பொற்றோள் துணையாய்க் குற்றம் அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை - நீதிநெறி விளக்கம் 32

நேரிசை வெண்பா

ஒற்றின் தெரியா சிறைப்புறத் தோர்துமெனப்
பொற்றோள் துணையாய்த் தெரிதந்தும் - குற்றம்
அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று
முறையிடினுங் கேளாமை யன்று 32

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

வேவுகாரரால் தெரியப்படாத உண்மைகளை ஒதுக்கிடங்களிலிருந்து தெரிந்து கொள்வோம் என்று பொன்னாலான வீரவளை அணிந்த தனது தோளே தனக்குத் துணையாக நினைத்துக்கொண்டு போய் அங்கிருந்து அவற்றைத் தெரிந்து கொண்டும்,

குடிமக்களின் செய்கைகளில் குற்றமாவன இவைதாம் என்று துணிதல் அருமையானதென்று நினைத்து அக்குற்றங் காண்டலுக்கு அஞ்சுவதே நல்ல அரசாட்சி முறையாகும்.

அதுவே முறையாமன்றிச் குடிமக்களே போய்த் தங்குறைகளைச் சொல்லிக் கொண்டாலும் அதனைக் கேளாமலிருப்பது முறைமையன்று!

விளக்கம்;

இச்செய்யுள் அரசனாவான் குடிமக்களின் நலங்களை அவர்களிருக்குமிடத்தில் வேவுகாரர்களை அனுப்பி வரச் செய்து, அவர்கள் வாயிலாகத் தெரிந்து கொள்வதுமன்றி,அவர்களாலும் தெரிந்து கொள்ளப் படாத உண்மைகளைத் தன் தோளே துணையாகத் தானே நேரிற் சென்று அறிவதும்,

அங்ஙனம் அறிந்த விடத்தும் அவர் பாலுள்ள குற்றங்களை அறியாதொழிவதுமே நல்ல அரசாட்சி முறையாமன்றி, அவ்வாறு தன் ஒற்றர்களாதல் அல்லது தானாதல் போய் அவர் நலங்களை அறியாதொழிதலும், குடிமக்கள் தாமாகவாவது தன்னிடம் வந்து முறையிட்டுக் குறையிரக்கும் போது கூட அதனைக் கேளாமலிருப்பதும் முறையன்றாம் என்பதுணர்த்திற்று,

ஒற்று என்பது இங்கு நட்பினர் பகைவர் அயலவர் ஆகிய மூவகையாரிடத்தும் வேற்றுமையின்றி அவர்க்கு அவர் போல அவரோடு கலந்து அவ்வவரின் உண்மைச் செய்தியே அறிபவரை உணர்த்தும்.. போமிடத்துத் தனக்கு ஏதேனுந் தீங்குவரினும் போரிட்டுக் கண்டு வருவன் என்பதற்குப் ‘பொற்றோள் துணையா’ என்றார்.

தெரிதருதலென்பது இங்கு இறந்த காலத்தின் கண், தெரிதந்து என்று வந்தது; தெரிந்து என்பதுபொருள்.

கருத்து:

அரசனுக்குக் குடிமக்களிடத்தில் நன்மை காண்டலிலேயே கருத்திருக்க வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Sep-21, 8:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே