புது மை மணப்பெண்

புது(மை) மண பெண்!!!

குமரியாக பறந்த என்னை, சிறகை மடக்கி பெண்ணாக அமர வைத்தது, இன்று நடந்த என் திருமணம்!
மறுவீடு வந்தவளை மனதார வரவேற்றார்கள்...
அத்தைக்காரி கண்களில் சலிப்போடு, உதட்டில் புன்னகை உதிர்த்தாள்...
வாழ வந்த சாம்ராஜ்யத்தை ஆள வந்தேன் என நினைத்தாளோ
என்னவோ!?.
சூரியன் மேற்கில் அடை பெற்றதும், உறவினர்கள் விடை பெற்றனர்...
என்னை ஈன்றவள், மற்றோரோடு சான்றவள் ஆக்க, காதில் அறிவுரை பெயரில் பொய்யுரை செய்தாள்....
கணிப்பொறி அறிந்த என்னை, எலிப்பொறி கூண்டில் வாழ சொல்கிறாள் என அறிந்துகொண்டேன்....
முதலிரவு முன்னாலே முதிர்ச்சி பெற்ற என் மனதின் கேள்விகள் இதோ.!!!.
நகம் கடித்தால் தான் நாணம் கொண்டவள் என உரைப்பீர்களா???
மாலையிட்டால் சேலை அணிந்தே ஆகவேண்டுமா???
வசதிக்காக ஆடை அணிந்தால் வசீகரத்திற்காக அணிகிறேன் என்பீர்களா???
சமைக்க தெரியாது என்றால் சதியமைக்க வந்தவள் என எண்ணுவீர்களா???
வாய்திறந்தால் வாயாடி என்றும், புன்னகைத்தால் புனிதமற்றவள் ,என்றும் கருதுவீர்களா ???
சாதிக்க வந்த எங்களுக்கு சாவிக்கொத்து எதற்கு???...
வேதனை அறியாத எங்களுக்கு போதனை எதற்கு???...
மாற வேண்டியது நாங்கள் இல்லை நீங்கள் தான்....
முதலிரவு அறையில், என் மண விளக்கை ஏற்றி, புது மண பெண்ணான நான் புதுமை மணப்பெண்ணாக மாற முயற்சிக்கிறேன்!!!!..

எழுதியவர் : (2-Jul-21, 11:57 pm)
சேர்த்தது : vaikundaraj
Tanglish : puthu mai manapen
பார்வை : 83

மேலே