என்று நான் முடிவு எடுத்தேனோ அதே நிலைதான் என் மகனுக்கோ என் மகளுக்கோ அவசியம் இல்லை என்ற முடிவிலிருந்து நான் எப்பொழுதும் பின்வாங்க மாட்டேன். என்று அவள் சொன்ன அந்த வார்த்தைகள் அவனுக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது

நான் அவசியம் தேவைப்படுவேன் மென்மையாக சொன்னான்.

அவள் அதற்கு அவசியமே ஏற்படாது கடுமையாக சொன்னாள்.

அவர்களின் பிரிவில் பரிமாறிக் கொண்ட வார்த்தைகள் மென்மையாகத்தான் இருந்தது .ஆனால் பரிதாபத்திற்கு உரியவர்கள் யார் நீங்களே முடிவெடுங்கள்

எழுதியவர் : இரா.ரமேஷ் (12-Jun-21, 8:26 am)
சேர்த்தது : இரா ரமேஷ்
Tanglish : mudivukal
பார்வை : 97

மேலே