அகழிகள் வறண்டதாய் - நிலைமண்டில ஆசிரியப்பா

வெம்மையும் மிகுந்ததால் புவியுமே உருகிடும்
மழையென நெருப்பின் பொழிவினால் வலியுமே
வலிமையை இழந்ததாய் கருகியே நகர்ந்திடும்
அகழிகள் வறண்டதாய் முகிலென இலகுமே. ------ (1)

பாறைகள் உருகிடும் மரங்களும் செடிகளும்
மணமிகு மலர்களும் பொசுங்கியே அழிந்திடும்
சிசுக்களும் கொசுக்களும் சிறப்புநல் இடங்களும்
அனலினால் கருகியே புழுதியாய் ஆகுமே ------ (2)

தெய்வம் செல்வம் கல்வி சொந்தம்
யாவும் ஓடும் கூச்சல் விம்மல்
சோகமும் நிறையும் எங்குமே ஒருவரும்
எவரையும் அழைக்கா சூழலே வருமே ------ (3)

ஆடைகள் நகைகள் ஆண்மை பெண்மை
யாவின் நற்பொருள் இழந்தே போகும்
சேர்த்தது இருந்தது உழைத்தது உரியது
பலவகை பயனிலா நிலையில் மாறுமே ------ (4)

இந்நிலை வருவதோ இயற்கை தன்மையில்
மனிதனின் பணத்தின் மோகமோ இதனையும்
விரைவாய் செய்ய வைத்திடும் நிலையில்
ஆட்சியும் உலகமும் போவது சரியோ ------ (5)
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (22-Jul-21, 10:30 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 56

மேலே