கிண்ணத்தில் நிலாச்சோறு நூல் ஆசிரியர் கவிஞர் சென்னிமலை தண்டபாணி நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

கிண்ணத்தில் நிலாச்சோறு!


நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி!நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வெளியீடு : விஜயா பதிப்பகம், கோவை.
பக்கங்கள் : 127. விலை : ரூ.120.


******

நூல் ஆசிரியர் கவிஞர் சென்னிமலை தண்டபாணி அவர்கள் புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் தம்பி. இந்நூலிற்கு மாக்சியத் திறனாய்வாளர் அறிஞர் கோவை ஞானி, பேராசிரியர் இராம. குருநாதன் இருவரும் அணிந்துரை நல்கி உள்ளனர். விஜயா பதிப்பகம், அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, பொருத்தமான படங்கள் என நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர், பாராட்டுகள்.

நூலாசிரியர் கவிஞர் சென்னிமலை தண்டபாணி அவர்கள் கொஞ்சம் ஹைகூ, கொஞ்சம் சென்ரியூ, சருகுத் தோட்டம் போன்ற நூல்களில் ஹைக்கூ வடித்தவர். ஹைக்கூ பற்றிய நல்ல புரிதல் இருப்பதால் தொடர்ந்து ஹைக்கூ படைத்து வருபவர். ஹைக்கூ கவிதையில் தனி முத்திரை பதிக்கும் விதமாக இந்நூல் உள்ளது.

ஓடக்காரன் பாட்டிசைக்கிறான்
வியந்து பார்க்கின்றன
நட்சத்திரங்கள்!

ஜப்பானிய ஹைக்கூ போல இயற்கையை பாடி உள்ளார். ஓடக்காரன் பாட்டை உள்ளூர்காரர்கள் ரசிக்காவிட்டாலும் வானிலிருந்து நட்சத்திரங்கள் கேட்டு ரசிக்கின்றன என்ற கற்பனை சிறப்பு.

புல்லாங்குழல் விற்பவன்
மூட்டை கட்டிப் புறப்பட்டான்
அழுதது குழந்தை!

புல்லாங்குழலை எல்லோரும் வாங்குவதில்லை. ரசனை உள்ள ஒரு சிலர் மட்டுமே வாங்குவர். கொண்டு வந்தவை விற்கவில்லை. எனவே மூட்டை கட்டுகிறான். வீட்டில் வறுமை குழந்தை அழுகிறது. இப்படி ஒரு ஹைக்கூவின் மூலம் பல விஷயங்களை உணர்த்தி உள்ளார் நூலாசிரியர்.

கருமியின் கையில்
அட்சயப்பாத்திரம்
யாருக்கும் இல்லை பசி!

வள்ளல் கையில் அட்சயபாத்திரம் கிடைத்தால் எல்லோருக்கும் வாரி வாரி வழங்குவான். கருமியின் கையில் கிடைத்தால் யாருக்கும் தரமாட்டான். எனவே யாருக்கும் பசி எடுத்தாலும், பசி என்று அவனிடம் சொல்லியும் பலன் இல்லை.

அறிமுகமில்லை
ஆயினும் சிறு புன்னகை
அழகானது மனது!

யார் என்று தெரியாவிட்டாலும், யாரை பார்த்தும் சிரித்து விடும் கள்ளம் கபடமற்ற குழந்தைகள். அப்படி நம்மைப் பார்த்து சிரித்த குழந்தகளை நினைவுபடுத்தி வெற்றி பெறும் ஹைக்கூ நன்று.

இறந்தவன் வீட்டில்
எட்டாம் நாள் விருந்து
நினைவில்லை மரணம்!

இறந்த சோகத்தை மறக்க வேண்டும் என்பதற்காகவே இறந்து சில நாட்களில், இறந்த வீட்டில் விருந்து வைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது சில பகுதிகளில். உண்மை தான். விருந்து நடக்கும் மனமகிழ்ச்சியின் போது இறந்தவர் பற்றிய நினைவும் மறந்து போய் விடுவது உண்மை.

