மெய்ந்நீர்மை மேனிற்பவர் மூவர் - திரிகடுகம் 35

நேரிசை வெண்பா
(’ந்’ ‘ண்’ மெல்லின எதுகை)
(ம’ய்’ந், மெ’ய்’ந் – ‘ய்’ இடையின ஆசு)

முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்
நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை - கண்டானும்
மைந்நீர்மை இன்றி மயலறுப்பான் இம்மூவர்
மெய்ந்நீர்மை மேனிற் பவர் 35

திரிகடுகம்

பொருளுரை:

கடலில் அலைபோல (தன்மனம்) எழுந்து அலையாத அறிவுடையவனும்; நுட்பமாகிய சிந்தனையினாலும், மிகுதியாகிய கேள்வியினாலும் நூல்களின் முடிவை (ஐயந்திரிபறக்) கண்டவனும்; குற்றத் தன்மை (தன்னிடத்தில்) உண்டாகாதபடி மனக்கலக்கம் ஒழித்தவனும் ஆகிய இம்மூவரும் அழிவின்மையாகிய தன்மையுடைய முத்தி உலகத்தில் நிற்பவராவர்!

கருத்துரை:

மெய்ப்பொருள் காணும் அறிவுடையவனுக்கும், நூல் தேர்ச்சி மிகுந்தவனுக்கும், உலகப் பற்றைவிட்ட வல்லவனுக்கும் முத்திபெற ஏது உண்டு.

முந்நீர் - கடல்: படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலைச் செய்யவல்ல நீர்: காரணக்குறி; இனி ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் ஆகிய மூன்று நீரும் சேர்ந்தது எனவும் கொள்ளலாம்;

இயங்குதல் - நடத்தல், செல்லுதல். மேதை – அறிவுடைமை, அறிவுடையவனுக்காயிற்று;

நுண்ணூல் - நுண்மையாகிய நூல்; மை - காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்கள். மேல்: பண்பாகு பெயர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Sep-21, 11:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே