தினையளவே ஆனாலும் செய்தவினை பனையளவு துன்பம் பயக்கும் - விதி, தருமதீபிகை 894

நேரிசை வெண்பா

தினையளவே ஆனாலும் செய்தவினை முற்றிப்
பனையளவு துன்பம் பயக்கும் - வினைவிளைவில்
அந்தோஎன் றேங்கி அலமருவார் அம்முளையை
முந்தோவச் செய்யார் முனைந்து 894

- விதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

செய்த தீவினை தினையளவு ஆனாலும் அது பனை அளவு துன்பங்களை விளைக்கும்; அந்த அல்லல்கள் மூண்ட பொழுது அந்தோ என்று ஏங்கி அழுகின்றனர்; துன்ப மூலத்தின் முளையை முன்னதாகக் களையாமல் பின்னர் இன்னலுறுவது இழிமடமையாம்; மதிகேடான மடமையே விதியாய் அடர்கிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

வினையின் விளைவைத் தெளிவாய் விளக்குதற்குத் தினையும் பனையும் அளவாய் வந்தன. தினை அரிசி உருவில் சிறியது; பனை மரம் மிகவும் பெரியது; சின்ன ஒரு தீமையை நீ செய்தாலும் பின்னர் அது கொடிய நெடிய இன்னலை விளைத்து விடும் என்பதை உன்னி உணர இவை ஈண்டு உவமைகளாய் நேர்ந்தன.

தினை உணவுப் பொருள்; தின்ன உரியது; எவரும் விரும்பி உண்பது; வினையையும் அவ்வாறே மக்கள் விரும்பிக் கொள்வர் என்பது ஈண்டு நுண்மையாய் உணர வந்தது.

மடமையான பழக்கத்தால் தீமையைச் சிறிது செய்தாலும் பின்பு கொடுமையான பெரிய துயரங்களை அடைய நேர்கின்றனர். விளைகின்ற அல்லல் தெரியாமல் அவலமாயுழல்கின்றனர்.

அலமரல் - நிலை குலைந்து வருந்துதல்; தீமையைச் செய்து விட்டுப் பின்பு அதன் விளைவுகளான துன்பங்களை அனுபவிக்க நேர்ந்த போது நெஞ்சம் கலங்கி நெடிது வருந்தி அழுது புலம்புவது மனிதரிடம் கொடிய மடமையாய் நெடிது மருவியுள்ளது.

மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்
றறத்துறை மாக்கள் திறத்திற் சாற்றி
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும்
யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்
தீதுடை வெவ்வினை யுருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர். - சிலப்பதிகாரம், 14

தீமை செய்யாதீர்! செய்தால் வெய்ய துயரங்களை அடைய நேர்வீர் என்று பெரியோர்கள் எவ்வளவு வலியுறுத்திச் சொன்னாலும் யாதும் கேளாமல் தீவினைகளைச் செய்து பின்பு துன்பங்கள் புகுந்த பொழுது அந்தோ என்று அலமந்து அழுது புலம்புவது அவலமான பேதைகள் இயல்பாம் என இது குறித்துளது.

தான் செய்த வினையின் பயனை எவனும் அனுபவித்தே தீர வேண்டும்; இது விதியின் நியதி. எந்த வகையிலும் இந்த நியதியை யாரும் கடந்து போக முடியாது. இராகுலன் என்பவன் காந்தார நாட்டு மன்னன் மகன். நல்ல அழகன்; முன் கோபி; ஒரு நாள் அறிஞர் சிலர்க்கு விருந்து புரிந்தான்; அதில் தலைமையான சமையல்காரன் சரியாய் வேலை செய்யவில்லை என்று சினந்து அவனை அறைந்தான்; அவன் இறந்து போனான்; சில நாளில் கொடிய பாம்பு இவனைக் கொதித்துக் கடித்தது; உடனே இவன் துடித்து மடிந்தான்; பின்பு சோழ மன்னன் மகனாய்ப் பிறந்தான். உதயகுமாரன் என்னும் பேரோடு விளங்கியிருந்தான். ஒருநாள் மாலையில் இனிய சோலையுள் புகுந்தான்; அங்கே காஞ்சனன் என்னும் விஞ்சையன் வாளால் இவன் வெட்டுண்டு மாண்டான்; பெற்றதாய் பெருந்துயருழந்து அழுதாள்; அந்த அரசியை மணிமேகலை தேற்றினாள். வினையின் விளைவுகளை விளக்கி அத்தேவிக்கு இத்தவமகள் தெளிவு கூறிய மொழிகள் ஞான ஒளிகளாய் ஒளி வீசி வந்தன. சில அயலே வருகின்றன.

பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை
உடற்குஅழு தனையோ உயிர்க்குஅழு தனையோ
உடற்குஅழு தனையேல் உன்மகன் தன்னை
75 எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே
உயிர்க்குஅழு தனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்துஉணர்வு அரியது
அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்தொடி
எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்
80 மற்றுஉன் மகனை மாபெருந் தேவி
செற்ற கள்வன் செய்தது கேளாய்:
மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை
உடல்துணி செய்துஆங்கு உருத்துஎழும் வல்வினை
நஞ்சுவிழி அரவின் நல்உயிர் வாங்கி
85 விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே!
யாங்குஅறிந் தனையோ ஈங்குஇது நீஎனில்
பூங்கொடி நல்லாய் புகுந்தது இது.. 23 சிறைவிடு காதை, மணிமேகலை

மகனை இழந்து மறுகியழுத அரசிக்கு இவ்வாறு அறிவு கூறியிருக்கிறாள். சமையலாளைக் கொன்ற வல்வினை முதலில் அரவால் உயிர் வாங்கியது; பின்பு விஞ்சையன் வாளால் வெட்டி வீழ்த்தியது என விளக்கியிருக்கும் வித்தகம் உய்த்துணரத் தக்கது. தன்னைச் செய்தவனை எவ்வழியும் தொடர்ந்து வினை கொல்லும் என்பதை இங்கே நன்கு தெளிந்து கொள்ளுகிறோம்.

அசோதரன் என்பவன் பவனமாதேவன் என்னும் அரசனுடைய அருமை மகன். இனிய குணநீர்மைகள் உடையவன். ஒரு நாள் தனது அழகிய மனைவியோடு பொழிலிடையிருந்த பொய்கையில் நீராடினான்; அப்பொழுது அங்கே தாமரைச் செறிவுள் ஒரு அன்னக்குஞ்சைக் கண்டான். அதன் அழகு கண்ணைக் கவர்ந்தது; மனைவியும் பிரியமாய் விரும்பினாள்; அதனை எடுத்து வந்து அரண்மனையில் வைத்து அருமையாய் வளர்த்தான்; பொன்வள்ளத்தில் பால் ஊட்டி நாளும் நன்கு பேணி வந்தான்; ஒரு நாள் தந்தை கண்டான்; சிந்தை கவன்றான்: 'ஆ! இந்த இளங்குஞ்சைப் பிரிந்து தாய் வருந்துமே! யார் இது செய்தது? என்று அருகே நின்றவரை வினவினான். ’இளவரசு’ என்றனர். உடனே தனது இருக்கைக்கு வந்து மகனை வரவழைத்தான்; குமரன் வந்து வணங்கி நின்றான். அவனை அருகே இருத்தி, ’நீ அன்னப்பார்ப்பைப் பிடித்து வந்திருப்பது என் உள்ளத்தை வருத்துகிறது; அது தாயைப் பிரிந்து வருந்தியுள்ளது போல் நீயும் பெற்றோரைப் பிரிந்து சிறைப்பட்டு வருந்த நேருமே! வினை மிகவும் கொடியது; தன்னைச் செய்தவனைத் தவறாமல் அது இன்னல் செய்து விடுமே” என மன்னன் மிகவும் மறுகினான்.

சந்தக் கலிவிருத்தம்
(காய் காய் காய் மா)

பூவைகிளி தோகைபுண ரன்னமொடு பன்மா
யாவையவை தங்கிளையின் நீங்கியழ வாங்கிக்
காவல்செய்து வைத்தவர்கள் தங்கிளையின் நீங்கிப்
போவர்புகழ் நம்பியிது பொற்பிலது கண்டாய். 277

- முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

தந்தை கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மைந்தன் வருந்தினான்; தெரியாமல் செய்து விட்டேன் என்று மறுகி வணங்கித் தாதையிடம் விடைபெற்று மீண்டு வந்தான். அந்த அன்னக் குஞ்சை எடுத்துக் கொண்டு போய்ப் பழைய இடத்தில் சுகமாய் விட்டு மீண்டான். அறியாமல் அவம் செய்துவிட்டேனே என்று மனம் கவன்றான்; உடனே அரசைத் துறந்து தவம் செய்யப் போனான். அவனே பின்பு ஏமாங்கத நாட்டு மன்னன் மகனாய்ப் பிறந்தான். முன்னம் பறவைபால் செய்திருந்த சிறிய ஒரு தீவினையால் பிறந்த போதே தாயைப் பிரிந்து பருவம் வரும் வரையும் மறைவாயிருந்தான். சீவகன் என்று சிறந்த கீர்த்தியோடு உயர்ந்திருந்தவன் சரிதம் இவ்வாறு பிறந்து வந்துளது. பிறவிகள் விதியின் உறவுகளை அறிவிக்கின்றன.

தான் செய்தவினை தன்னை வந்து பற்றிக் கொள்ளும்; அதனை அனுபவியாமல் எவனும் தப்பமுடியாது என்பதை இதனால் உணர்ந்து கொள்ளுகிறோம். வினைகள் எவ்வழியும் தொடர்ந்து படர்ந்து அடர்ந்து வந்து தம் பயன்களை ஊட்டிவிடும் என்பதைக் காவிய சீவியங்கள் யாவும் ஓவியமாய்க் காட்டியுள்ளன.

நேரிசை வெண்பா

ஓடிப் பறந்தே உழந்தாலும் ஊழ்வினைதான்
கூடிப் புகுந்து குலாவலால் - நாடித்தான்
உள்ளியதைக் கொள்ள உறாதுகாண்; உள்ளாதும்
துள்ளிமுன் நிற்கும் தொடர்ந்து.

இதனை உள்ளி உணர்ந்து ஊழ்நிலை தெளிக.

ஒழிக என ஒழியா(து) ஊட்டும் வல்வினை;
இட்ட வித்தின் எதிர்ந்துவந்(து) எய்தி,
ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா; 10 நாடுகாண் காதை, புகார்க் காண்டம், சிலப்பதிகாரம்

இன்னிசை வெண்பா

உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா
பெறற்பா லனையவும் அன்னவாம்; மாரி
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல். 104

- பழவினை, நாலடியார்

விதியின் அதிசய நிலைகளை இவை விளக்கியுள்ளன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Sep-21, 8:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 63

மேலே