நன்று புரிந்து புகழறம் பூண்டனரேல் விண்ணோர் விருந்தினர் ஆவர் - வரம், தருமதீபிகை 882

நேரிசை வெண்பா

பொன்றி அழியும் புலையுடல் இவ்வழி
நின்றுள போதே நிலைதெரிந்து - நன்று
புரிந்து புகழறம் பூண்டனரேல் விண்ணோர்
விருந்தினர் ஆவர் விரைந்து 882

- வரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அழிந்து ஒழிகின்ற இழிந்த ஊன உடல் ஈண்டு அழியாமல் உள்ள பொழுதே தெளிந்த அறிவோடு புகழ் புண்ணியங்களைச் செய்து கொள்பவரே சிறந்த மேலோராய் உயர்ந்து திகழ்வர்; அவரைத் தேவர் விரைந்து விருந்தினராய் உவந்து கொள்வர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எவ்வழியும் யூகித்து உணரும் திறம் மனிதனிடம் தனியுரிமையாய் அமைந்துள்ளது. யூகி, விவேகி என விளங்கி நிற்பவர் உயர்ந்த மேதைகளாய் மதிக்கப்பட்டுள்ளனர் மதிநலம் மனிதனுக்கு அதிசய மகிமைகளை அருளி வருதலால் அது திவ்விய ஒளி என்று எவ்வகையோரும் புகழ்ந்து போற்றப் பெற்றது.

உற்ற துயர்கள் யாவும் நீங்கி உயிர் உயர்நிலை அடைய ஒளி நீட்டி வழிகாட்டி யருள்வதே உயர்ந்த மதியாய்த் தெளிந்து கொள்ள வந்தது. அந்தக் காட்சியும், மாட்சியும், ஆட்சியும் இழந்த அளவு அது மழுங்கலாய் இழிந்து மறைந்து போகிறது.

நல்ல அறிவுக்கு அடையாளம் பொல்லாத புலைகளை ஒதுக்கி மனிதனைப் புனித நிலையில் உயர்த்தி வருவதேயாம். உரிய அறிவு நலமாய்ப் பெருகி வரும்போது அதனை உடையவனும் உயர்ந்த மனிதனாய்ச் சிறந்து ஒளி மிகுந்து எழில் நிறைந்து வருகிறான்.

உருவத்தால் மனிதனாயினும் உள்ளத்தே நல்ல அறிவு இல்லையானால் அவன் புல்லிய மிருகமாகவே எள்ளி இகழப் படுகிறான். உற்ற உணர்வு ஒழிந்த அளவு உயர் பிறப்பும் இழிந்தது.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

மக்கட் பிறப்பெனும் மாத்திர மல்லது
மிக்க வெளிற்று விலங்குக ளேயவர்
நக்க வுருவினர் நாணா வொழுக்கினர்
தொக்கனர் மண்ணே துளைத்துண்டு வாழ்வார் 865

- துறவுச் சருக்கம், சூளாமணி

அல்வழியை நாணி விலகி நல்வழியை நாடி ஒழுகுவோரே நல்ல மக்கள்; அல்லாதவர் மக்கள் வடிவம் மருவியிருந்தாலும் பொல்லாத காட்டு விலங்குகளே என இது விளக்கியுள்ளது

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

நன்று தீதென்(று) இயல்தெரி நல்அறி(வு)
இன்றி வாழ்வதன் றோவிலங் கின்னியல்?
நின்ற நன்னெறி நீஅறி யாநெறி
ஒன்றும் இன்மையுன் வாய்மை உணர்த்துமால். 120

தக்க இன்ன, தகாதன இன்னவென்(று)
ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள
மக்க ளும்விலங் கே;மனு வின்நெறி
புக்க வேலவ் விலங்கும்புத் தேளிரே. 121

- வாலி வதைப் படலம், கிட்கிந்தா காண்டம், இராமாயணம்

வாலியை நோக்கி இராமன் இவ்வாறு கூறியிருக்கிறான்.

இந்தக் கவிகளின் சுவைகளையும், பொருள்களின் நிலைகளையும் கருதியுணர்பவர் அரிய பல உறுதி நலங்களை அறிந்து கொள்ளுவர். நல்ல விவேகியாய் நெறிமுறையே ஒழுகி வருவோனே மனிதன் ஆகின்றான்; அங்ஙனம் ஒழுகாதவன் பிறப்பால் மனிதனானாலும் இழிந்த மிருகமே என்பதை இங்கே நன்கு தெரிந்து நயங்களை உணர்ந்து கொள்கிறோம்.

ஒருவனுடைய சிறந்த அறிவுக்குப் பயன் அவன் பிறந்த பிறவியின் பயனை விரைந்து அடைந்து கொள்வதேயாம். மனித தேகம் கிடைப்பது மிகவும் அரிது; அருமையான அது உரிமையாய் அமையினும் விரைவில் அழியும் இயல்பினது; உடல் அழிந்து விழுமுன் உயிர்க்கு இனிய உறுதி நலனை உறுகின்றவனே அரிய பெரியவனாய் உயர்ந்து உய்தி பெறுகின்றான்.

நிலையில்லாத நிலைகளை நேரே தெரிந்திருந்தும் நிலையான பேரின்ப நிலையை அடையாமல் கழிவது அவல வாழ்வாம்.

நேரிசை வெண்பா

இளமை கழியும்; பிணி,மூப்(பு), இயையும்;
வளமை, வலி,இவை வாடும்; - உளநாளால்,
பாடே புரியாது, பால்போலும் சொல்லினாய்!
வீடே புரிதல் விதி 21 ஏலாதி

இளமை, செல்வம் முதலியன கழிந்து போவதையும், முதுமை, நோய் முதலியன புகுந்து கொள்வதையும் கண்ணாரக் கண்டிருந்தும் கதி காணாமல் மண்ணாய் மடிவது மதியாகாது எனக் கணிமேதையார் இவ்வாறு காட்டியிருக்கிறார். துன்பத் தொடர்புகளைத் தொடாமல் நீங்கி இன்ப வீட்டுக்கு உரிய வழியை மனிதன் விழிதிறந்து விரைந்து காண வேண்டும் என்பதை மேலோர் யாவரும் ஒளி மிகுந்த மொழிகளால் உணர்த்தியுளார்.

பிறந்தவர் எவரும் இறந்து போவர்; சாவை யாரும் நீக்க முடியாது; ஆயினும் இந்த யாக்கை முடிவை ஆக்கமாய் அமைத்துக் கொள்ள வேண்டும். பொன்றும் உடலைப் பொருந்தி வந்தவர் புண்ணிய நீர்மை மருவி நின்றால் என்றும் இனியராய் அவர் நின்று திகழ்வர். தேவரும் அவரை உவந்து உரிமை செய்து கொள்வராதலால் விண்ணோர் விருந்தினர் என நேர்ந்தார்.

தரும நீதியோடு வாழ்ந்து வருபவர் இருமையும் பெருமையுறுகின்றார். அவருடைய வாழ்வு மனித சமுதாயத்துக்கு இனிய ஒரு புனித போதனையாய் மருவி வருகிறது

Live righteously; you shall die righteously. - Ovid

நீ நீதியாய் வாழ்; உன் சாவு நீதியாய் வரும்' என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணரவுரியது.

பிறப்பின் பயனைப் பெற்றுக் கொண்டவர் இறப்பில் இன்புறுகின்றனர். புண்ணியம் பொங்கி வர வாழ்வதே புனித வாழ்வாம். அவ்வண்ணம் வாழ்பவனே வானவன் ஆகிறான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Sep-21, 1:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே