9ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 9
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

தீராக்கோபம் போராய் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இராமாயணத்தில் வரும் இராவணன் என்ற பாத்திரமே சான்று. காட்டில் இராமபிரானுடன் ஆரண்யத்தில் வாசம் செய்த இலட்சுமணன் என்பவனால் தன்னோட தங்கை சூர்ப்பனகையின் காது மூக்கு அறுபட்டதைக் கேள்விப்பட்டவுடன் இராவணன் மிகவும் கோபப்பட்டு, தன்னிலை மறந்தான். அவன் தங்கையின் துர்போதனையால் சீதையைக் கவர்ந்து வந்து ‘பிறர்மனை நோக்கியவன்’ என்ற தீராப்பலிக்கு ஆளானான். முடிவில் அவன் ராமபாணத்தினால் மரணத்தையே தழுவினான் என்பது புராணம் கூறும் வரலாறு. அவன் தன்னோட தங்கை சூர்ப்பனகையிடம் பொறுமையாக கோபப்படாமல் என்ன நடந்தது என்பது பற்றி நன்கு தீர விசாரித்திருந்தால் அவன் தவறான வழிக்குச் சென்றிருக்க மாட்டான். மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய கோபம் சிந்திக்கும் திறனையே இழக்கும்படி செய்து அவன் தலைவிதியையே மாற்றிவிடும் என்பதற்கு இராவணன் அழிவு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

இனியவை செய்தார்க்கும், இன்னா செய்தார்க்கும் இனியவை செய்தல் வேண்டும் என்று நாம் ஒவ்வொருவர் மனதிலும் நினைக்க வேண்டும். மற்றவர்கள் நமக்கு அறிந்தும் அறியாமல் செய்த துன்பங்களை பொறுமையாக சகித்துக் கொள்வதோடு, அவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். பிறர் நமக்கு செய்யும் துன்பங்களைக்கண்டு நாம் கோபப்படாமல் சகிப்புத்தன்மையுடன் இருந்தால், சிலர் ‘கையாலாகாதவன்’ ‘எதிர்த்து பேசத்தெரியாதவன்’ என்று பலவிதமாக உங்கள் காதுபடவே உங்களைக் கோபப்படும்படியாக கேலியாகப் பேசி சிரிப்பார்கள். அவற்றையெல்லாம் நீங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் காதில் போட்டுக்கொள்ளாமல், பொறுமையுடன் இருந்து பழக வேண்டும். அவ்வாறு பொறுமையை கடைபிடிக்கும்போது நம்மை அறியாமல் நமக்கு மனபக்குவம் வந்து விடுகிறது. இதனைத்தான் “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண, நன்னயஞ் செய்து விடல்” என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார். இன்னா செய்தார்க்கும் இனியவை செய்யக்கூடியவர்கள் உலகில் இன்பமுடன் மனஅமைதி பெற்று வாழ்வார்கள். அதனால் நமக்கு துன்பம் செய்தவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

நாத்திகவாதிகள் கடவுளை மறுத்தாலும் அறிந்தும் அறியாமல் தான தர்மங்கள் செய்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு புண்ணியத்தின் பலன்கள் கிடைக்கும் என்று மனதளவில் எண்ணிகொண்டு, ஏழைஎளிய மக்களுக்கு இயன்றளவில் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். ‘கடவுள் இல்லை’ என்று சொல்லக்கூடிய நாத்திகவாதிகளும் பொதுத்தொண்டுகள் பலவிதங்களில் செய்து அவர்களையும் அறியாமல் புண்ணியத்தின் பலன்களை அடைகிறார்கள் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகிறது. இதனைத்தான் ‘நான் நிந்தா துதியிலும் இருக்கிறேன்’ என்று பகவத்கீதையில் கிருஷ்ண பராமாத்மா கூறியுள்ளார்.

மனிதர்களாகப் பிறந்தவர்கள் பெரும்பாலும் மோட்சம் என்னும் வீடுபேற்றை அடைவதற்கு விரும்புகிறார்கள். மோட்சம் என்பது அழியாப் பொருள், ஒவ்வொரு மனிதனும் பராமாத்மாவை அடைவதற்கு அவனையும் அறியாமல் அவன் நாடுகிறான். யாருமே மரணம் என்னும் அழிவிற்கு செல்வதற்கு விரும்புவதில்லை. உலகில் மரணத்தைக் கண்டு பயப்படாத மனிதர்களே இல்லை. ஆனால் மனிதனுக்குள் ஏற்படக்கூடிய ஆசைகள் உலக இன்ப துன்பங்களை அடைவதற்கு மனித மனங்கள் உந்தித் தள்ளப்படுகிறது. புண்ணியங்கள் செய்து அதன்மூலம் மனிதன் மோட்சம் போன்றவற்றை அடைவதற்கு சாஸ்திரங்கள், புராணக்கதைகள் மூலம் பலவழிகளில் ஆன்மீக வழிகாட்டுகிறது.

மனிதன் மோட்சம் அடைவதற்கு ‘ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல்’ என்று வடலூர் வள்ளல்பெருமான் வலியுறுத்தி, எளிமையான வழியையும் காட்டியுள்ளார். அதாவது உலகில் காணப்படும் அனைத்து உயிர்களிடத்தும் அன்புடன் இருக்க வேண்டும் என்று வேண்டியுள்ளார். இதனை நமக்கு புரியும்படியாக வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அவர் கூறியுள்ளார். சுவாமி விவேகானந்தர் ‘எவனுடைய உள்ளம் ஏழை எளிய மக்களுக்காக கண்ணீர் வடிக்கிறதோ அவனையே நான் பராமாத்மா என்று கூறுவேன், மற்றவர்களை நான் துராத்மாவே என்றுதான் கூறுவேன்‘ என்று உபதேசம் செய்து, ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்யும்படி வலியுறுத்திக் கூறியுள்ளார். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதுபோல் ஏழை மக்களுக்கு உதவுவதன் மூலம் மக்கள் மனஅமைதி அடைவதற்கு எளிமையான வழியினையும் காட்டியுள்ளார். இவற்றையெல்லாம் மனிதன் ஆன்மீகம் மூலம் அறிந்து கொள்வதோடு அதன்படி செயல்புரிய வேண்டும். அவ்வாறு ஆன்மீக வழியில் செயல்புரிந்தால் அவன் விரும்பும் தேடும் அமைதி கிடைக்கும்.

நமது மனதில் வேண்டாத எண்ணங்களை நிரப்பி, நம்மையும் அறியாமல் நாம் துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம். நமது மனதாலும் பலவிதமான தவறுகளை நம்மையும் அறியாமல் செய்து கொண்டுதான் இருக்கிறோம். மற்றவர்கள் வைத்திருக்கும் பணத்தின் மீதோ பொருள்களின் மீதோ மனிதன் மனதளவில் ஆசை கொள்வதும் மனதால் செய்யக்கூடிய தவறாகும். இதைத்தான் நமக்கு மற்றவர்கள் மூலம் பிரச்சினைகள் ஏதும் வரும்போது சிலர் சில நேரங்களில் ‘என்னோட மனதால்கூட அவனுக்கு/அவருக்கு/அவர்களுக்கு கெடுதல் ஏதும் நினைக்கவில்லை’ என்று பேச்சு வழக்கில் கூறுவதைக் கேட்டு இருக்கிறோம். நமது உள்ளத்தில் அறிந்தும் அறியாமல் ஏற்படக்கூடிய தீமையான எண்ணங்கள் எல்லாம் சுவரில் அடித்த பந்துபோல் திரும்பி வந்து நம்மை ஏதோ ஒருவிதத்தில் துன்பங்களால் தாக்குகின்றன என்பதை யாரும் உணர்வதில்லை.

