தூஉய மென்பார் தொழில் மூன்று - திரிகடுகம் 27

இன்னிசை வெண்பா

உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலுந் - தோல்வற்றிச்
சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றுந்
தூஉய மென்பார் தொழில். 27

- திரிகடுகம்

பொருளுரை:

உண்பதற்குரிய காலத்தில் குளித்து உண்பதும், சாட்சியாகும் பொழுது எவ்வளவு பெரும் பயனை அடைவதாக இருந்தாலும் ஒரு பக்கம் சார்ந்து பொய்ச்சாட்சி சொல்லாமலிருத்தலும், உணவின்மையால் உடம்பு இளைத்து இறந்து அழிவதாயிருந்தாலும் பல நற்குணங்களால் நிறைந்து அவற்றை ஆளுதல் குறையாமலும் ஆகிய இம்மூன்றும் மன மொழி மெய்களால் குற்றமற்றவர்களாக இருக்கின்றோம் என்று கருதுவோர் செயல்களாகும்.

கருத்துரை:

நீராடி உண்பதும், பொய்ச்சாட்சி சொல்லாமலிருப்பதும், உயிர் நீங்கினும் சான்றாண்மை நீங்காதிருப்பதும் தூயவர் செயல்கள்.

விதித்த காலங்களில் நீராடக் கூடாமற் போனாலும் உண்ணும் பொழுதாவது நீராடியபின் உண்பது இன்றியமையாதது.

சான்று - அறிவின் நிறைவு; சால் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயர்;

ஆண்மை - ஆளுதல்; தோல் - உடம்பு, வற்றி – வறுமை,

சான்றாண்மை - பல குணங்களாலும் நிறைந்து அவற்றை ஆடற்றன்மை.

ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி யெனப்படு வார். 989 சான்றாண்மை’

என்ற திருக்குறளுக்கு இணங்க தோல்வற்றிச் சாயினும் என்றார்.

பால் - பக்கம்.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்,
கோடாமை சான்றோர்க் கணி" 118 நடுவு நிலைமை

என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.

ஒருபாற் கோடாமை - வினாவிடைகளாற் கேட்டவற்றை மறையாது பகை, நொதுமல்,
நட்பென்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதல்;
.
நீராடுவதனால் அழுக்கு முதலிய உடம்பின் குற்றம் நீங்குதலும், பால்பற்றிச் சொல்லாமையினால் பொய் முதலிய வாய்க்குற்றம் நீங்குதலும், சான்றாண்மை குன்றாமையினால் வஞ்சனை முதலிய மனக்குற்றம் நீங்குதலும் சொல்லப்பட்டன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-21, 5:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே