பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி – நல்வழி 31

நேரிசை வெண்பா

இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று; சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி. 31

– நல்வழி

பொருளுரை:

இலக்கண வழுக்களையுடைய செய்யுளினும் அஃதில்லாத வழக்கு நல்லது,

உயர் குலத்தினும் (அஃதில்லாத) மாட்சிமைப்பட்ட ஒழுக்கம் நல்லது;

தவறுதலையுடைய வீரத்தினும் தீராப்பிணி நல்லது;

பழிச் சொல்லுக்கு அஞ்சாத மனைவியோடு கூடி வாழ்தலினும் தனியே இருத்தல் நல்லது.

கருத்து:

இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும்

விளக்கம்:

இலக்கண பிழை உடைய பாட்டு எழுதுவதை விட, உரைநடை நல்லது.

உயர் குலத்தில் பிறந்து ஒழுக்கம் தவறுவதை விட உயிரை விடுவது நன்று,

திறமையில்லாத வீரத்தில் போர் களம் சென்று புறமுதுகிட்டு ஓடி உயிரை விடுவதை விட தீராத வியாதியினால் உயிர் போவது நல்லது.

தவறு செய்தால் பழிநேருமே என்று அஞ்சாமல் தவறு செய்யும் பெண்ணுடன் வாழ்வதை விட தனியாக வாழ்வது நல்லது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-21, 9:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

மேலே