நல்வினையே அயராமல் ஆற்றுக பலனும் செய்த வினையளவே சேரும் - விதி, தருமதீபிகை 895

நேரிசை வெண்பா

இன்பம் உறவேண்டின் எவ்விடத்தும் நல்வினையே
அன்போ(டு) அயராமல் ஆற்றுக; - என்பலனும்
செய்த வினையளவே சேரும்; அயலொன்றும்
எய்த வருவ(து) இலை. 895

- விதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இன்பமே பொருந்த விரும்பின் எங்கும் என்றும் நல்ல வினைகளையே நயந்து செய்க; செய்த வினையின் அளவே பலன்கள் எய்த வருகின்றன; வேறு வகையில் யாதும் வருவது இல்லை; இந்த உண்மையை உணர்ந்து உறுதியை நாடிக் கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இருளில் வழி நடப்பவனுக்கு விளக்கு ஒளி தந்துதவி புரிகிறது; அதுபோல் மருளான உலக வாழ்க்கையில் மருவியிருக்கின்ற மனிதனுக்கு அறிவு நெறிமுறைகளை விளக்கிக் தெளிவு தருகின்றது. சென்றதும் நிகழ்வதும் வருவதும் ஆகிய மூன்று காலநிலைகளையும் ஊன்றியுணர்ந்து தன் உயிர்க்குறுதி நலம் காண்பவன் உயர்ந்த மதிமானாய்ச் சிறந்து திகழ்கிறான்.

மனித சமுதாயத்தில் பலவகையான மாறுபாடுகள் காணப் படுவதால் இந்தப் பிறவிக்கு முந்திய பிறவியின் தொடர்புகள் தோய்ந்திருப்பதை ஓர்ந்துணர்ந்து கொள்கிறான்.

காலையில் வேலை செய்தால் மாலையில் கூலி கிடைக்கிறது. வேலை செய்யாமல் சோம்பியிருந்தால் கூலி கிடையாது. முன்னே நல்ல வினைகளைச் செய்திருந்தவர் செல்வர்களாய்த் தோன்றுகின்றனர்; அவ்வாறு செய்யாதவர் வறியராய் நிற்கின்றார். இப்பிறவியில் ஊக்கி முயன்றாலும் ஆக்கங்களை அடைந்து கொள்ளலாம். ஊழின் வழியே வாழ்வு வளம் பெற்று வருகின்றது. நதி நீர் பரந்துவரின் பயிர்கள் வளமாய் வளர்ந்து வரும்; அதுபோல் விதி நீர் விரிந்துவரின் உயிர்கள் சுகமாய் வாழ்ந்து வரும். ஊழ் ஊட்ட உயிர்கள் உண்டு வருகின்றன.

நிலைமண்டில ஆசிரியப்பா

ஊழெனப் பட்ட தாழ்புனற் படுகரிற்
றெய்விக முதலாச் செப்புமும் மதகும்
ஒவ்வொரு மதகா யுடனுடன் றிறந்து
தாக மென்னுந் தனிப்பருங் காலிற்
10
போக மென்னும் புதுப்புனல் கொணர்ந்து
பாயுமைம் பொறியாம் வாய்மடை திறந்து
பருவம் பார்த்து வரன்முறை தேக்கலும்
இதத்துட னகித மெனுமிரண் டூற்றிற்
புதுப்புனல் பெருகிப் புறம்பலைத் தோட
15
வார்புன லதனை மந்திர முதலா
ஓரறு வகைப்படு மேரிக ணிரப்பி
விளைவன விளைய விளைந்தன வறுத்தாங்
கொருகளஞ் செய்யு முழவ னாகி
மாநிலம் புரக்கு மாசி லாமணி.. 11

- பண்டார மும்மணிக் கோவை, ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்

ஊழ் என்னும் பெரிய குளத்திலிருந்து தண்ணீர் பாய்ந்து வருதலால் உயிர்கள் ஆகிய பயிர்கள் செழித்து வளர்ந்து வாழ்ந்து வருகின்றன என்று இது குறித்துள்ளது. இதில் அமைந்துள்ள உருவக நிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும்.

