முற்பிறப்பில் செய்தவினை ஊழாகிப் பிற்பிறப்பில் வந்து பிடிக்கும் - விதி, தருமதீபிகை 892
நேரிசை வெண்பா
முற்பிறப்பில் செய்து முடிந்தவினை ஊழாகிப்
பிற்பிறப்பில் வந்து பிடிக்குமால் - இப்பிறப்பில்
நல்வினைக்கும் தீவினைக்கும் நாயகனீ ஆதலினால்
ஒல்லும் வகையை உணர் 892
- விதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
முன் பிறவியில் செய்தவினை ஊழாய் ஓங்கிப் பின் பிறவியில் வந்து பிடிக்கிறது; இந்தப் பிறப்பில் நல்ல வினைக்கும் தீய வினைக்கும் நீயே நாயகனாதலால் நல்லதை ஓர்ந்து ஒல்லையில் செய்து கொள்; அதுவே உயர் சுகம் நல்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
எவ்வகையானும் செய்தவினை செய்தவனை எவ்வழியும் தப்பாமல் வந்து சேர்ந்து கொள்ளுகிறது. அது நல்வினையானால் வளமாய் இன்பம் தருகிறது; தீவினையெனின் கொடுமையாய்த் துன்பம் புரிகிறது. வினைகளின் தொடர்பு விசித்திரமுடையது
நேரிசை வெண்பா
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு. 101
- பழவினை, நாலடியார்
ஆயிரம் பசுக்கள் கூடியிருந்தாலும் ஒரு இளங்கன்று விரைந்து போய்த் தன் தாயை அடைந்து கொள்ளும்; அதுபோல் எவ்வளவு மனிதப்பரப்பு விரிந்திருந்தாலும் வினை தன்னைச் செய்தவனைத் தவறாமல் தழுவிக் கொள்ளும் என இது விளக்கியுள்ளது. தாயும், கன்றும் போல வினையும் வினையாளனும்; எனவே தொடர்பும் தொன்மையும் தோய்வும் அறியலாகும்.
நல்வினையால் இன்பமும், தீவினையால் துன்பமும் உயிரினங்கள் தொடர்ந்து யாண்டும் நுகர்ந்து வருகின்றன.
நல்வினை தீவினை என்றுஇரு வகையால்
120 சொல்லப் பட்ட கருவினுள் தோன்றி
வினைப்பயன் விளையுங் காலை உயிர்கட்கு
மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்
- 24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை, மணிமேகலை
இருவகை வினைகளின் இயல்புகளை இது உணர்த்தியுள்ளது.
கோவலன் சரித்திரத்தை விரித்து உரைத்திருக்கும் சிலப்பதிகாரம் என்னும் காவியம் வினைப்பயனைத் தெளிவாக விளக்கவே விளைந்து வந்துள்ளது. ’ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்பதைக் காட்டவே இப்பாட்டுடைச் செய்யுளை யாம் காட்டுதும் என இளங்கோவடிகள் வழங்கியுள்ளமை ஈங்கு உளங்கொள வுரியது.
தன் கணவனை அநியாயமாய் மன்னன் கொன்று விட்டான் என்று கண்ணகி உள்ளம் கொதித்து மதுரையை எரிக்க நேர்ந்த போது பராசக்தி அப்பத்தினி எதிரே தோன்றிப் பழவினை விளைவுகளை நயமாய் விளக்கியருளினாள். அயலே வருவது காண்க.
கடிபொழில் உடுத்த கலிங்கநல் நாட்டு,
வடிவேல் தடக்கை வசுவும், குமரனும்,
தீம்புனல் பழனச் சிங்க புரத்தினும்,
காம்பெழு கானக் கபிலபுரத்தினும்,
அரைசாள் செல்வத்து, நிரைதார் வேந்தர் 5
வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த
தாய வேந்தர் தம்முள் பகையுற,
இருமுக் காவதத்(து) இடைநிலத்து யாங்கணும்,
செருவெல் வென்றியின், செல்வோர் இன்மையின்,
அரும்பொருள் வேட்கையின் பெரும்கலன் சுமந்து, 10
கரந்துறை மாக்களின் காதலி தன்னொடு,
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர்
அங்கா டிப் பட்(டு) அருங்கலன் பகரும்
சங்கமன் என்னும் வாணிகன் தன்னை,
முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவன் 15
வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்,
பரதன் என்னும் பெயரனக் கோவலன்
விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்
“ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு,
வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழி; 20
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி,
நிலைக்களம் காணாள், நீலி என்போள்,
“அரசர், முறையோ? பரதர், முறையோ?”
ஊரீர், முறையோ? சேரியீர் முறையோ?” என,
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு: 25
எழு நாள் இரட்டி எல்லை சென்றபின்,
“தொழு நாள்இதெ”னத் தோன்ற வாழ்த்தி,
மலைத்தலை ஏறி,ஓர் மால்விசும்பேணியில்
கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள்,
“எம்உறு துயரம் செய்தோர் யாவதும் 30
தம்உறு துயரம் இற்(று)ஆகுக” என்றே
விழுவோள் இட்ட வழுஇல் சாபம்
பட்டனிர் ஆதலின், கட்டுரை கேள்நீ:
உம்மை வினைவந்(து) உருத்த காலை,
செம்மை யிலோர்க்குச் செய்தவம் உதவாது: 35
வார்ஒலி கூந்தல்!நின் மணமகன் தன்னை
ஈர்ஏழ் நாள்அகத்(து) எல்லை நீங்கி,
வானோர் தங்கள் வடிவின் அல்லதை,
ஈனோர் வடிவில் காண்டல் இல்’என,
மதுரை மா தெய்வம் மாபத் தினி்க்கு 40
விதிமுறை சொல்லி, அழல்வீடு கொண்டபின் 13.
- கட்டுரை காதை. கோவலனது முற்பிறப்பு வரலாறு, மதுரைக் காண்டம், சிலப்பதிகாரம்
முற்பிறப்பில் செய்த தீவினை பின் பிறப்பில் ஊழாய் உருத்து வந்து கோவலனைக் கொன்ற நிலையைத் தேவதை இவ்வாறு விளக்கி உரைத்துள்ளது. சங்கமன் என்பவன் ஒரு வணிகன்; அவன் நீலி என்னும் மங்கையை மணந்து இனிது வாழ்ந்து வந்தான்; அவ்வாறு வருங்கால் கலிங்க தேசத்திலே சிங்கபுரத்தில் இருந்த வசு என்னும் அரசனுக்கும், கபிலபுரத்தில் இருந்த குமரன் என்னும் குறுநில மன்னனுக்கும் பகை மூண்டது. அதனால் அந்நாட்டில் உணவுப் பொருள்கள் விலைகள் ஏறின; அங்கே போனால் நல்ல வியாபாரம் நடக்கும் என்று கருதித் தன் மனைவியுடன் சங்கமன் சிங்கபுரத்தை அடைந்தான்; தங்குவதற்கு ஓர் இடம் பார்த்த பின் கடைவீதியில் பண்டங்களை விற்று வந்தான்;
அயலிடத்திலிருந்து புதியனாய் வந்துள்ள இவன் அதிக சாதுரியமாய் வாணிகம் செய்து வருவதைக் கண்டு பரதன் என்பவன் பொறாமை கொண்டான்; அவன் அரசனிடம் அணுகி வேலை செய்து வந்தவனாதலால் இவன்மேல் கோள் கூறினான். எதிரியிடமிருந்து வேவு பார்க்கவே கரவாக இங்கு வந்துள்ளான்; இவனை ஒல்லையில் கொல்ல வேண்டும் என்று மூட்டினான்; அரசன் வணிகனைக் கொலை செய்யப் பணித்தான்;
அவன் கொலையுண்டு விழவே மனைவி கொடுந்துயரோடு துடித்தழுது பதைத்து ஒரு மலை மேல் ஏறி நின்று தன் உயிரை மாய்க்க நேர்ந்தாள்; அப்படி அவள் சாக மூண்ட பொழுது என் கணவனைக் கொல்வித்தவன் கொடிய கொலையுண்டு சாவான்; அவனுடைய மனைவி என்னைப் போலவே அழுது தவித்து அலமந்து அழிவாள்' என்று வயிறெரிந்து சபித்துச் செத்தாள்.
அன்று அவள் இட்ட சாபப்படியே இன்று முடிந்துள்ளது; விதியை விலக்க யாராலும் முடியாது என்று தெய்வம் கண்ணகியிடம் கூறிக் கண் மறைந்து போயது. அவள் கதி கலங்கி மதி மயங்கினாள். விதியின் விளைவுகளை இந்தச் சரிதம் அதிசய விநயமாய் விளக்கியுள்ளது.
தசரத மன்னன் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றான். சிங்கங்களையும் யானைகளையும் நாடி அலைந்தான்; எங்கும் காணாமையால் ஒரு நதியருகே குளிர்பொழில் நிழலில் ஒளிசெய்து நின்றான். அவ்வமையம் சலபோசனன் என்னுமோர் இளைஞன் அந்த ஆற்றில் நீர் எடுக்க வந்தான். தான் கொண்டு வந்த மண் கலசத்தில் தண்ணீரை அவன் மொண்டு கொண்டிருக்குங்கால் யானை வந்து நீர் அருந்துவதாக எண்ணி மன்னன் அம்பு தொடுத்தான். பாணம் பாயவே பையன் ஐயோ! என்று அலறி விழுந்தான். வேந்தன் விரைந்து வந்து பார்த்து மறுகி உருகி பரிவோடு தேற்றினான்:
'அரசர் பெரும! நான் ஒரு ஏழை; என் தாயும் தந்தையும் என்னையே நம்பியுள்ளனர்; இரண்டு கண்களும் அவர்களுக்கு யாதும் தெரியாது; நானே அவர்களை யாண்டும் பேணி வருகிறேன்; அதோ அந்தச் சோலை அருகே ஒரு ஆலமர நிழலில் இருக்கின்றனர்; மிகவும் தாகம் என்று சொன்னார்கள்; ஆகவே தண்ணீர் முகந்து போக இங்கு வந்தேன்; இவ்வாறு இடர் நேர்ந்தது. நீங்கள் யாதும் கவலையுற வேண்டாம்; ஊழ் மூண்டது; நான் ஈண்டு மாண்டு படுகிறேன்; ஒரே ஒரு வேண்டுகோள்; என் பெற்றோர் நீர் வேட்கையால் என்னை எதிர் நோக்கி ஆவலோடு இருப்பர்; இந்தக் கலசத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு போய் அவர்களுக்குத் தந்தருளுங்கள்; சாகும்போது அவர்களைத் திசைநோக்கிக் கைகூப்பித் தொழுததாகச் சொல்லுங்கள்” என்று இவ்வாறு சொல்லி முடித்ததும் அக்க உத்தம புத்திரனுடைய உயிர் பிரிந்தது.
