கருவாடு - அந்த வாசம் , அது நல்லதோ கெட்டதோ

இது நாசியை கடந்து நாவினை அடையும் வாழ்கையின் ருசி !!

அது என்னாங்க வாழ்க்கைக்கும் காஞ்ச கருவாடுக்கும் சம்மந்தம்??

உங்களை கருவாடு கடக்கிறது என்றால் உங்களது செய்கையும் செயலும் என்னவாக இருக்கும்??

1.மூக்கை பொத்திப்பேன்!
2.அந்த வாசனையை அனுபவித்துக் கடப்பேன்!!

அட என்னங்க சம்மந்தம்?? ..சொல்றேன்..

"மூக்கை பொத்திப்பேன்" அன்பர்கள்

நல்லதோ கெட்டதோ அதை உடனடியாக அனுபவிக்க வேண்டும் என விரும்புவீர்கள் நீங்கள் பொறுமையுடன் காத்திருப்பவர்கள் அல்ல!!
உடனடியாக - மீன் சாப்பிடுவேன்!
காத்திருந்து - கருவாடு சாப்பிட மாட்டேன்!!
அதற்கு நான் ஏற்கும் ஆறுதல் - அந்த நாத்தம் ஆகாதுங்க!

"அந்த வாசனையை அனுபவித்துக் கடப்பேன்" அன்பர்கள்
நல்லது - அதன் வீரியம் அதிகரிக்கும் வரையும் ; கேட்டது - அதன் வீரியம் குறையும் வரை காத்திருந்து அதனை ஆர அமர ருசிப்பவர்கள் ; எதிர்கொள்பவர்கள் எனலாம்.
மீன் கருவாடு ஆகும் வரை காத்திருத்தல் ஓர் ஆழ்நிலை தவம்!!

கடைல கெடைக்கிற கருவாடுக்கு ஏங்க காத்திருக்கனும்?

இங்கே காத்திருக்க முனைவது கருவாடின் ருசியை மட்டும் அல்ல வாழ்வின் ருசியையும் அனுபவிக்கத்தான்!!

அது நல்லதோ!! கெட்டதோ!!

சரி இனி கதைக்குள் செல்வோம்..

பண்டைய காலத்தில் உணவு என்பதை பதப்படுத்தும் முறையை நம் முன்னோர்கள் கையில் எடுத்த காரணம் சேமிப்பு மற்றும் பகிர்தலின் மேன்மையை அறிந்ததாலோ என்னவோ, காய்கறிகள் ஊறுகாய்கள் ஆயின;மாமிசமும்,இறைச்சியும் உப்புகண்டங்களாகவும் , கருவாடுகளாகவும் மாறின.

உப்புகண்டங்கள் பெரும்பாலும் சில தசாப்தங்கள் முன் வழக்கொழிந்து போக நமக்கு மிஞ்சியிருப்பது கருவாடுகள் மட்டுமே!!

அத்தகைய கருவாடு நினைவுகள் என்னுடையதாக சில..

என் அம்மாவின் சித்தி,அதாவது என் பாட்டியின் சகோதரி , நெய்மீன் கருவாடு தொக்கு செய்வதில் வல்லவர்.
நல்லெண்ணெய் ஊற்றி,சின்ன வெங்காயம்,பூண்டு, வரமிளகாய் உடன் புளி சேர்த்து கொதியலில் நெய் மீன் கருவாடு எனும் துண்டு கருவாடு இட்டு செய்யும் அந்த கருவாடு தொக்கின் "ருசி அலாதி" என என் அம்மா சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்!
சிறு வயதில் அம்மா மற்றும் அவர் சகோதர சகோதரிகள் அவர்களின் சித்தி வீட்டை நோக்கி அடிக்கடி பயணிக்க காரணம் இந்த "நெய் மீன் கருவாடு தொக்கே" ஆகும்.

"குடும்பங்களுக்குள் பரஸ்பரங்கள் சரி இல்லாது போய் அத்தகைய பயணங்கள் நின்றபோதிலும் , இந்த கருவாட்டு தொக்கின் பயணம் நின்றதில்லை என்பாள்" அம்மா!!

என் பாலிய பருவத்தில் அந்த கருவாடு தொக்கு ஒரு நாள் எங்கள் வீட்டை அடைந்தது.
வெளிபடுத்த முடியாத ஆனந்தத்தில் இருந்த அம்மா "சுடு சாப்பாடு கூட இந்த கருவாடு தொக்க பெசஞ்சி சாப்ட்டா நல்ல இருக்கும் , நான் கடைக்கு பொய் வந்துடறேன்" என்றாள் என்னிடமும் என் தங்கையிடமும்.

அம்மா கடைக்கு சென்று நேரமாக,ஆர்வமிகுதியால் ஒரு கருவாடு துண்டு என் வாயில் போக, மற்றொன்று என் தங்கை வாயில்!!
ருசி கண்ட பூனைகளாய் வெறும் தொக்கை மட்டும் மிச்சம் வைத்து கருவாடு முழுவதையும் காலி செய்துவிட்டோம்.
வீடு திரும்பிய அம்மா கருவாடு காலியானதை கண்டு சிறுபிள்ளை போல அழ தொடங்கினாள்.
அன்று விளங்கியது அது ருசியின் பிணைப்பு மட்டும் அல்ல என்று!!

இந்த நிகழ்விற்கு பின் எங்கு துண்டு கருவாடு எனும் நெய் மீன் கருவாடை கண்டாலும் அதை வாங்கிவந்து அம்மாவிடம் கொடுத்து அப்பாவிடம் வசை வாங்குவது என் வழக்கம்
"படிக்கிற வேலைய விட்டுட்டு கருவாடு பின்னாடி சுத்துறான் பார்" என்பார்.

நானும் என் அம்மாவும் மட்டுமே அறிவோம் அந்த "கருவாட்டின் வாசமும் ருசியும் பாசத்தினால் உந்தப்பட்டது" என்று!!

அத்தகைய கருவாட்டின் மனம் என்னை இன்றும் பின் தொடர...
என் புகுந்த வீட்டில் அசைவ வாசம் அனுதினமும் கமழும்!!
மனைவி,மகள் கருவாடு பிரியர்கள்!!
மற்ற அசைவ உணவுகளில் பெரிதும் ஈடுபாடு இல்லாத மகள் கருவாடை கண்டால் பசியை உண்டாகி காருவாடை காலிசெய்பவள்!!

இவர்களை எல்லாம் மிஞ்சிய அசகாய சூரர் என்றால் அது "என் மாமனார்" தான்!!
அசைவ பிரியர்!
எந்த திசையில் எந்த கருவாடு கிடைக்கும் என புள்ளி விவரம் அறிந்தவர்!!
தூத்துக்குடியையும்,தேவிபட்டணத்தையும் கண்டிருக்கமாட்டார், ஆனால் அங்கு என்னேன்ன வகையான கருவாடு கிடைக்கும் என அறிவார்!!!
நான் வாங்கி அனுப்பிய "கோவா நெத்திலி" ருசியை பாராட்டி அரைநாள் பேசினார்.

"உள்ளி கருவாட வறுக்கணும்ப்பா, கொழம்புல போடக்கூடாது" என்பார்

"வாழை கருவாடு துண்டு போடாமல் தலையோட வாங்கிட்டு வாங்க" என கட்டளையிடுவார் எனக்கு கட்டணம் குடுத்து தன் பெண்ணை கொடுத்த அந்த மனிதர்.

இப்போது என் மீது "செல்ல கோபத்தில்" இருக்கும் அவரை கிலோ கணக்கில் கருவாடுடன் சந்திக்க வேண்டும் இம்முறை!

இப்படி இந்த கருவாடு வாசனையை நாசியில் நுகர்ந்து கொண்டும் ; ருசியை நாவில் ருசித்துக்கொண்டும் அனுதினம் பயணிக்கின்றேன்!!!

"அட போங்க உங்ககிட்ட பேசிகிட்டே நான் வெச்ச கருவாட்டு கொழம்ப சாப்பிட மறந்துட்டேன்; போய் சாப்பிட்டு வரேன்...!!

"நான் சமைத்த கருவாட்டுக்குழம்பை முகப்பு படத்தில் பார்க்க!!

- தினேஷ் ஜாக்குலின்

எழுதியவர் : - தினேஷ் ஜாக்குலின் (6-Sep-21, 11:47 pm)
சேர்த்தது : Dinesh Jacqulin
பார்வை : 191

மேலே