திரும்பா நினைவுகள்
திரும்பா நினைவுகள்
தோட்டத்து வீடு
மண் வாசனை
கடைக்குட்டிச் செல்லமாய்
மண்ணில் காலடி...
ஒன்றாய் ஆடிப்பாடி
அலப்பரை செய்ய
வாண்டுகளும் அதிகம்...
வாண்டுகள் செய்யும்
சேட்டைகளும் அதிகம்...
பசித்தவர்க்கு பகிர்ந்தளித்த
கைகளும் ஏராளம்...
உண்டு ருசித்த
உணவுகளும் தாராளம்...
கால் தடம் பதிந்த
சேற்று வயல்வெளி,
சோளக்காட்டு
ஒளிஞ்சுபுடி ஆட்டம்,
பம்பு செட் மற்றும்
குட்டைக் குளியல்,
சுரப்புருடை நீச்சல்,
புளியமரத்துப் பேய்,
கயிற்றுக் கட்டில் உறக்கம்,
ரெட்டை ஜடை ரிப்பன்,
கனகாம்பரம் மற்றும் டிசம்பர் பூ,
ஊரைக் கூட்டும்
ஜாதிமல்லி வாசனை,
புதுப் சிலேட்டு பென்சில் வாசம்,
புது நோட்டில் குட்டி
போடா மயிலிறகு
மனம் திரும்ப திரும்ப
ஏங்கும் ஏக்கமாய்...
நா சிவக்க கள்ளிப் பழம்
இனித்த வேப்பம் பழம்
பழுத்த புளியங்காய்
மணந்த கறிவேப்பிலை பழம்
பழுத்து வெடித்த வெள்ளரி
அதிகம் கனிந்த நாவல் பழம்
எச்சி ஊறும் இலந்தை
பிஞ்சு பருத்திக்காய்
வாழைப்பூ தேன்
சுட்டுப் புசித்திட சேகாய்
கரட்டோர காரக்காய்
வேலி படர்ந்த சங்கம் பழம்
கொடி படர்ந்த கோவைப் பழம்
தேடித் தேடி கிடைக்கா விருந்தாய்...
காட்டுக் காளான் குழம்பு
தை பொங்கல் முறுக்கு, தட்டை
எட்டு தெரு மணக்கும்
எள் உருண்டை
சூடான சாதம் வடித்த கஞ்சி
பிஞ்சுப் கொய்யாவுடன்
கோபுர வெல்லம்
அக்காக்களின் குட்டிச் சட்டி கூட்டாஞ்சோறு
நா ருசிக்க ஏங்கும் சுவையாய்...
மலரத் துடிக்கும் நினைவுகளாய்...
மீண்டும் திரும்பா நிஜங்களாய்...
-உமா சுரேஷ்