மூலிகையைப் பயன்படுத்த மூப்பென்றும் அணுகாது

இயற்கை மருத்துவம் - யோகாசனம்.

மூலிகையைப் பயன்படுத்த மூப்பென்றும் அணுகாது!

மூலிகையைப் பயன்படுத்த மூப்பென்றும் அணுகாது!
முதியஉடல் ஆனபின்னும் முறுக்கதிலே குறையாது!
முதுகூனி வளையாது; முகச்சுருக்கம் வீழாது!
முடிகூட நரைக்காது; முன்பற்கள் உதிராது!

முகத்தொளியும் மங்காது; மூச்சேறித் திணறாது!
மணிக்குரலும் நடுங்காது; மாலைக்கண் திரையாது!
நினைவாற்றல் குன்றாது; ;நிறைமனமும் இருளாது!;
நெஞ்சுரமும் வற்றாது; நேர்பார்வை தழையாது!

நீள்விழிகள் இடுங்காது; நிரைபுருவம் சுருங்காது!
கீழ்வயிறு துவளாது; கீலிடையும் திரளாது!
மலைத்தோளும் தணியாது; மார்வற்றிச் சுருங்காது!
வளைக்கரமும் நடுங்காது; வாதமுடல் நண்ணாது!

முழந்தாளும் காற்றேறி, முன்காலை வளைக்காது!
முத்தெயிறு கருக்காது; முறுவலது கோணாது!
கால்மூன்றாய்க் கூடாது; கதல்தொடைகள் அரையாது!
காதலுணர் வுறையாது; காமமதுக் குறையாது!

மூலிகைகள் உணவாயின் மூவாமல் வாழுமுடல்!
மூச்சடக்கி உடலிறுக்கும் முதிர்யோக முறைசேரின்!
முறையான ஆசனங்கள் முந்நாடி தமையியக்கும்!
முதுமையுட லங்கத்தை முடக்காமல் தாங்காக்கும்!

பாதமுதல் உச்சிவரை பல்லுறுப்பும் நன்றொழுகும்!
பார்வைமுதல் ஐம்புலனும் பழுதாகா ததுகாக்கும்!
பாவையர்க்கு மூப்படையாப் பண்புடலில் நிலையாகும்!
பூவஞ்சிக் கொடியாகப் பொன்னுடலும் மெருகேறும்!

கதிரிளவல் ஒளியுடலைக் காலையிலே தழுவுவதால்;
முதிராப்பூந் தளிர்மேனி முழுநிலவின் ஒளிவீசும்!
நடைமிடுகு குறையாது! நலவாழ்வும் மறையாது!
நாடியொரு மருத்துவனை நாமழைக்க நேறாது!
காலன்வரு நாள்வரையும் கடும்பசியும் தணியாது!
காசினியில் நோயெதையும் காணாமல் வாழ்ந்திடலாம்!
- - - - செல்வப் ப்ரியா சந்திர மௌலீஸ்வரன் மகி. 01 ஆகஸ்ட்2021.

எழுதியவர் : செல்வப் ப்ரியா சந்திர மௌல (12-Aug-21, 10:14 pm)
பார்வை : 27

மேலே