செய்த கொடுவினையின் துன்பம் தப்பாமல் நேரே தவறாமல் தாக்கும் - விதி, தருமதீபிகை 896
நேரிசை வெண்பா
அடுசிலையில் நின்றெழுந்த அம்புபோல் செய்த
கொடுவினையின் துன்பம் கொதித்துக் - கடிதேறித்
தப்பாமல் நேரே தவறாமல் தாக்குமே
அப்போது நோதல் அவம் 896
- விதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
எய்த வில்லில் இருந்து விடுபட்டு எழுந்த பாணம்போல் செய்த வினையிலிருந்து சீறி எழுந்த துன்பம் எவ்வழியும் யாதும் தப்பாமல் தாக்கி வருத்தும்; அப்பொழுது வருந்துவதால் யாதொரு பலனும் இல்லை என்கிறார் கவிராஜ பண்டிதர்.
வினையின்படி விளைவேயன்றி நினைவின்படி எவனும் அனுபோகங்களை அடைவதில்லை. முன்னம் செய்த கருமங்களின் பலன்களையே மருமங்களாய் மானுடங்கள் மருவி வருகின்றன.
கொடிய தீவினைகளைச் செய்தவன் துயரங்களை நுகர்ந்து துடித்து அயர்கின்றான்; இனிய நல்வினைகளை இழைத்தவன் இன்ப நலங்களைச் சுகித்து எவ்வழியும் களித்து வருகின்றான்.
பொல்லாத தீமைகளைச் செய்தவன் நல்ல சுகபோகங்களை விரும்புவது எட்டி விதையை நட்டவன் இனிய மாங்கனியைத் தின்ன விழைவதுபோல் இன்னலான மட்டித்தனமேயாம். கொள்ளி கொண்டு தலை சொரிந்து பிள்ளை அழும் பேதைமை போல் உள்ளி உணராமல் தீமையைச் செய்து கொண்டு துயரங்களில் அழுந்தி மனிதர் மறுகியழுது மடிந்த போகின்றார். மையல் நோக்கும், மாயப் போக்கும், மடமையும் வைய மாந்தரை நையப் புடைத்து நாளும் வதைத்து வருகின்றன.
தீய வழியில் ஒருவன் ஒருமுறை பழகினால் பின்பு அவன் நல்ல வழியில் வருவது அரிது; அந்த இழி பழக்கத்தால் அழி துயரங்களையே அவன் அடைய நேர்கின்றான். வினைவிளைவை உணராமல் வீணே விதியை நோவது மதி கேடாய் மருவியது.
செய்தவினை எய்த கணைபோல் குறி தவறாமல் பாய்கின்றது. அடுசிலை என்றது கொல்லும் தொழிலுடைய வில் என அதன் கோலம் தெரிய வந்தது. அல்லல் விளைவுகள் அச் சொல்லில் விளங்கி நின்றன. தீவினை தீய துயரங்களையே செய்கிறது.
எவரையும் வினை விடாமல் அடுதலால் அது அதிசய விதியாய்த் துதி செய்ய நின்றது. மணிமுடி துறந்து இராமன் கானகம் போனதும், அகில வுலகங்களையும் அடலாண்மையோடு ஆண்ட இராவணன் அவலமாய் மாண்டதும் விதியின் விளைவுகளே. அது ஆட்டியபடியே யாவரும் ஆடி வருகின்றனர்.
இளமையில் இராமன் உல்லாசமாய்க் கூனியின் முதுகில் ஒரு வில் உண்டையை வீசினான். அது அவளுக்கு வேதனை ஆயது; அந்தச் சிறிய தீவினையால் தனது பெரிய அரசை இழந்து இந்த இனிய கோமகன் கொடிய காட்டுக்குப் போக நேர்ந்தான். வினையின் பலன்கள் விசித்திரங்களாய் விரிகின்றன.
