பணம்
பணம்
💰💰💰💰💰
காகிதமாய் இருந்த நானும்
கலர் மையால் பணமாகி
பாதுகாப்பு பெட்டகத்தில்
படுத்திருந்தேன் குழந்தையாக !
நடை பழகி வங்கியிலே
நண்பர் கூட்டம் ஒன்று சேர
வெளியில் நாங்கள் செல்லும் போது
விதிமுறைகள் கடைபிடிப்போம் !
பணக்காரன் வீடு சென்றால்
பல நாட்கள் ஓய்வெடுப்போம்
உழைப்பாளி வீட்டினிலே
ஒரு நாளும் தங்கிடோமே !
சம்பளக்காரன் வீட்டுக்கு
சரிசமமாய் பிரிந்து செல்வோம்
அரைமாதம் முடிவதற்குள்
அனைவருமே திரும்பிடுவோம் !
வரி கட்டும் நிலை என்றால்
வக்கனையாய் ஒழிஞ்சுக்குவோம்
தேர்தல் நேரம் வந்து விட்டால்
தெருக்களிலே பிரிஞ்சுக்குவோம்
என் தம்பி காசு ஏனோ
இயலாமல் படுத்து விட்டான்
முன்போல அவனாலே
முடியவில்லை நடமாட !
செல்லாத நோட்டுக்களாய்
சில உறவு பிரிந்து விட
புத்தம் புது மண பெண்ணாய்
புது நோட்டும் இணைந்ததுவே !
சட்டை பைக்கும் பணப் பைக்கும்
சலைக்காமல் ஓடி விட்டோம்
முழு உலகும் பெருந்தொற்றாம்
முடங்கி விட்டோம் நாங்களுமே...
க.செல்வராசு..