மந்தார வானம்
மழை பொழியவில்லை
காகிதக் கப்பலோடு குழந்தை!

மேகம் கருத்து மழை வருவது போல இருந்ததும் குழந்தை ஆசையுடன் பெற்றோரிடம் வேண்டி, கப்பல் செய்து காத்திருக்கும் மழைக்காக. ஆனால் அன்று மழை பொழியாமல் வானம் ஏமாற்றியும் விடுவது உண்டு. அந்த நிகழ்வை உற்றுநோக்கி வடித்த ஹைக்கூ நன்று.

பொம்மைக் கல்யாணத்தையும்
அழகாய் நடத்துகிறது
சிறார் கூட்டம்!

குழந்தைகள் விளையாடுவதைக் கண்டு ரசித்து வடித்த ஹைக்கூ நன்று. மிக நேர்த்தியாகவே பொம்மைக்கு திருமணம் செய்து வைப்பார்கள். பொறுமையாக ரசித்துப் பார்த்தால் நாமும் உணரலாம். குழந்தைகள் திருமண வீட்டில் நடப்பதை உற்றுநோக்கி அதன்படியே பொம்மைக்கு திருமணம் செய்து வைப்பதும் சுவையான நிகழ்வு தான்.

பூங்கா தான்
ரசிப்பவர் எவருமில்லை
கைகளில் அலைபேசி!

பூங்காவிற்கு சென்று அங்குள்ள செடி, கொடி, மலர், மரங்களை ரசிக்காமல் அங்கும் அமர்ந்து அலைபேசி பார்க்கும் இன்றைய அவலத்தைச் சுட்டும் வண்ணம் வடித்த ஹைக்கூ நன்று. இயற்கை ரசனை என்பது மனதிற்கு இதமானது என்பதை உணர வேண்டும்.

தொகைக்காட்சியில் நிலா
ஊட்டுகிறாள் அம்மா
கையில் பர்கர்!

இன்றைய நவீனம் காரணமாக தனி வீடுகள் விடுத்து அடுக்ககங்களில் வாழ்கின்றனர். அடுக்கக வீடுகளில் நிலா பார்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், அம்மா, தொலைக்காட்சியில் வரும் நிலாவைக் காட்டி, சோறு கூட ஊட்டாமல் கையில் உள்ள பர்கரை ஊட்டும் இன்றைய நிலையை காட்சிப்படுத்திய ஹைக்கூ சிறப்பு.

அட்சய பாத்திரத்தோடு
மணிமேகலை
அன்னதான வரிசை கோயிலில்!

கையில் உள்ள அட்சய பாத்திரம் அள்ள அள்ள அன்னம் வரும் பாத்திரம் என்பதைக் கூட அறியாமல் மணிமேகலையே கோயிலில் அன்னதான வரிசையில் நிற்கிறாள் என்று எள்ளல் சுவையுடன் எழுதி உள்ளார். இதற்கு பல பொருள்கள் உண்டு. தன்னிடம் உள்ள ஆற்றலை, திறமையை, உழைப்பை நம்பாமல் இலவசத்திற்கு ஏங்குகின்றனர் என்ற மனநிலையை சுட்டுவதாகவும் பொருள் கொள்ளலாம்.

பிதிரச் சோறு
வேடிக்கை பார்க்கிறது
உண்ண வரும் காகம்!

பெற்றோர்கள் இருந்தபோது உணவிடாதவர்கள் இறந்தபின் அவர்களுக்கு படைப்பதாக எண்ணி காக்கைக்கு வைப்பதை எண்ணி காகமே உற்றுநோக்கி சிரிப்பதாக வடித்த ஹைக்கூ நன்று.

கூடுதல் இயக்குனராக பதவிஉயர்வு பெற்றுள்ள முனைவர் முத்துப்பாண்டியன் அவர்களுக்கு நன்றி .அவர்தான் வாழ்த்தும்போது இந்த நூலை எனக்கு வழங்கினார்கள் .*****


--

.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (24-Jul-21, 9:34 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 26

மேலே