இடைவெளி

இடைவெளி

நமக்குள் பெரிய இடைவெளி விழுந்துவிட்டது...
குடும்பம் குழந்தைகள் என
கடக்க முடியா பாலம் வளர்ந்துவிட்டது

இப்பொழுதெல்லாம் உன்னைப்பற்றி
எதுவுமே தெரிவதில்லை எனக்கு
தெரிந்தோ தெரியாமலோ தெரிவிக்கும்
நந்தினி பாப்பாவும் வளர்ந்துவிட்டாள்
ஒன்றும் சொல்வதில்லை

முகநூல் புண்ணியத்தில் காணக்கிடைத்தது
பாப்பாவைத் தொட்டுக்கொண்டோ
தாங்கிக்கொண்டோ
எச்சரிக்கையாய் ஒதுங்கியிருக்கும்
உன் கைகள் மட்டும்

புலனத்தின் முகப்புப் படத்தில்
அடிக்கடி பார்த்துச் சிரிப்பேன்
குட்டிப் பாப்பாவின் சிரிப்பு
உன்னை உரித்துவைத்தாற்போல

பேசிப் பேசியே கழிந்த பொழுதுகளும்
சேர்ந்தே படித்துக் கிழித்த புத்தகங்களும்
பத்திரமாகத்தான் இருக்கின்றன
நினைவடுக்கிலும் புத்தக அடுக்கிலும்

பேசாவிட்டாலும் செய்தி அனுப்பலாம்தான்
ஆனாலும் அனுப்புவதில்லை இருவரும்

வழக்கம்போல மாசித் திருவிழாவில்
சந்திக்கலாம்தான் பேசலாம்தான்
பேசத்தான் ஒன்றும் இல்லை

வீட்டுக்கு வரலாம்தான்
நலம் விசாரிக்கலாம்தான்
உரிமை பாராட்டதான் ஒன்றுமில்லை
நமக்குள் பெரிய இடைவெளி
விழுந்துவிட்டது

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (17-Jun-21, 11:05 am)
Tanglish : idaiveli
பார்வை : 70

மேலே