மனமொழிமெய் தீமையுறா வண்ணம்நீர் செய்மின் சேமமே யாகும் செழித்து - விதி, தருமதீபிகை 893

நேரிசை வெண்பா

வினைவினையென்(று) அஞ்சி விளிகின்றீர் அந்த
வினைவிளைவை நீரே விளைப்பீர் - மனமொழிமெய்
தீமையுறா வண்ணம்நீர் செய்மின் அதன்பின்னே
சேமமே யாகும் செழித்து. 893

- விதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பழவினைகளை நினைந்து பயந்து சாகின்றீர்; அந்த வினை உம்மிடமிருந்தே விளைந்து வந்துள்ளது; உமது மனம், மொழி, மெய்களை நலமாய்ச் செய்து கொள்ளுங்கள்; அவ்வாறு செய்து கொண்டால் எவ்வழியும் உமக்கு இனிய சுகமேயாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அல்லல் நேர்ந்தபோது மனிதன் உள்ளம் கலங்குகிறான். அந்த அல்லல் எதனால் வந்தது? யார் தந்தது? இதனை அவன் சிந்தனை செய்ய வேண்டும். தான் வேதனை அடைதற்கு உரிய தீவினையை ஏதேனும் ஒருவன் செய்திருந்தால் ஒழிய அவனுக்கு யாதொரு கேடும் யாண்டும் எவ்வகையிலும் வருவதில்லை.

நேரிசை வெண்பா

செய்தவினை செய்தவனைச் சேரவரு மேயன்றி
எய்த அயலேதும் ஏறாதே - பெய்து
விளைத்த வினையே விதியாய் விரிந்து
கிளைத்து வருங்காண் கிளர்ந்து.

வினைகள் விளைந்து வருவதை இது விளக்கி வந்துள்ளது.

தான் செய்த கருமத்தின் பலன்களை மனிதன் யாண்டும் யாதும் தவறாமல் அனுபவித்து வருகிறான். அந்த வரவு எந்த வழியும் சந்ததமும் செவ்வையாய் முறையே நடந்து வருகிறது.

தினை விதைத்தவன் தினை அறுப்பான்;
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

என்பது பழமொழியாய் எங்கும் வழங்கப்படுகிறது.

நல்லது செய்தவனுக்கு நல்ல சுகங்கள் வருகினறன; அல்லது செய்தவனுக்கு அல்லல்களே நேருகின்றன. உழவன் எதை விதைத்தானோ அதுவே விளைவாய்ப் பெருகி அவனுக்கு வளமாய் வருகிறது; அவ்வாறே செய்த கருமங்களும் செய்தவனுக்குத் தம்முடைய பலன்களைத் தகவாய்த் தந்து வருகின்றன.

Whatsoever a man soweth, that shall he also reap [Blble]

மனிதன் எதை விதைத்தானோ அதையே அறுக்கிறான் என இது குறித்துளது. செய்த வினையின்படியே பலன் எய்த நேருமாதலால் சுகத்தை விரும்புகிற மனிதன் யாண்டும் நல்ல கருமங்களையே செய்யவேண்டும். வினை வழியே விளைவுகள் வருகின்றன.

வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது - மணிமேகலை

மனித தேகத்தை இது குறித்திருக்கிறது. முன்னம் செய்த வினைகளின்படியே உடல்களை எடுத்து வந்து உயிரினங்கள் ஈண்டு உலாவுகின்றன. உயிர் வாழ்வில் துயருறாமல் உயர வேண்டுமானால் யாண்டும் நயமான கருமங்களையே செப்துவர வேண்டும். கருமம் தீயது ஆயின் துயரங்கள் தோய்ந்து வரும்.

தாம் செய்த கருமத்தின் வழியே யாவரும் ஆடி வருகின்றனர். நல்வினை, தீவினை என்னும் இருவகைக் கருமங்களின் பலன்களை நுகரவே மனித உருவங்கள் மருவி வந்துள்ளன.

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை 52 – 54 சிவ புராணம், திருவாசகம்

மனித தேகம் தோன்றியுள்ள நிலையை இது துலக்கியுளது

நேரிசை வெண்பா

சும்மா தனுவருமோ சும்மா பிணிவருமோ
சும்மா வருமோ சுகதுக்கம் – நம்மால்முன்
செய்தவினைக் கீடாய்ச் சிவனருள்செய் விப்பதென்றால்
எய்தவனை நாடி இரு 101 சிவபோகசாரம்

தாம் செய்த வினைகளின்படியே சீவர்கள் உலகில் தோன்றியுள்ளனர்; வினைப் போகங்களை அவர்கள் உண்டு வருவதைச் சிவபெருமான் சாட்சியாய் நின்று கண்டு வருகிறான் என இது காட்டியுள்ளது. சீவ சாட்சி திவ்விய மாட்சியாய் நின்றது.

முன்பு இழைத்த வினைகளினாலேயே உழைத்துப் பிழைத்து உழந்து வருகிற இந்தப் பிறப்பு வந்துள்ளது. துன்பமும் கவலைகளும் தொடர்ந்து வருகின்றன. இன்பமும் அமைதியும் இடையிடையே சிறிது தோன்றி மறைகின்றன; அல்லலான இந்தப் பிறவித் தொல்லைகள் ஒழிய வேண்டுமானால், உள்ளத்தை வேறு பொல்லாத புலைகளில் அலையவிடக் கூடாது; நல்ல நிலையிலேயே ஒரு முகமாய் நிறுத்தின் வினைகள் யாதும் விளையாது; அவை விளையாதொழியின் பிறவி தீர்ந்து பேரின்பங்களே உளவாம்.

கட்டளைக் கலித்துறை

விதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன்கயிலைப்
பதியார் துடைப்பும்நம் பாலணு காதுப ரானந்தமே
கதியாகக் கொண்டுமற்(று) எல்லாம் துயிலில் கனவெனநீ
மதியா திருமன மே!இது காண்நன் மருந்துனக்கே. 42 பட்டினத்தார்

அல்லல் யாவும் நீங்கி அதிசய ஆனந்தம் அடையவுரிய ஒரு நல்ல வழியைப் பட்டினத்தார் தம் உள்ளத்தை நோக்கி இவ்வாறு உரைத்திருக்கிறார். மனம் புலன்களில் அலைய நேர்ந்தால் புலையான வினைகள் விளைந்து வரும்; அவ்விளைவால் தொலையாத துயரங்கள் தொடர நேருமாதலால் அவ்வாறு தொடராதபடி தம் சிந்தைக்கு நல்ல சிந்தனையை நயமாய் நன்கு தந்தருளினர்.

நேரிசை வெண்பா

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ(து) அல்லால் கவலைப் படேல்நெஞ்சே!
விண்ணுறுவார்க் கில்லை விதி. 37 நல்வழி

விதியை யாராலும் வெல்ல முடியாது; அது விளையாதபடி தம் உள்ளத்தை உண்மையான பரம்பொருள் மேல் செலுத்திவரின் அவர் விதியை வென்றவராய்க் கதி பெறுகின்றார் என ஒளவையார் இவ்வாறு அருளி யிருக்கிறார். விதியை வெல்லுதற்கு நம் மூதாட்டி காட்டியிருக்கும் காட்சி கருதி யுணரவுரியது.

மனம் அடங்கிவரின் வினை ஒடுங்கி விடும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-21, 4:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே