கற்றறிந்தார் பூண்ட கடன் மூன்று – திரிகடுகம் 32

நேரிசை வெண்பா
(‘ண்’ ‘ன்’ மெல்லின எதுகை)

நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்கேலா
வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை - நன்மொழியைச்
சிற்றின மல்லார்கட் சொல்லலும் இம்மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன் 32

- திரிகடுகம்

பொருளுரை:

நூல்களில் சொற்களை ஆராய்ந்து நுட்பமாகிய பொருள்களை கொள்ளுதலும்,

நூல்களுக்குத் தகாத பயனற்ற சொற்களை பிறர் விரும்பினாலும் சொல்லாமலும்,

உயிர்க்கு உறுதி கொடுக்கும் நல்ல சொற்களைக் கீழான குணம் இல்லாதவரிடத்துச் சொல்லுதலும் ஆகிய இம் மூன்றும் பல நூல்களையும் படித்தறிந்தவர் மேற்கொண்ட கடமையாகும்.

கருத்துரை:

சொற் போக்குக்கு இயையப் பொருள் கொள்வதும், பயனற்ற சொற் கூறாமையும், நல்ல நூற்கருத்துக்களை அவற்றை விரும்பிப் போற்றுவார்க்குக் கற்பிப்பதும் கல்வியின் பயனாம்.

நுண்மொழி நோக்கிப் பொருள் கொளலும் என்பதற்கு நுட்பமாகிய பொருளை உணர்த்துஞ் சொற்களை ஆராய்ந்து அவற்றின் பொருளை உள்ளபடி உணர்ந்து கொள்ளுதல் எனவும் பொருள் கூறப்படும்.

வெண்மொழி – வெண்மைமொழி, வெண்மை – நுட்பமின்மை – கருத்தாழமின்மை;

சிற்றினம் – சிறுமை + இனம்.

சிறிய இனமாவது "நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லென்போரும், விடரும், தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு." இஃது அறிவைத் திரித்து இருமையுங் கெடுக்கும் இயல்பிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-21, 10:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே