அயல் மாதர்மேல் வைப்பார் மனம் - நல்வழி 36

ஔவையார் எழுதிய ‘நல்வழி’யின் நாற்பது பாடல்களில் பெரும்பாலானவைகளின் இரண்டாம் அடியின் தனிச்சொற்களில் பொதுவான சொற்களே கையாளப்பட்டு இருக்கின்றன.

ஆனால் 30 ஆம் பாட்டில் வேந்தே என்றும், 36 ஆம் பாட்டில் ஒண்டொடீ என்றும் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

திருக்குறள் மற்றும் நாலடியாரில் இடம்பெற்றுள்ள பிறர்மனை விரும்பாமை என்ற அதிகாரங்களில் உள்ள பாடல்களில் ஆண்கள் பிறர்மனை விரும்பலாகாது என்றும், அதனால் ஏற்படும் கேடுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஔவையாரின் பாடலில், ஒண்டொடீ என்று பெண்ணுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

நேரிசை வெண்பா

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல் - ஒண்டொடீ
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம். 36

- நல்வழி

பொருளுரை::

இளமையழகும் ஒழுக்க நெறியும் உடைய மின்னுகின்ற கைவளையணிந்த பெண்ணே!

”நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும் தாம் அழிவை அடையுங் காலத்தில் தாம் கொண்ட குஞ்சு, முத்து, அரிசி, வாழைத்தார் ஆகிய தங்கள் கருக்களை தருவது போல, தங்கள் அறிவு, செல்வம், தாம் கற்ற கல்வி ஆகியவை அழிய நேரிடும் சந்தர்ப்பத்தில் மற்றவரின் மனைவி மேல் ஆசை கொள்வார்கள்” என்கிறார் ஔவையார். .

உயிரையும், நற்பொருட்களையும் தந்து நண்டு, சிப்பி, மூங்கில், வாழை அழிகின்றன.

ஆனால் மற்றவரின் மனைவி மேல் கொள்ளும் தவறான தீய ஆசையினால் ஒருவரின் அறிவு, செல்வம், கல்வி அனைத்தும் அழிய நேரிடுகிறது.

எனவே, பெண்ணே, அத்தகைய தீயவர்க்கு இடங் கொடுத்து விடாதே! அதற்குக் காரணமாய் இருந்து விடாதே! எனவும் ஔவையார் மாதரை எச்சரிக்கிறார்.

கருத்து:

ஒருவன் தன் மனைவியையன்றிப் பிற மகளிரை இச்சிக்கின், அஃது அவனிடத்துள்ள ஞானம் செல்வம் கல்வி என்னும் மூன்றுங் கெடுதற்கு அறிகுறியாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Sep-21, 3:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே