பங்காளியின் வீட்டுத் திருமணம்

நெருங்கிய உறவுக்காரப் பங்காளியின் வீட்டுத் திருமணம்!


ஊரையெல்லாம் வருந்தி வருந்தி
நேரில் சென்று அழைத்துக் கூட்டத்தைக் கூட்டி இருந்தார்கள்!

பதினேழே கால் ஏக்கர் திருமண மண்டபம்
நிறைந்து வழிந்தது கூட்டமான கூட்டம்!
இரணாடாயிரத்து முன்னூற்று அறுபத்து ஏழு கார்களும்
அந்தக் காரில்லாததால் இந்தக் காராளர் கூட்டத்தில் கொஞ்சம் ஒட்டாமல் ஒடுங்கி ஒதுங்கி உட்கார்ந்திருந்த உறவினர் பதினைந்து பேரும் வந்திருந்தார்கள்!

பளீரிடும் வெள்ளை + வெள்ளை (ராம்ராஜ் புண்ணியம்!) உடையில் தமது கால்கண்ணும், அதைவிட வெள்ளையான காரின் மீது ஒன்றே முக்கால் கண்ணும்,
அதை விட்டு இறங்கி விலகி வரும்ப்போது அதன் "பவர் லாக்" ரிமோட் தந்தாக வேண்டிய
"குய்க்" சத்தத்திலேயே தமது காதும் இருக்க,
யார் மீதும் படாமல்
"மிதந்து" வரும் கணவர்கள்!
அவர்களுக்கும் முன்னாதார அவர்களை விடப் பெரிய மிதப்புடன் வரும் அவர்களுடைய தலைக்கனம்!

கண்ணைப் பரிக்கும் ஜம்கிகளும், ஜரிகையும் நகைகளும் (கடை பில்லும் ஸ்டிக்கர்களும் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்க) ஜொலிக்கும் கத்தி கத்தியாகக் கடை மடிப்புக் கலையாத பட்டுப் புடவையில் அரைக் கண்ணும், பக்கத்து வீட்டுக் காரி அருகில் வர அவளது பட்டுப் புடவை மேல் கால் கண்ணும்,
கையில் (படல் போல) உள்ள ஒரு ஐபோடு அல்லது பாம் பீசி மீது தமது ஒன்றேகால் கண்ணும் வைத்தபடியே, அதை எதிரில் உள்ளவர் கண்ணில் படும் படிஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டு. கணவருக்குப் பின் அந்தக் காரிலிருந்து பூப்போல நழுவி இறங்கி, அலுங்காமல் நகர்ந்து வரும் மனைவியர்!

கைக்கு அடங்காத அண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனின் மீது தடவிக் கொண்டிருக்கும்
கைகளுடனும் கண்களுடனும் ஹெட்செட்ட் குத்திக் கொண்ட காதுகளுடனும்
ஓயாமல் மென்/று மென்று மென்று கொண்டிருக்கும் வாயுடனும்;
தொடைகளை இர்ர்ர்ர்ர்றுகிப் பிடித்துக் கொண்டு அளவை அப்பட்டமாகக் காட்டும் ஆங்காங்கே கிளிசல்களும் நூல் பிரிந்த பொத்தல்களும் மிகக் குறைந்த அளவு சாயமும் அதைவிடப் பதினேழு மடங்கு அழுக்கும் கொண்ட ஜீன்ஸுடனும் தமது தனிக் காரில் வரும் இளைஞரும் இளைஞிகளும்
ஒருவர் மீது ஒருவர துளியும் படாமல், பாதங்கள் நிலத்தில் படாத தேவ மாந்தர்களைப் போல நகர்ந்து வந்து கொண்டிருந்தார்கள்!

இவற்றையெல்லாம் காட்டுவதற்காகவும் மிச்ச நேரம் ப்படி ஏதாவது இருந்து) கிடைத்தால்
மணமக்களுடன் நின்று ஒரு அரை குறை வீடியோவும் ஃபோட்டோவும் மறக்காமல் டஜன் கணக்கில் செல்ஃபிகளும் (அப்புறம் அந்த ஃபொட்டாக்ரஃபர் எதற்காகவென்று தெரியவில்லை!), எடுத்துக் கொள்வதற்காகவும்,

அந்த வட்டாரத்திலேயே பெர்ர்ரிய ஷெஃப், கருமமே கண்ணாகத் தாயாரித்துக் குவித்த
உணவு வகைகளைப் பந்தியில் தலைவாழை இலையில் அடுக்கி வைத்த பின்,
(வீட்டிலிருந்து புறப்படும் போதே ஒரு பிடி பிடித்து விட்டு வந்ததால்) சுண்டுவிரல் நுனியால் கிளரிப் பார்ப்பதற்காகவும், அவர்கள் வந்து குவிந்திருந்தார்கள்!!

பெண் யார், மாப்பிள்ளை யார் என்று இவர்களைக் கேட்டால் தோளை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டு, "அத்தோ மேரேஜ் போடியத்ல இருக்காவ!" என்பார்கள்! இவர்களுக்கு அவர்கள் எப்படி உறவன் முறை என்பது தெரியாது!

ஆனால் சாப்பாட்டுக் கூடாத்தில் மட்டும் அழுக்குத் துணியுடனும் பரட்டைத் தலையுடனும் பஞ்சப் பரதேசிகளைப் போன்ற பரிசாரகர்கள்!
அவர்களிடம் ஒளிரும் சுத்தத்திற்கு, அவர்களுக்கு ஆளுக்கு ஒரு வெள்ளை வெளேர் துணித் தொப்பியும் கையுறைகளும் வாய்க்கு முகமூடிகளும் மாட்டி இருந்தார்கள்!

அவர்களைச் "சும்மா" உள உளாக்காட்டிக்காக விரட்டும் "மேரேஜ் டின்னர் மேனேஜர்!" (டின்னர் எம்டி யோ என்னவோ!)

ஒரு உருப்படியான காரியமும் இல்லாமல் பட்டு புடவைக் கொசுவத்தை நுனி விரல்களால் கிள்ளி அள்ளிக் கொண்டு மாங்கு மாங்கு என்று அவசரம் அவசரமாக உள்ளும் வெளியிலுமாக அலைந்து கொண்டிருக்கும் "தேவைக்காரி"யான வீட்டு எஜமானி!

நெருங்கிய உறவுக்காரப் பங்காளியின் வீட்டுத் திருமணம்!

உறவுகள் தமக்குள் கலந்து திருமண விழா வேலைகளைப் பகிர்ந்து கொண்டு,
கூலி ஆட்கள் இல்லாமல் தாமே கொண்டாட வேண்டிய நெருங்கிய உறவுக்காரப் பங்காளியின் வீட்டுத் திருமணம்!

அழுக்கும் கரியும் அப்பிய வாடகை அலுமினியப் பாத்திரங்கள் இங்கும் அங்கும் இறைந்திருக்க,
பஃபே மீல்ஸ் பந்தலில் மட்டும் பளப் பளாவென்று ஹைடெக் பாத்திரங்களும்
வரிசை வரிசையாக மேசைகளில் தொங்கு விளக்குகளுக்கு அடியில் அமர்ந்திருக்க,

ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் காய்கறி, பழம், பால், நெய்., தயிர், எண்ணெய்கள், தானியங்கள், பாத்திரங்கள் துணி மணிகள் சேர்த்து,
வாடகைக்கு எதையும் வாங்கி வராமல் மற்ற உறவுப் பங்காளிகளும் மாமன் மச்சான்களும் அக்கா தங்கைகளும் அண்ணீ கொழுந்திகளும் அண்ணன் தம்பிகளும் தாத்தன் பாட்டிகளும் உற்ற நண்பகளும் நடத்திக் கொடுக்க வேண்டிய நெருங்கிய உறவுக்காரப் பங்காளியின் வீட்டுத் திருமணம்!

தற்காலத் தமிழகத் திருமணக் கலச்சாரம் வாழ்க!
தற்காலத் தமிழர்களின் அர்பன்-மெட்ரோபோலிஸ் பண்பாடு வாழ்க வாழ்க!!

நெருங்கிய உறவுக்காரப் பங்காளியின் வீட்டுத் திருமணம்!

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (25-Jul-21, 12:21 am)
பார்வை : 40

மேலே