எளிமையின் அகவை எண்பது


அகவை எண்பது எய்திய
எம் தந்தையின் இலக்கணம்
எளிமையும் ,கடும் உழைப்பும் !.

தகவுடன் இணைந்து மனையாண்ட
எம் அன்னையின் இலக்கணம்
பொறுமையும் நல்லிதயமும் !

தாய் சொல் தட்டாத தனயனாய் ,
இட்ட பணி இனிதே நிறைவேற்றும்
பொறுப்புகள் நிறைமகனாய் வளர்ந்த
எம் தந்தையின் இளமைக்காலம்
போற்றுதற்குரியது !

செல்வந்த புத்திரியாய்ப் பிறந்து
உற்றோர் சீராட்ட ,மற்றோர் பாராட்ட
கவலையற்று துள்ளித் திரிந்து வளர்ந்த
எம் அன்னையின் இளமைக்காலம்
ரசனைக்குரியது !

கொட்டும் மழையிலும் குளிர்நீரில் குளித்து
காலத்தே கடமை செய்வது
எம் தந்தைக்கே உரித்தான
சிறப்பியல்பு

படுத்தும் உடல்நிலையிலும் சலிக்காமல்
எங்கள் வளர்ப்பில் அன்னை
காட்டிய அக்கறை எண்ணினால்
பெரும் சிலிர்ப்பு !

பாசநூல் கொண்டு
உறவுமலர் தொடுப்பதில்,
உபசரிப்பதில்,
உவகையோடுதவிகள் செய்வதில்
இவருக்கு நிகர் இவரே !


சதாபிஷேக அப்த பூர்த்தி காணும்
எந்தை தாய் மீது
எல்லையற்ற கருணைமழை பெய்து
நெல்லையப்பர் -காந்திமதி
என்றும் துணையிருக்க
பூரண உடல்நலமும்
நீளாயுளும் பெற்று
வாழ்வாங்கு வாழ
அருளாசி வேண்டுகிறோம் !

வாழ்க வளமுடன்!

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (28-Sep-11, 12:22 am)
சேர்த்தது : chithra rajachidambaram
பார்வை : 1342

மேலே