17 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 17
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

நமது எண்ணங்களின் மூலம் நாம் கட்டளையிடும் பணிகளை பிரபஞ்சத்துடன் கலந்து நிறைவேற்றும் தன்மையுடையது நமது ஆழ்மனம் ஆகும். நாம் எண்ணும் எண்ணங்களை ஆழ்மனதில் பதிய வைத்து விட்டால், உரிய காலத்தில் ஆழ்மனம் அதனை வெளிபடுத்தி பிரபஞ்ச சக்தியுடன் கலந்து நன்கு செயல்படுத்தும் தன்மை உடையது. எனவே நமது ஆழ்மனதில் நேர்மறை எண்ணங்களை பதிவு செய்து கொள்வதற்கு ஆன்மீக வழியில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். நமது நேர்மறை எண்ணங்கள்தான் நமக்கு இன்பத்தை மகிழ்ச்சியை மற்றும் மன அமைதியைத் தரக்கூடியது. ஆழ்மனதில் பதியும் எதிர்மறை எண்ணங்கள் கோபம், பொறாமை போன்ற தீய குணங்களை வெளிபடுத்தி மனிதனை துன்பத்தில் மூழ்க செய்து விடும். நமது ஆழ்மனதில் பதியும் நேர்மறை எண்ணங்கள் அன்பு, பண்பு, மனிதநேயம் போன்ற நற்பண்புகளை வெளிபடுத்தி இன்பத்தில் மூழ்கச் செய்வதோடு வாழ்வில் நாம் விரும்பும் தேடும் மனஅமைதியையும் கொடுக்கும். நேர்மறை எண்ணங்களை நமது ஆழ்மனதில் பதிய வைப்பதற்கு ஆன்மீக வழி நமக்கு பெரிதும் துணை புரியும். நன்கு வழி காட்டும்.

உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் நிறைந்த ஆனந்தம், மகிழ்ச்சி சுகத்தைத்தான் தங்கள் வாழ்க்கையில் பெறவேண்டும் என்று விரும்புகிறார்கள். குறைவில்லாத நிறைவான ஆனந்தம் மகிழ்ச்சி சுகம் என்றால் என்ன என்று சிந்தித்துப் பார்த்தால், பூர்ண ஆனந்தம் என்பது மோட்சம் என்று சாஸ்திரங்கள், வேதங்கள் இதிகாசங்கள் சுட்டிக்காட்டுகிறது. மனிதர்கள் தர்ம நியதிப்படி செய்யக்கூடிய செயல்கள்தான் புண்ணியத்தின் பலன்களைக் கொடுக்கும். அதேபோல் அதர்மப்படி செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் மனிதனுக்கு பாவப்பலன்களைக் கொடுக்கும். உலகில் எவையெல்லாம் தர்மம், அதர்மம் என்று சாஸ்திரங்கள், வேதங்கள், இதிகாசங்கள், கதைகள், பாடல்கள் மூலம் கூறுகிறது.

நாம் அறம், பொருள், இன்பம் இவற்றின் மூலமாக ஆனந்தத்தினை மகிழ்ச்சியை அடைகிறோம். நாம் தர்ம நியதிப்படி தானதர்மங்கள் செய்து எவ்வளவு புண்ணியத்தை நம் வாழ்வில் சேர்த்துக் கொள்கிறமோ, அந்தளவுக்கு ஆனந்தம் மகிழ்ச்சி சுகம் நமது வாழ்வில் கிடைக்கிறது. நாம் செய்த புண்ணியத்தின் பலன்களை நாம் மகிழ்ச்சியாக சுகமான வாழ்வாக அனுபவிக்கிறோம். நாம் செய்த புண்ணியத்தின் பலன்கள் தீர்ந்தவுடன் மனஅமைதியை இழக்கிறோம். அதனால் நாம் துன்பம் துயரங்களை அனுபவவிக்கிறோம். நாம் துன்பங்கள் துயரங்களை தாங்கிக்கொள்ள முடியாதபோது மீண்டும் புண்ணியத்தைத் தேடும் தானதர்ம செயல்களில் ஈடுபடுகிறோம். நாம் செய்த புண்ணியத்தின் பலன்கள் தீர்ந்து விட்டது என்பதை நமது உடலும் உள்ளமும் துன்பப்படும்போது கோடிட்டு உணர்த்தி விடும். எனவே நாம் எந்தவித பலனையும் எதிர்பாராமல் முடிந்தபோதெல்லாம், முடிந்தளவுக்கு தானதர்மங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது நமக்கு இழந்த ஆனந்தம் மகிழ்ச்சி எல்லாம் குறையாமல் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும். அதன் மூலம் நாம் விரும்பும் மன அமைதியை பெறலாம்.

