பத்தும் பசிவந்திடப் பறந்து போம் – நல்வழி 26
நேரிசை வெண்பா
மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம். 26
- நல்வழி
பொருளுரை:
பசிநோய் வந்தால் மானமும், குடிப்பிறப்பும், கல்வியும், ஈகையும், அறிவுடைமையும், தானமும், தவமும், உயர்வும், தொழின் முயற்சியும், தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய இப்பத்தும் விட்டோடிப்போம்.
கருத்து:
மான முதலிய எல்லா நலங்களையும் கெடுத்தலினாலே பசி நோயினுங் கொடியது பிறிதில்லை,
தானம் தக்கார்க்கு நீருடன் அளிப்பது; பதவியும் ஆம்
விளக்கம்:
ஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் "பசி வந்தால் பத்தும் பறக்கும்" என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும்.