நமக்கு வரக்கூடிய துன்பங்கள் துயரங்களுக்குக் காரணம் மற்றவர்கள்தான் காரணம் என்று தவறாக எண்ணிக்கொண்டு அவர்கள் மீது வீணாகப் பகைமை கொள்கிறோம். இது தவறான முடிவும் கருத்தும் ஆகும். இதனைதான் “தீதும் நன்றும் பிறர் தரா வராது.” என்று ஆன்மிகம் கூறுகிறது. நாம் நம் மனதில் எப்போதும் நற்செயல்களைப் பற்றி எண்ணிக்கொண்டேயிருந்தால் வாழ்வில் நல்லது நடக்கும். மனதில் தீயவைகளைப் பற்றி எண்ணிக்கொண்டேயிருந்தால் வாழ்வில் கெட்டது நடக்கும். இதைத்தான் பெரியவர்கள் ‘எண்ணம்போல் வாழ்வு’ என்று தெளிவாக கூறியிருக்கிறார்கள். எனவே நமது மனதை எப்போதும் நல்லவைகளையே எண்ணும்படி, மனதிற்கு ஆன்மீக வழியில் பயிற்சி அளிக்க வேண்டும். அவ்வாறு ஆன்மீக வழியில் தொடர்ந்து மனப்பயிற்சி பெறும்போது நாளடைவில் மனம் நல்லதையே நாடும் நிலைக்கு வந்து விடும். அதனால் நமது மனம் நமக்கு அடிமையாகி விடும். நாம் மனதில் நல்லதையே எண்ணி, நல்ல செயல்களையே செய்து, நல்லதையே பேசிகொண்டு வரும்போது மனம் அமைதி கொள்வதோடு நம் வாழ்விலும் நல்லதே நடக்கும்.

முதலில் நம் மனம் நமக்கு வசமாக வேண்டும். மனம் அடங்கி நம் வசமாகி விட்டால் மனஅமைதி கிடைப்பதற்கு சாத்தியமாகும். அதனால் மனிதன் நாள்தோறும் சிறிது நேரமாவது மனதை அமைதியாக வைத்துக்கொள்வதற்கு தியானம் போன்ற ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும், அவன் ஐம்புலன்களை சிதறவிடாமல் அதன்போக்கில் செல்லவிடாமல் நாள்தோறும் தவறாமல் தியானம் செய்து பழக வேண்டும். அப்படி தியானம் செய்து வரும்போது மனம், அறிவு, எண்ணங்கள் எல்லாம் தெளிவடைந்து ஓரளவு அமைதி கிடைக்கும். இதைத் தவிர நமக்கு அமைதி கிடைப்பதற்கு வேறு எளிமையான எந்த வழியும் இல்லை. இதனைத்தான் ‘மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்’ என்று திருமூலர் ஆன்மீக வழியில் அமைதிக்கு வழி காட்டியுள்ளார்.

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்த பகவான் போதித்துள்ளார். ‘ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசையை அறுமின்கள்’ என்று திருமூலர் ஆசையை நம்மை விட்டு அகற்றும்படி எளிமையாகக் கூறியுள்ளார். மேலும் அவர் இவ்வுலக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இறை வழிபாடு அவசியம் தேவை என்றும் விளக்கிக் கூறியுள்ளார். பிறர் கெட்டாலும், தான் மட்டும் சுகமாக வாழவேண்டும் என்ற குறுகிய சுயநலங்கூடிய எண்ணம்தான் நமது துன்பத்திற்கு ஒரு காரணமாகி விடுகிறது. மனிதர்களின் இந்த குறுகிய எண்ணங்கள்தான் சமுதாயச் சீரழிவே ஏற்படுகிறது. இத்தகைய மனநிலை ஒரு மனிதனுக்கு இருந்தால் வாழ்வில் அவனுக்கு மன அமைதி என்பது கிடைக்காது என்பதை உணர வேண்டும். எனவே மனிதர்கள் வேண்டாத குப்பைகள் போன்ற தீய எண்ணங்களை மனதில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனதினை எப்போதும் தூய்மையுடன் வைத்துக்கொள்ள வேண்டும். நமது மனதினை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி? (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

.

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (26-Jul-21, 9:31 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 66

மேலே