கைப்பொருள் இல்லானை இல்லாளும் வேண்டாள் – நல்வழி 34
நேரிசை வெண்பா
கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்(று) உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்; - இல்லானை
இல்லாளும் வேண்டாள்;மற்(று) ஈன்றெடுத்த தாய்வேண்டாள்;
செல்லா(து) அவன்வாயின் சொல். 34
- நல்வழி
பொருளுரை:
கல்வி அறிவு உடையவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவர். கல்வி அறிவு இல்லாதவர்கள் அவ்வாறு மதிக்கப்படுவதில்லை.
ஆனால், கல்வி அறிவு இல்லாதவனுக்குச் செல்வம் இருந்தால் அவனையும் எல்லோரும் சென்று போற்றிப் புகழ்வார்கள்.
செல்வம் இல்லாதவனை அவனது மனைவி கூட விரும்பமாட்டாள்; அவனைப் பெற்ற தாயும் விரும்பமாட்டாள்; அவன் சொல்லும் சொல்லை யாரும் பெரிதாகக் கருதி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று செல்வத்தின் உயர்வை ஒளவையார் பாடியுள்ளார்.
விளக்கம்:
செல்வம் என்பது பலவகையான சொத்துகளைக் குறிக்கும். தோட்டம், வீடு, மாடு போன்ற பல வகையான சொத்துகளுடன் பணமும் செல்வம் ஆகும். செல்வம் இருப்பவர்களை எல்லோரும் போற்றுவார்கள். செல்வம் இல்லாதவர்கள் மதிக்கப்படுவதில்லை.
கைப் பொருள் = செல்வம், எதிர்கொள்வர் = வரவேற்பர், இல்லானை= செல்வம் இல்லாதவனை,
ஈன்று = பெற்று, இல்லாளும் = மனைவியும், வாயின் சொல் = வாய்ச்சொல், பேச்சு