ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெடும் – நல்வழி 25

நேரிசை வெண்பா

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டு - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய், ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25

– நல்வழி

பொருளுரை:

வரவுக்கு மேல் செலவு செய்கிறவர்களின் மானம் அழியும்; அறிவு கெடும்;

சென்ற இடங்களில் எல்லாம் திருடன் என்ற இழிபெயரை ஏற்க வேண்டி வரும்;

அடுத்து வரும் பிறவிகளிலும் இந்தத் தீமை தொடர்ந்து வரும்;

நல்லவர்கள் கூட அவர்களைத் தீயவர்கள் என்று இகழ்வார்கள். எனவே வரவுக்கு மேல் செலவு செய்யக்கூடாது என்று ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் - வருவாயில், மதி - அறிவு, பொல்லன் - தீயன், ஏழ் பிறப்பு - தோன்றும் பிறப்பு

விளக்கம்:

ஒருவன் தன் வருவாயை விட அதிகம் செலவு செய்தால், அவன் கடன் வாங்கி தன் மானத்தை இழந்து, சொந்த புத்தியை இழந்து போக வேண்டிய சூழல் ஏற்படும், போகும் திசை எல்லாம் அவனை எல்லாரும் திருடனைப் போல் பாவித்து அவனிடம் பேச தவிர்ப்பர், ஏழு பிறப்புக்கும் தீயவனாய், நல்லவர்களுக்கு ஆகாதவனாய் மாறிவிடுவான். ஆதலால் வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யக்கூடாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-21, 5:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 2261

மேலே