செம்மை நெறியோடு சேர்ந்தொழுகின் எம்மையும் மேன்மை விளையும் - வரம், தருமதீபிகை 885

நேரிசை வெண்பா

தம்முடைய தானம் தலைமைநிலை தாழாமல்
செம்மை நெறியோடு சேர்ந்தொழுகின் - எம்மையும்
மேன்மை விளையும் மிகுமதிப்பாம் மேலான
பான்மையே மேன்மை படும். 885

- வரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தமக்கு உரிமையாய் அமைந்த பதவியை யாண்டும் நிலை குலையாமல் செம்மையாகப் பேணி ஒழுகின் மேன்மையும் மதிப்பும் எவ்வழியும் மிகுந்து விளையும்; மேலான நீர்மையே சீர்மை மிகப் பெறும்; அந்தச் சீரிய நிலையைச் சேருக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

கருதிச் செய்யும் கருமங்களாலேயே மனிதருடைய வாழ்வு மரபாய் நடந்து வருகின்றது. வரம்பு, ஒழுங்கு, கட்டுப்பாடு என்பன வாழ்க்கையின் செப்பங்களை நுட்பமாய் வரைந்து வந்துள்ளன. செம்மையான வாழ்வே சிறந்த நன்மையாகும்.

காலத்தைக் கணித்துப் பருவம் தவறாமல் கருத்தோடு எவன் காரியம் செய்து வருகிறானோ, அவன் சீரிய கருமவீரனாய்ச் சிறந்து யாண்டும் உயர்ந்த செல்வங்களை அடைந்து திகழ்கிறான்.

விவேகமும் வினையாண்மையும் சாதுர்ய சாகசமும் மனிதனை உன்னத நிலையில் உயர்த்தி யருளுகின்றன. எண்ணமும் செயலும் நல்ல வண்ணமாய் உயர்ந்து வருமளவே உயர்ச்சிகள் உளவாகின்றன. உள்ளம் உயர உயர்வுகள் தெரிகின்றன.

தனக்கு வாய்த்துள்ள நிலைமையைத் தானம் என்றது. கருதும் கருத்தாலும் பேசும் பேச்சாலும் செய்யும் தொழிலாலும் மனிதனுடைய தகுதி தெரிய வருகிறது. இனிய நீர்மைகளைப் பழகி வருபவன் அரிய சீர்மைகளை மருவி மகிழ்கிறான்.

மேன்மை என்பது மேலான தன்மையிலிருந்து விளைந்து வருகிறது. கீழான புன்மைகள் ஒழிந்த அளவு அந்த மனிதன் மேலானவனாய் மேவி யாண்டும் மேன்மையோடு விளங்கி வருகிறான். விழுமிய நீர்மை கெழுமிய சீர்மையாம்.

எவ்வழியும் இதமான இனிய மொழிகளை ஒருவன் பேசி வரின் அவனுடைய வாழ்வு புனிதம் அடைந்து இனிமை சுரந்து வரும். பேசுகின்ற பெருமை மிருகங்களுக்கு இல்லை; மனிதனுக்கே தனியுரிமையாக அமைந்துள்ளது. இந்த வாக்கின் பாக்கியத்தை நலமாய்ப் போற்றி வருபவர் ஏற்றம் பெறுகின்றார்.

’நாவு நல்லதானால் நாடும் நல்லது’ என்பது பழமொழி. இனிய சொல்லே பேசுகின்றவன் எங்கும் இன்பம் பெறுவான்; அவரும் அவனை உவந்து போற்றி வருவர்; அரிய பலன்கள் அதனால் பெருகி வரும் என்பது இதனால் தெரிய வந்தது.

துன்புறுாஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறுாஉம் இன்சொ லவர்க்கு. 94 இனியவை கூறல்

இன்பம் கனிந்த இனிய சொல்லையுடையவர்க்குத் துன்பம் மிகுந்த வறுமை இல்லையாம் என இது குறித்துள்ளது.

இன் சொல்லாளனை எவரும் பிரியமாய்ப் பேணுவர்; அந்தச் சொல்லிலே தருமம் மருவியுள்ளதாதலால் அவனுக்கு அல்லல் இல்லை; யாண்டும் நல்ல சுகமே அனுபவிப்பான்; நலம் பல பெறுவான் என்பதை இங்கு நன்கு அறிந்து கொள்கிறோம்.

Who in his pocket hath no money,
In his mouth he must have honey. - Watkyns

’பையிலே பணம் இல்லாதவன் வாயிலே தேனை வைத்துக் கொள்ள வேண்டும்‘ என இது உரைத்துள்ளது. சுவையான இனிய மொழியைத் தேன் என்றது.

Give a sweet and gentle word. Herrick

இனிய வார்த்தையை அமைதியாய்ப் பேசு என இது குறித்திருக்கிறது. பேசும் பெருமையை மனிதன் தனி உரிமையாய் அடைந்து வந்துள்ளான். அதனைப் புனிதமாகப் பயன்படுத்தி வரின் இனிய பல மேன்மைகள் உளவாகின்றன. உண்மையை உணர்ந்து உறுதி செய்து கொள்வது பெரிதும் நன்மையாம்.

நேரிசை வெண்பா

மேலான மானுடத்தை மேவிநீ வந்துள்ளாய்
பாலான நீர்மை படிந்துயர்க - மாலாய்
இழிந்து திரியினோ ஈனப் பிறப்பாய்
அழிந்து கழிவாய் அறி

- கவிராஜ பண்டிதர்

இதனைச் சிந்தனை செய்து தெளிந்து கொள்ள வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Sep-21, 10:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

சிறந்த கட்டுரைகள்

மேலே