வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கும் நோன்பிலி – திரிகடுகம் 28

இன்னிசை வெண்பா

வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கும் நோன்பிலியும்
இல்லது காமுற் றிருப்பானுங் - கல்வி
செவிக்குற்றம் பார்த்திருப் பானுமிம் மூவர்
உமிக்குத்திக் கைவருந்து வார் 28

- திரிகடுகம்

பொருளுரை:

சொல்வென்றியை விரும்பி உண்மைப் பொருளை யுரைப்போரைச் சினந்து சொல்கின்ற தவம் இல்லாதவனும் (தீயோனும்),

தனக்குக் கிடைத்தற்கரிய பொருளை மிக விரும்பி இருக்கின்றவனும்,

பிறன் கற்ற கல்விப் பொருளில் செவியினால் குற்றத்தை ஆராய்ந்து பார்க்கின்றவனும் ஆகிய இம் மூவரும் உமியைக் குத்தி கைவருந்துவோரை ஒப்பர்.

கருத்துரை:

வெகுண்ட பேச்சால் பிறரை வெல்லக் கருதுதலும், கிட்டாததைப் பெற முயலுதலும், ஒருவன் கல்வியின் தன்மையை ஆராயாது குற்றங் கூறுதலும் உமியைக் குத்துபவர் போல் துன்பத்தையும் பயனின்மையையும் கொடுக்கும்.

நோன்பு - உயிர்க் குறுகண் செய்யாமை. இலி - இல்லாதவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-21, 6:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே