நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை – நல்வழி 33

நேரிசை வெண்பா

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 33

- நல்வழி

பொருளுரை:

வலிய யானையின் மேலே பட்டுருவும் அம்பானது மெல்லிய பஞ்சின்மேலே பாயாது;

நெடுமையாகிய இருப்புப் பாரைக்குப் பிளவாத கருங்கற் பாறையானது பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்துபோகும்;

அவ்வாறே, வன்சொற்கள் இன்சொற்களை வெல்ல மாட்டாவாகும்; இன் சொற்களே வெல்லும்.

கருத்து:

வன் சொல் தோற்கும்; இன்சொல் வெல்லும்

விளக்கம்:

பெரிய யானையின் மீது அம்பு பாய்ச்சினால் அது அதைக்கொன்று விடும், அதே அம்பை பஞ்சு மூட்டையில் எறிந்தால், அது மூட்டையை துளைத்து வெளியே சென்று விடும், பஞ்சுக்கு ஒரு சேதாரமும் ஆகாது.

கடிய கடப்பாரைக்கு வளைந்து கொடுக்காத பெரிய பாறை, சிறிய செடியின் வேர் ஊன்றி வெடித்து உடைந்து விடும்.

அது போல் கண்டிப்பான குணங்களாலும், கடுமையான சொற்களாலும் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது.

மென்மையாக இன்சொல்லுடன் பழகினால் நம்மை யாரும் அழிக்க முடியாது, கடுமையான விஷயங்களையும் சுலபமாக சாதிக்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Sep-21, 6:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 390

மேலே