திருமணம் எப்போது
முப்பது வயது ஆகிவிட்டதால்
முதுமை எட்டிப் பார்க்கிறதோ
முன் நெற்றி கூந்தலிலே
மூன்று வெள்ளைக் கோடுகள்
இளமை இருக்கும் நேரத்திலே
இயற்கையை காட்டிலும் அழகு என்பேன்
இந்திரன் வீட்டுத் தோட்டத்திலே
இனிக்கும் பழங்களின் தலைவி என்பேன்
அப்பாவுடன் நான் பயணிக்கையில்
அடுத்து உன் துணை யாரு என்பார்
அகவை உடலில் ஏறும் முன்னே
அத்தான் பெயரை கூறு என்பார்
அழகுக்கு ஏன் வேண்டும் அலங்காரம்
அடி மனதில் ஓர் அகங்காரம்
அடிமை சிறையில் நான் வாழ
அகப்பட வேண்டுமா நான் என்பேன்
பகலில் நானும் உறங்கையிலே
பக்கத்தில் அன்னை பஜனை செய்வாள்
பாசம் காட்ட ஆண்மகனை
பக்கத்தில் வைப்பது எப்போது என்பாள்
பாசம் காட்டும் போட்டியிலே
பந்தயக் குதிரை நான் இல்லை
பஞ்சு மெத்தையில் நான் உறங்க
பணம் இருக்கிறது போதும் என்பேன்
தாயும் தந்தையும் போன பின்னே
தனிமை துரத்துது என் பின்னே
காலம் கரையுது கண் முன்னே
காதலன் வருவானா என் முன்னே
தனிமை வலியை குறைத்துக்கொள்ள
தலைவன் ஒருவனை அனைத்துக்கொள்ள
காதல் கனவை அவனிடம் சொல்ல
காலம் வருமா மெல்ல மெல்ல