நூல் மதிப்புரை கவிஞர் இரா இரவி

வேறென்ன வேண்டும்

களவு போக!


நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் !நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி !


எழிலினி பதிப்பகம், 15ஏ, முதல் மாடி, காசா மேஜர் சாலை, எழும்பூர், சென்னை-600 098. பக்கம் : 92, விலை : ரூ.170.
நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

******

நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. நூலாசிரியர் கவிதாயினி புதுக்கவிதைகளை காதல் கவிதைகளாக வழங்கி உள்ளார். நூல் கட்டி அட்டை உள்படம் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. எழிலினி பதிப்பகத்திற்கு பாராட்டுகள்.

நாடறிந்த பெண் கவிஞர் சக்திஜோதி அவர்கள் சிறப்பான அணிந்துரை நல்கி உள்ளார். கிருஷ்ணகிரி கவிஞர் பிரபு சங்கர் வாழ்த்துரை வழங்கி உள்ளார். 80 புதுக்கவிதைகள் உள்ளன. கவிதைகளில் இளமை, புதுமை, இனிமை என பல மைகள் உள்ளன.

அன்பு வாழ்த்து

நிலை மாறும் வாழ்வில் மாசுபடாமல்
மாற்றத்தை சுவைக்காதது உன்
அன்பு மட்டுமே அம்மா!

முதல் கவிதையில் முத்தாய்ப்பாக அம்மாவின் என்றும் மாறாத அன்பை உணர்த்தி உள்ளார்.

கடமைகளின் காவல் மட்டுமல்ல
என் திறமைகளின் திறவுகோலும்
நீ அல்லவா!

திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு அம்மா உதவியதை அழகிய சொல்லாட்சிகளுடன் உணர்த்தியது சிறப்பு.

குளிர் காயும் காதல்!

தனிமையின் / தணலில் / உன் முத்தம்
சத்தங்களைப் / போர்த்திக் கொண்டு
குளிர்காய்கிறதென் / காதல்!

காதல் கவிதைகளில் முத்தம் வராமல் இருக்குமா? குறிப்பாக நெற்றி முத்தம் பல இடங்களில் வருகின்றன. தனிமையில் இனிமை காண முடியுமா? முடியும் காதல் நினைவுகளை அசை போட்டால் தனிமையும் இனிமையாகும் என உணர்த்திய கவிதை நன்று.

உயிர் நனைக்கும் காபி!

என்ன தான் மோகத்தில்
மூழ்கித் திளைத்தாலும் / தொடக்கத்திலோ முடிவிலோ
உயிர் நனைக்குமந்த / நெற்றி முத்தம்போல் தான்
இந்த காபியும் / நொடிகளில் / பரவசமாக்கும்
நாட்களை!

நெற்றி முத்தம் என்பது உயிர் நனைக்கும் என்கிறார். தலைவன் தலைவி கூடலில் நெற்றி முத்தம் என்பது சிறந்த இடம் வகிக்கின்றன. இதழ் முத்தத்தை விட நெற்றி முத்தம் மேன்மையானது, மென்மையானது என்பதை உணர்ந்து எழுதி உள்ளார், பாராட்டுகள். இனிவரும் காலங்களில் தலைவன், தலைவி கடைபிடிக்கலாம். அறியாதவர்கள் அறிந்து கொள்ளலாம் நெற்றி முத்தத்தின் சிறப்பை.

எல்லா / கவிதைகளும்
வார்த்தைகளால் / ஆனதல்ல

உண்மை தான் வெறும் கற்பனை சொற்களால் நிரப்புவது கவிதையன்று. உணர்ந்த உணர்வை, உண்மையை உணர்த்துவதே உன்னதக் கவிதையாகும்.

நளபாகம்!

சூடாய் / குளிராய் / காரமாய் / தித்திப்பாய்
நீளமாய் / ஈரமாய் / துவர்ப்பாய் / உப்பாய்
உன் அவ்வப்போது / சுவை மாறும்
உன் முத்தங்கள் / நளபாகத்தில் சேருமா?

அறுசுவை உணவு கேள்விப்பட்டு இருக்கிறோம். அறுசுவை முத்தம் என்கிறார்கள். முத்தமிட்டுக் கொண்டே காதலர்கள் மட்டும் உணர்ந்த ரகசியம். உணவு விருந்து போல அறுசுவை முத்த விருந்தும் நளபாகத்தில் சேருமா? என்று கேள்வி கேட்டு முடித்துள்ளார். இனி நளபாகத்தில் முத்தமும் சேர்ந்து விடும்.

முத்தத்தின் வேதியியல்!

சட்டென என் / தட்பவெப்ப நிலை
மாறி விடும் / காதோரம் நீ தருமந்த
ஒற்றை முத்தத்தின் வேதியியல்!

இந்த மழைக்காலத் தேநீருக்கு எதிர்பாராத நேரத்தில் தலைவன் தலைவிக்கு முத்தம் தந்து அவளது தட்பவெப்ப நிலையையே மாற்றி விடுகிறான், வெப்பமாக்கி விடுகிறான் அல்லது குளிராக்கி விடுகிறான். வேதியியல் மாற்றம் நிகழ்த்தி விடுகிறான் தலைவன் ஒற்றை முத்தத்தால்.

அவன்!

கவிதை எழுதத் / தெரியாதென்கிறான்
என்னை / கவிதையாக்கும் / அவன்

தலைவியையே கவிதையாக மாற்றும் தலைவனுக்கு கவிதை எழுதிடத் தெரியாமலா இருக்கும். தலைவன் சொல்லும் பொய்யை தலைவி கண்டுபிடித்து விடுகிறாள். இனி தலைவன் கவிதை எழுதி விடுவான் என்பது உண்மை.

தேன் நீ!

வேப்பம் பூ / நாட்களின் நடுவில்
துளி நேரத் தேனாய் / நீ!

சோகமான கவலையான நாட்களில் தலைவி தலைவனைச் சந்திக்கும் துளிநேரம் தேன்துளி போல இனிக்கும் என்பது உண்மை தானே.

எரியமாகிறேன் நான்!

கவிதைகளிலும் / கதைகளிலும் / கண்டிராத
காதலை / கண் வழி கடத்துகிறாய்!
நிலைத்த பார்வையில் / நிரம்பி வழியும்
காதலில் / நிலை கொள்ளாமல் / நீந்தும் கால்கள்
கற்ற கல்வி என்ன / கடமை என்ன / காத்து வந்த
கண்ணியமெல்லாம் / காணாமல் போனதே!

தலைவன் தலைவியை இமைக்காமல் உற்றுநோக்கி கடத்தி விடுகிறான். கண்வழியே கடத்துகின்றான். கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகளை எல்லாம் ஒற்றைப் பார்வையில் தகர்த்து விடுகிறான். காதல் ரசவாதக் கவிதைகள் நூல் முழுவதும் நிரம்பி உள்ளன. காதலர்கள் இளம் இணையர்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய காதல் கவிதை நூல் இது.

காதல் போதை

அந்த / திராட்சை ரசமும் / நானும் ஒன்று தான்
நிறத்தில் மட்டுமல்ல / ஒரே காதலோடு
பெருகும் சுவையோடு / காத்திருப்பதிலும் தான்!

சுவையோடு காத்திருக்கும் திராட்சை ரசமும் தலைவியும் ஒன்று தான் என்ற ஒப்பீடு நன்று. நிற ஒப்பீடும் நன்று. காதல் ரசம் சொட்டச் சொட்ட காதல் கவிதைகள் வடித்துள்ளார்.

கவிதாயினி தீபிகா சுரேஷ் அவர்களின் ‘வேறென்ன வேண்டும் களவு போக’ நூலின் மூலம் நமது உள்ளங்கள் களவு போகின்றன. காதல் கவிதைகள் படிக்க சுகமானது சுவையானது அவரவர் காதலை அசை போட்டுக் கொள்ள உதவும் விதமாக மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றன கவிதைகள், வாழ்த்துகள்.--

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (16-Sep-21, 5:59 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 57

புதிய படைப்புகள்

மேலே