அரசன் துயர் மீதூர்ந்து உருகி அழுதான். குறித்தபடியே கலசத்தில் சலத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் போனான். கண் தெரியாத அவர் ஆவலோடு "அப்பா இவ்வளவு நேரம் என்ன தாமதம்?' என்று தங்கள் மகன் எனக் கருதி இன்னலோடு கேட்டார். மன்னன் யாவும் சொன்னன்; மகன் இறந்தான் என்று அறிந்ததும் அந்த இருவரும் நெருப்பில் விழுந்த புழுப்போல் நெடிது துடித்து அழுதார். தசரதன் அவர்க்கு ஆதரவு பல கூறினான். "ஐயன்மீர்! நான் அயோத்தி வேந்தன்; இனம் தெரியாமல் பிழை நேர்ந்து விட்டது; இன்று முதல் நானே உங்களுக்குப் புதல்வன்; இரதத்தில் வைத்து உங்கள் இருவரையும் என் அரண்மனைக்குக் கொண்டு போகிறேன்; வேண்டிய பணிவிடைகளை விழைந்து செய்வேன்; உளைந்து வருந்த வேண்டாம்; என்னேடு வாருங்கள்' என்று கூறி மன்னன் உரிமையோடு வேண்டினான். அவர் யாதும் இசையாமல் அலமந்து அழுதார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 6)
கண்ணுள் மணிபோல் மகவை இழந்தும் உயிர்கா தலியா,
உண்ண எண்ணி இருந்தால், உலகோர் என்னென்(று) உரையார்?
விண்ணின் தலைசே ருதும்யாம்; எம்போல், விடலை பிரிய,
பண்ணும் பரிமா உடையாய்; அடைவாய், படர்வான்” என்னா 85
நகர் நீங்கு படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்
அந்த இருமுதுகுரவர் கூறியபடியே தசரதன் அடைய நேர்ந்தான். எங்கள் அருமை மகனைப் பிரிந்து நாங்கள் பரிந்து சாவதுபோல் நீயும் சாவாய்! என்று அவர் நொந்து கூறும் போது மன்னனுக்கு மைந்தர் பிறக்கவில்லை. பிள்ளை இல்லையே! என்று ஏங்கியிருந்தவனுக்கு அவர் வாய்மொழியால் புத்திரர் உண்டாம் என்று தெரிந்து உள்ளம் உவந்திருந்தான். இளமையில் தான் செய்தவினை முதுமையில் விதியாய் மூண்டு தன்னைக் கொல்ல நேர்ந்தது என்று முடிவில் கோசலையிடம் இவன் சொல்லியிருக்கிறான். இராமனைப் பிரிந்து தசரதன் இறந்தது ஊழ்வினையால் என்பதை இங்கே நன்கு உணர்ந்து கொள்ளுகிறோம். விதியின் ஆடல்கள் அதிசயங்களைக் காட்டி வருகின்றன.
வினை என்பது வெளியே இருந்து வருவது அன்று, தான் செய்து கொண்டதையே மனிதன் தவறாமல் அனுபவிக்கின்றான்.
’நல்வினைக்கும், தீவினைக்கும் நாயகன் நீ’ என்றது இன்பமும் துன்பமும் முறையே தருகிற இருவினைகளுக்கும் நீயே தனியுரிமையான கருத்தா என்பது தெளிவாய்த் தெரிய வந்தது.
All are architects of Fate, Working in these walls of Time. (Longfellow)
குறித்த ஆயுள் காலத்துள் உழைத்து வருகிற நாம் எல்லாரும் விதியின் சிற்பிகள் என லாங்பெல்லோ என்பவர் இங்ஙனம் குறித்திருக்கிறார். விதியின் விளைவுகளும் நுகர்வுகளும் மதி அறிய வந்தன. ஊழ்வினை வாழ்வுள் வளர்ந்து வருகிறது.
நல்ல எண்ணத்தோடு நல்ல கருமங்களைச் செய்துவரின் நல்ல விதியை நாம் உண்டாக்கிக் கொள்ளுகிறோம். அதனால் எல்லா இன்பங்களும் உளவாகும். இனிய விதி விளைந்து வரத் தனி மகிமைகள் விரைந்து வரும். அதனை இனிது ஆக்கிக் கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.