பொதுவாக ஆனந்தம் மகிழ்ச்சி, சுகமான வாழ்க்கை நமக்குத் திடீரென்று கிடைத்து விடாது. சுகமான வாழ்வு வேண்டும் என்றால் புண்ணியச்செயல்களை தர்மநியதிப்படி விருப்பமுடன் நேர்மையுடன் முழுமையான ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். புண்ணியமும் திடீரென்று வந்து விடாது எந்தச் செயல்கள் செய்தால் புண்ணியத்தின் பலன்கள் நமது வாழ்வில் கிடைக்கும். எந்தச் செயல்கள் செய்தால் பாவத்தின் பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்ற அறிவினை நமக்கு வேதங்கள் இதிகாசங்கள் சாஸ்திரங்கள் ஆன்மீக நூல்கள் விளக்கிக் கூறுகிறது. நாம் புண்ணியப்பலன்கள் தரக்கூடிய தானதர்மங்கள் செய்யும்போது வாழ்வில் ஆனந்தம் மகிழ்ச்சியை பெற முடியும். நாம் விரும்பிச் செய்யக்கூடிய தானதர்மத்தினால் வரக்கூடிய புண்ணியப்பலன்களும் நிரந்தரமானதல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மகாபாரதப் போர்க்களத்தில் ஒரு காட்சி. கர்ணன் நண்பன் துரியோதனனுக்காக செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதற்கு போர்க்களத்தில் அர்ச்சுனன் அம்புபட்டு, போர்க்களத்தில் வீழ்ந்து வேதனையுடன் தேர்ச்சக்கரத்தின் மீது கர்ணன் சாய்ந்திருக்கிறான். அவன் உயிர் உடலை விட்டு பிரியாமல் போர்க்களத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது. மேலும் அர்ச்சுனன் அவன் மீது எய்யக்கூடிய அம்புகள் எல்லாம் கர்ணன் கழுத்தில் மாலைகளாக வந்து விழுகின்றன. அவன் செய்த தானதர்மங்கள் அப்போது தர்மதேவதையாக வந்து, அவன் உயிர் உடலை விட்டு பிரியாதபடி காத்து நிற்கிறாள். போர்க்களத்தில் அர்ச்சுனனின் பல அம்புகள் உடல் மீது தைத்தும் கர்ணன் உயிர் ஏன் அவன் உடலை விட்டு பிரிவதற்கு மறுக்கிறது என்பதை அப்போது கிருஷ்ண பராமாத்மா அறிந்துகொள்கிறான்.

எனவே கிருஷ்ணபகவான் போர்க்களத்தில் ஒரு முதிய யாசகன்போல் கர்ணன் முன் வந்து, அவன் சேர்த்து வைத்திருந்த புண்ணியத்தின் பலன்களை எல்லாம் தந்திரமாக யாசகமாக போர்க்களத்தில் பெற்று விடுகிறான். அதனால் கர்ணனிடமிருந்த புண்ணியப்பலன்களும் அவனை விட்டுப் பிரிந்தது. அதன்பின்தான் கர்ணனின் உயிர் அவன் உடலை விட்டுப் பிரிந்து சென்றது. எனவே புண்ணியத்தின் பலன்களும் நிரந்தரமானது அல்ல என்பதை மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் வரும் கர்ணன் கதை மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அவன் எந்தவிதமான பிரதிபலன்களையும் எதிர்நோக்காமல் கிருஷ்ணபகவானுக்கு தன்னோட புண்ணியத்தை எல்லாம் கர்ணன் யாசகமாக அளித்தான். அதனால் அவன் மோட்சம் என்னும் வீடு பேற்றினை கிருஷ்ணபகவானால் அடைந்தான் என்பதை மகாபாரதம் என்னும் இதிகாசம் நமக்கு எடுத்துக்காட்டும் நியதியாகும்.

ஆன்மீக நூல்களை நாம் ஏன் படிக்கவேண்டும். அதனால் நமக்கு என்ன பயன்கள் ஏற்படும் என்று சிந்தித்து பாருங்கள். நாம் மற்ற நூல்களை படிப்பதைவிட ஆன்மீக சம்பந்தப்பட்ட நூல்களை படிக்கும்போது மனதிற்கு ஒரு இனம்புரியாத தற்காலிகமான மகிழ்ச்சியும் மனஆறுதலும் கிடைப்பதை உணர்வதற்கு முடியும் ஆன்மீக நூல்கள் நமது நற்செயல்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறது. ஆன்மீக நூல்களைப் படிப்பதால் நமது வாழ்க்கை முறையானது மாறி விடுமா என்று சிலர் கேட்கலாம். மகாத்மாகாந்தி அரிச்சந்திரன் வரலாற்றை நாடகத்தின் மூலம் அறிந்ததால் சத்தியத்தினை தனது வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் .’தன்னையும் அறியாமல் உதயமானது’ என்று சத்தியசோதனை என்னும் நூலில் கூறியுள்ளார். அரிச்சந்திரன் வரலாறு காந்தியின் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்தது. இதனை நாம் உணர்ந்து கொண்டால் ஆன்மீக நூல்களை ஆழ்ந்து படிப்பதால் நமது வாழ்க்கைமுறை மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மோட்சம் என்றால் மனிதவாழ்வில் மனநிறைவு, பூர்ண திருப்தி என்று பொருள்படும். நான் மனநிறைவாக இருக்கிறேன் என்று கூறுபவரிடம் மீண்டும் மீண்டும் பலதடவை உங்கள் மனது அமைதிநிறைந்துள்ளதா என்று கேட்டுப்பாருங்கள் உடனே அவருக்குக் கோபம் வந்து விடும். மனநிறைவு பெற்றவருக்கு எப்படி கோபம் வரும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமது மனம் ஒரு பொருளின் மீது ஆசைப்படுகிறது. அந்தப்பொருள் நாம் விரும்பியபடி கிடைத்துவிட்டால் நமது மனம் நிறைவடைவதில்லை. மனித மனங்கள் எதிலும் திருப்தி அடைவதில்லை. நமது மனம் நிறைவு அடைந்ததுபோல் சில நேரங்களில் தோன்றும் ஆனால் மனித மனம் நிறைவு அடைவதில்லை.

மனம் ஒரு பொருளை அடைந்தவுடன் அதன் மூலம் மகிழ்ச்சியை உணர்ந்து கொள்கிறது. ஆனால் மனம் வேறு ஒரு பொருளைப் பார்த்தவுடன் அதனையும் அடைந்து அதன் மூலம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது. திருநெல்வேலி அல்வா சுவை மிக்கதுதான் என்று அனைவருக்கும் தெரியும். அந்த அல்வா சுவையை நாம் எதுவரைக்கும் சுவைத்து இன்பம் காணலாம் என்றால் நமது நாக்கில் இருக்கும்வரையில்தான் சுவையை உணர முடியும். அது நமது தொண்டைக்குள் இறங்கி விட்டால், அதன்பிறகு அல்வாவின் சுவையை உணர முடியுமா ? அதேபோல்தான் நாம் எந்தப் பொருளை அடைந்தாலும் நமது மனம் சிறிது நேரம்தான் மன நிறைவு கொள்கிறது. மீண்டும் மனதில் ஒரு வெற்றிடம். அது நிறைந்தவுடன் சிறிது காலம் மகிழ்ச்சி மீண்டும் ஒரு தேடல் இப்படி மனமானது ஆசையில் நிறைந்து, நிறைந்து மகிழ்ந்து ஏதோவொரு காரணத்தினால் மனம் வெற்றிடமாகிக்கொண்டே இருக்கிறது.

எடுத்தக்காட்டாக ஒருவர் ஆரம்பத்தில் இருசக்கர வாகனம் வாங்கினால் நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்கு சொகுசாக சென்று வரலாம் என்று அவருடைய மனம் நினைக்கிறது. இருசக்கர வாகனம் வாங்கி விட்டால் மகிழ்ச்சியாக மனநிறைவுடன் இருக்கலாம் என்று அவர் நினைக்கிறார். அவர் முயற்சி செய்து வங்கியில் கடன் வாங்கி அவர் நினைத்தபடி இருசக்கர வாகனமும் வாங்கி விட்டார். அவர் தான் நினைத்தபடி இருசக்கர வாகனம் வாங்கி விட்டதால் மனதில் ஓரளவு மகிழ்ச்சியும் அடைகிறார். அந்த மகிழ்ச்சி ஆனந்தம் அவருக்குச் சிறிது காலம்தான் நீடிக்கிறது. அவர் மனம் அதனால் மனநிறைவு அடைந்து விடுவதில்லை. அவர் மனம் சொகுசாகப் பயணம் செய்வதற்கு ஒரு கார் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று அவர் மனம் இப்போது சொகுசுக்காருக்குத் தாவியது. இதுபோல் மனிதமனம் ஒவ்வொரு பொருளையும் அடைந்தவுடன் திருப்தி அடையாமல் உலகில் உள்ள ஏதாவது ஒரு பொருளை அந்தப் பொருளினால் வரக்கூடிய ஆனந்தத்தை சுகத்தை மனம் நாடிச்சென்று கொண்டேயிருக்கிறது.

ஒரு குழந்தை தன்னோட தாயைக் காணாமல் இடைவிடாமல் அழுதுகொண்டு இருக்கிறது. அக்குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தால் அக்குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு, அந்த பொம்மையுடன் விளையாட ஆரம்பித்து விடுகிறது. மீண்டும் தன்னோட தாயின் நினைவு வந்தவுடன் விளையாடிக் கொண்டிருந்த பொம்மையைத் தூக்கி எறிந்து விட்டு தன்னோட அழுகையை தொடர ஆரம்பித்து விடுகிறது. இதேபோல்தான் மனிதர்கள் மனஅமைதிக்கு மகிழ்ச்சிக்கு ஆனந்தம் அடைவதற்கு ஒவ்வொரு பொருளையும் நாடி எதிலும் நித்தியமான மகிழ்ச்சியையோ ஆனந்தத்தையோ அமைதியோ கிடைக்காமல் மனம் குழம்பித் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த மனித மனம் ஆன்மீக வழியில் செல்லும்போது மன நிறைவு அடைந்து விடுகிறது. மனிதனுடைய மன நிறைவுக்குதான் மோட்சம் என்று கூறலாம். நமது ஆழ்மனதில் ஏற்படக்கூடிய மனநிறைவுதான் மோட்சம் ஆகும். மனிதர்களிடம் உள்ள மனம் மேலோட்டமான மனம், உள்மனம் மற்றும் ஆழ்மனம் என்று மூன்று பிரிவுகளாக இருக்கின்றது. மனிதனுடைய ஆழ்மனதுக்கு உண்டாகும் மன நிறைவுதான் மோட்சம் எனப்படும். அவனுடைய ஆழ்ந்த மனதில் ஏற்படக்கூடிய அமைதிதான் மோட்சம் என்று ஆன்மிகம் கூறுகிறது.

நாம் எந்தச் செயல்கள் செய்தால் எப்படிப்பட்ட புண்ணியப்பலன்கள் கிடைக்கும் என்பதையும், எந்தச் செயல்கள் செய்தால் எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டால் பாவங்கள் நம்மிடம் வந்து சேரும் என்பதை புராணங்கள் இதிகாசங்கள் வேதங்கள் எல்லாம் நமக்கு எடுத்துக் கூறுகிறது. உலகில் நாம் ஆன்மீக வழியில் செல்லும்போது நாம் அடையும் துயரங்கள் துன்பங்கள் ஆகியவற்றினை பற்றி அறிந்து கொள்ளலாம். அதாவது தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம் இத்தகையதொரு ஞானஅறிவைப் பெறுவதற்கு ஆன்மிகம் வழி காட்டுகிறது. நமக்கு நித்தியமான ஆனந்தம் மகிழ்ச்சி சுகமான வாழ்வு எது என்று அறியாமையினால்தான் வாழ்வில் நித்தியமான உண்மையான ஆனந்தத்தினை நம்மையும் அறியாமல் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். ஆன்மீக வழியின் மூலம் பயிற்சி பெற்று நமது ஆழ்மனதில் எதிர்மறை எண்ணங்களை புகுவதற்கு சிறிதும் இடம் கொடுக்காமல், நேர்மறை எண்ணங்களை நமது மனதில் வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது மனதில் நேர்மறை எண்ணங்கள் நிறையும்போதுதான் நாம் தேடும் விரும்பும் மன அமைதி கிடைக்கும். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (27-Sep-21, 10:33 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 52

மேலே