எவ்வுயிர்க்கும்.இதமான இனிய காரியங்களை ஒருவன் செய்தால் அவை நல்வினையாய் ஓங்கி அவனுக்கு எவ்வழியும் இன்பங்களை அருளுகின்றன. நெல்லை விதைத்தவனுக்கு நல்ல அரிசி கிடைக்கிறது; அது போல் நல்லதைச் செய்தவனுக்கு நலங்கள் பல வருகின்றன. அல்லதைச் செய்தவன்.அவலமே அடைகிறான்.

நாம் செய்த கருமங்களின் வழியே சீவர்களுக்குச் சுக துக்கங்கள் உளவாகின்றன. நல்ல கருமம் செய்தவன் தருமவான் ஆகின்றான்: ஆகவே அவன் யாண்டும் இன்பமும் மேன்மையும் பெறுகின்றான். அல்லல் நேரினும் நல்லதே காண்கிறான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஆடகச் செம்பொன் கிண்ணத்(து)
..ஏந்திய அலங்கல் தெண்ணீர்
கூடகம் கொண்ட வாழ்நாள்
..உலந்ததேல் கொல்லும் பவ்வத்(து)
ஊடகம் புக்கு முந்நீர்
..அழுந்தினும் உய்வர் நல்லார்
பாடகம் போலச் சூழ்ந்த
..பழவினைப் பயத்தின் என்றான். 510

- காந்தருவ தத்தையார் இலம்பகம், சீவகசிந்தாமணி

தங்கக் கிண்ணத்தில் தண்ணீர் பருகுங்கால் ஒரு அரசன் விக்கிச் செத்தான்; அதே சமயத்தில் கப்பல் உடைந்து கடலில் வீழ்ந்த ஒரு மனிதன் தப்பிப் பிழைத்துக் கரையேறி வந்து வாழ்ந்தான்; அந்தச் சரித்திரங்களை இது விசித்திரமா விளக்கியிருக்கிறது. பழவினையின் விளைவுகள் அளவிடலரியன: அதன்வழியே யாவும் நடந்து வருகின்றன என்பது தெரிய வந்தது.

தலைஎழுத்து என்பது விதிக்கு ஒரு பெயர். முன்னமே செய்த கருமங்களின் படியே பிறப்பிலேயே பிரம்மா சீவர்களை வரைந்து விடுகிறான். அந்த எழுத்தின் வழியே இன்ப துன்பங்களை யாவரும் நுகர்ந்து யாண்டும் தொடர்ந்து வருகின்றனர்.

கட்டளைக் கலித்துறை

அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் சுடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையும் தீமையும் பங்கயத்தோன்
எழுதாப் படிவரு மோ?சலி யாதிரென் ஏழைநெஞ்சே!

- பட்டினத்தார்

விதி எழுதியபடியே யாவும் நடைபெறும் எனத் தம் நெஞ்சை நோக்கிப் பட்டினத்து அடிகள் இவ்வாறு கூறி யிருக்கின்றார்.

செய்த வினையின் படியே பலன்கள் எய்த வருகின்றன. நல்ல நினைவுகளோடு நல்ல வினைகளைச் செய்பவனே எல்லா வழிகளிலும் சிறந்து இன்ப நலங்களை அடைந்து மகிழ்கின்றான்.

நேரிசை வெண்பா

நல்ல சுகமாக நாளும்நீ வாழ்ந்துவர
நல்ல வழிஒன்று நாடினோ - அல்லலை
எவ்வழியும் எவ்வுயிர்க்கும் என்றுமே எண்ணாதே
அவ்வழியே ஆனந்தம் ஆம்

- கவிராஜ பண்டிதர்

இன்பம் விளையும் நிலையை இது இனிது விளக்கியுள்ளது. இதனைக் கருதியுணர்ந்து உறுதியோடு ஒழுகி உயர்ந்து கொள்ள வேண்டும். அல்லது கடிந்து நல்லது புரிந்து நலம் பல பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Sep-21, 10:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

மேலே