கரு

கரு

என் வயிற்றில் உதித்த கணம்
வானமும் என் காலடியில்...
மாதம் பத்தும் போனா
நீயிருப்ப என் மடியில்...

மெது மெதுவா நீ வளர்ந்த...
என் கனவையும் நீ
வளர்த்து விட்ட,
கணவன்,மனைவி எங்களை
அப்பா,அம்மாவாக மாற்றிவிட்ட...

நீ வயித்துல வந்து சேர்ந்து
மாசம் ஏழு ஆயிடுச்சு,
உன்னை கையில் தவழ விட
மனசும் தான் ஏங்கிடுச்சு...

நீ பேசாத வார்த்தை எல்லாம்
காத்துலயும் கேட்குதடி...
காற்றாய் எனை நீயும்
வருடுவது போல் தோனுதடி...

சங்கு கழுத்துக்கு
தங்க சங்கிலி வாங்கியாச்சு,
குட்டி இடுப்புக்கு
அரைஞான்கயிறும் எடுத்தாச்சு,
நீ கால் அசைச்சா
சத்தம் கேட்க
வெள்ளிக் கொலுசும்
வாங்கியாச்சு...

உன்னை
மார்மீது போட்டுறங்க
அப்பாவும் இருக்காரு,
தங்கச்சிலை உனைத் தாங்க
தாய் மாமன் வருவாரு...

பக்குவமா உனை வளர்க்க
தாத்தா,பாட்டிகள் இருக்காங்க,
பண்பை சொல்லித் தர
பெரியம்மா வருவாங்க...

அன்பு மழை பொழிந்திட
அத்தைகளும் இருக்காங்க,
சித்திரமா உனை வடிக்க
சித்தப்பாவும் இருக்காரு...

நாட்களை விரல் விட்டு எண்ணித்தான் நான்
இருக்கேன்...

உன் பிஞ்சுப் பாதம்
எனை உதைக்க
ஏங்கிட்டு இருக்கேனே...

நீ வயித்துல அசையும் நொடி
மனசில
ஆயிரம் பூ பூக்குதடி...
மசக்கை வலிகூட
மறந்தும் தான் போகுதடி...

உன் மழலை வாசம் தேடி
என் நாசி அலையுதடி...
நான் பிறந்த பயன் அடைய
நெஞ்சம் தான் ஏங்குதடி...

அந்த நாளுக்காக ஏங்கித்தான்
நானிருக்கேன்...
உன் அழகை நான் ரசிக்க உன்னை எதிர் பார்த்திருக்கேன்...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (23-Jun-21, 5:06 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : karu
பார்வை : 23

மேலே