மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்றான் - திரிகடுகம் 16

நேரிசை வெண்பா

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் - உண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய்தி னார். 16

- திரிகடுகம்

பொருளுரை:

மண்ணுலகத்தில் வானளாவிய பெரிய புகழை நிலைநிறுத்தினவனும்,

பெண்களுள் குற்றமற்ற சிறப்புடைய கற்புடையவளை மனைவியாகப் பெற்ற கணவனும்,

உண்ணப்படுகின்ற நீர் குறைவுபடாதபடி கிணறுகளைத் தோண்டி வைத்தவனும் ஆகிய இம் மூவரும் எக்காலத்தும் இறவாத புகழுடம்பைப் பெற்றவராவார்.

கருத்துரை:

உலகத்தில் ‘ஈதல் இசைபட வாழ்தல்' என்ற பொய்யாமொழிக்கிணங்க,

இரப்பவர்க்கு ஈந்து சிறந்த புகழை நாட்டியவனும்,

சிறந்த கற்புடைய மனைவியைப் பெற்றவனும்

நீரறாத கிணறு முதலியவற்றைத் தோண்டி வைத்தவனும் இறந்தும் இறவாத புகழுடம்பைப் பெற்றவராவார்.

கூவல்: கூவம் என்பதன் போலி,

பூதஉடம்பு அழிந்தும், அதனாலாய புகழுடம்பு அழியாதிருத்தலால் சாவா வுடம்பு எனவும், அம் மூவரும் என்றும் உளர்போல விளங்குதலின் உடம்பு எய்தினார் எனவுங் கூறினார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Sep-21, 6:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே