ஊரெல்லாம் ஒன்றாய் வெறுத்தாலும் போமோ விதி – நல்வழி 30
நேரிசை வெண்பா
தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே; – வேந்தே!
ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றாய்
வெறுத்தாலும் போமோ விதி. 30
- நல்வழி
பொருளுரை:
அரசனே! தாம் தாம் முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினைகளை தாமரை மலரில் இருக்கின்ற பிரமன் விதித்தபடியே தாமே அனுபவிப்பார்கள்;
(தீவினையினாலே தூண்டப்பட்டுத்) தீங்கு செய்தவரை நான் யாது செய்யலாம்; ஊரிலுள்ளார் எல்லாருந் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது).
கருத்து:
தமக்கு ஒருவன் துன்பஞ் செய்யின், அத தாம் முன் செய்த தீவினைக்கீடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்ததென்று அமைவதே அறிவு.
விளக்கம்:
ஒருவன் தன்னுடைய முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினையின் பயனை வெள்ளை தாமரையில் இருக்கும் பிரம்மன் விதித்த விதி வழியே தானே தான் அனுபவிப்பார்.
மன்னனே (மனிதர்களே) ஆதலால் உங்களை துன்பப்படுத்தியவரை என்ன செய்யலாம்?
ஊரிலுள்ளார் எல்லாரும் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது).
ஒருவன் நமக்கு தீங்கு செய்யின் அது நாம் செய்த முன் பிறவியின் வினை என்று அறிந்து அவரை துன்பம் செய்ய கூடாது. அவரின் வினையை அவர் அனுபவிப்பார்.