இரட்டைக் குழந்தை

வேப்பம்பழம் உண்டு
களித்த மகிழ்ச்சியில்
மைனாக்கள் இரண்டு

வீட்டை சுமப்பதுபோல்
காதலை சுமந்தபடி
மெதுவாக நகரும்
நத்தைகள் இரண்டு

தாழப்பறந்தபடி மழை
முன்னறிவிப்பு செய்யும்
தட்டான்கள் இரண்டு

தங்கள் தலைநீட்டாது
குரல்களில் குழையும்
குயில்கள் இரண்டு

மழையோடு போராடியபடி
மரத்துடன் மல்லுக்கட்டும்
மரங்கொத்திகள் இரண்டு

தேனுண்ட மிதப்பில்
சிறகடித்துப் பறக்கும்
பட்டாம்பூச்சிகள் இரண்டு

அசட்டுத் துணிவுடன்
மனிதர்களை நெருங்கும்
காக்கைகள் இரண்டு

நெல்வயல் கண்ணில்பட
நெடுந்துர களைப்பகற்றும்
மாடப்புறாக்கள் இரண்டு

அரசமர பிள்ளையாரை
சுற்றி சுற்றி விளையாடும்
அணில்கள் இரண்டு

இன்னும் எப்படிச் சொல்ல
எனக்கு இரட்டை குழந்தைகள்
பிறந்திருக்கின்றன என்பதை...

எழுதியவர் : மேகலை (2-Aug-21, 4:18 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 54

மேலே