இரசவாத விபத்து

இரசவாத விபத்து

என்னை யாருக்கும் புரியவில்லை
உனக்கும்தான்

என்னைக் கடக்கும்போது
திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை
நான் அருகில் வரும்போதெல்லாம்
உனக்கு கூசுகிறது

எச்சில் தொட்டிக்குள்
விழுந்து கிடப்பவனைப் போல
அருவருப்பாக உணரச் செய்கிறது
உன் உதாசீனங்கள்

நாம் முதன்முதலாய்
நேர்முகத் தேர்வில் சந்தித்துக்கொண்ட
அந்த நாள் இனிமேல் வாய்க்காதா?

ஏற்கவொப்பாதெனிலும்
புரிந்துகொண்டிருக்கலாம்
புரிய வைக்க முயற்சித்திருக்கலாம்
வேற்று ஆளாக நினைத்து
ஒதுக்கியிருக்கலாம்

உன்னை நம்பி ஒப்புவித்த ரகசியங்களை
உரக்கப் பேசி சிரித்திருக்க வேண்டாம்
காறி உமிலாமலாவது இருந்திருக்கலாம்

எதையோ யாரிடமோ நிரூபிக்க
என் ரகசியங்களை ஏன் வெளிச்சமிட்டாய்
அழவைப்பதில் என்னடா ஆனந்தம் உனக்கு
நானல்ல நீதான் மனநோயாளி

அந்தச் சம்பவம்
சுரப்பிகளின் வஞ்சனை
உணர்வுகளின் வன்முறை
நிகழ்ந்திருக்கக் கூடாத தவறான ரசவாதம்
நான் தோற்றுப் போன மனச் சமர்
என்ன செய்ய ....?
நிகழ்ந்து தொலைத்த அந்தப் பொழுதை
என்ன செய்து , எப்படி அழிக்க?

வேலைக்கு வரவே பிடிக்கவில்லை
வித்தைக் குரங்கைப் பார்ப்பதுபோல்
வேடிக்கை பார்க்கிறார்கள்
காதுபடவே கேலி பேசுகிறார்கள்
கேவலச் சிரிப்புதிர்க்கிறார்கள்

நீ யாரிடமும் சொல்லாமலிருந்திருக்கலாம்
அன்று ஓடி மறைந்த பூரானைப் போல
விட்டுத் தொலைத்திருக்கலாம்

நீ பரப்பாமல் இருந்திருந்தால்
நீ வருவதற்கு முன் செய்ததையே
இன்னும் தொடர்ந்திருப்பேன்
உன்னை மறக்க முயன்றிருப்பேன்
அவமானங்களைச் செரித்திருப்பேன்
காலம் காயமாற்றினால்
வேறு யாரையாவது காதலித்திருப்பேன்
தனியனாக வாழ்ந்துமிருப்பேன்
அம்மாவின் நச்சரிப்புக்காகயாவது
ஒருத்தியை திருமணம் செய்திருப்பேன்
இதைவிட பெரிய அவமானத்தில்
தற்கொலையும் செய்திருப்பேன்

எனக்காக ஒன்றையாவது செய்
இனிமேல் யாரிடமும் சொல்லாதே
அவர்களின் பார்வை
அவமானகரமாக இருக்கிறது

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (17-Jun-21, 11:09 am)
பார்வை : 51

மேலே