நல்ல தவத்தால் எல்லா நலங்களையும் எய்தியிருந்த இலங்கை வேந்தன் பின்பு பலர்க்கும் அல்லல் புரிந்தான்; முடிவில் சீதையின் உள்ளம் கொதிக்கச் செய்தான்; அதனால் அடியோடு அழிய நேர்ந்தான். விதியின் விளைவுகள் வியப்புகளை விளைத்து எங்கும் வியனாய் நிற்கின்றன. அதன் ஆற்றல்கள்.அளவிடலரியன.
தந்தை விரும்பியபடி அரசுரிமையை அடைய இராமன் இசைந்தான். முடிசூட்டு விழாவுக்குப் பலதேசங் களிலுமிருந்து அரசர்கள் வந்தனர்; நகரம் அதிசய நிலையில் அலங்கரிக்கப் பெற்றது. எவ்வழியும் இன்பக் களிப்புகள் பொங்கி எழுந்தன. அவ்வமயம் அரச மாளிகை மேல் ஏறி நிலா முற்றத்தில் நின்று இராச வீதிகளைக் கூனி பார்த்தாள்; அவள் அங்கே தோன்றி நின்ற தோற்றத்தைக் காவிய நாயகன் ஓவியமாய் வரைந்து காட்டியிருக்கிறார்; அந்தக் காட்சியை அயலே காண வருகிறோம்.
கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
1445 அந்நகர் அணிவுறும் அமலை, வானவர்
பொன்னகர் இயல்பெனப் பொலியும் ஏல்வையில்,
இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல்,
துன்னருங் கொடுமனக் கூனி தோன்றினாள் - இராமாயணம்
இக்கவியின் சுவையைக் கருதிக் காண வேண்டும். வினையின் விளைவை இனிது விளக்கியுள்ளது. இலங்கை தென் திசையில் இருக்கிறது; அயோத்தி வடகோடியில் உளது; இடைவெளி ஆயிரத்து எழுநூறு கல் நடை வழியாய் நிற்கிறது. இந்நகரின் உப்பரிகையில் ஏறி நின்றுள்ள அக்கிழவி இராவணனுடைய தீவினை நிழல்போல் நீண்டு தோன்றினாள் என்றது ஆன்ற பல பொருள்கள் தோன்ற நின்றது. மேலிருந்து கீழ் இறங்கியதும் கூனி கைகேசியிடம் கோள் மூட்டுவாள்; கொடுமை விளையும்; இராமன் மணிமுடி சூடான், சடை முடியனாய்க் காட்டுக்குப் போவான்; சீதையும் தொடர்ந்து போவாள்; அவளை இடையே இராவணன் கவர்ந்து செல்வான்; அதனால் அவன் குலத்தோடு அழிந்து ஒழிவான்; இக்க அழிவுகளை எல்லாம் தெளிவாய்த் தெரிய இவ்வுவமை வந்தது. வினையின் வரவு நினைவுற அரியது.
’இன்னல் செய் இராவணன்’ என்றது இனிய செய்து சுகமாய் வாழ்ந்து வந்தவன் இன்னலோடு அழிய நேர்ந்தமைக்கு உரிய காரணம் தெரிய நின்றது. செய்த தீவினை எவனையும் சீரழித்து அடியோடு தொலைத்து விடும் என்பதை இலங்கை வேந்தன் சரித்திரம் நன்கு துலக்கி நின்றது.
நல்வினை இனிய அமுதம்; தீவினை கொடிய விடம்.
தன்னை உண்மையாக உரிமையோடு நன்கு பேணுகின்றவன் புன்மையான தீமைகளைக் கனவிலும் கருதலாகாது. தீய எண்ணம் சிறிதே எனினும் அதனை எண்ணினவன் எவ்வழியும் தப்பாமல் அதன் வெவ்விய துயரை அனுபவிக்கின்றான். இயற்கை நியமம் யாதும் தப்பாத செப்பம் மிகவுடையது. அது ஆட்டியபடியே ஆருயிர்கள் யாண்டும் ஆடி வருகின்றன.
சந்தக் கலிவிருத்தம்
(காய் காய் காய் மா)
மெத்துதிறல் ஆடவரும் மெல்லியல்நல் லாரும்
சித்தமுற நன்கினொடு தீதுசெயல் ஊழே
உய்த்தபடி அல்லதிலை ஆம்உழவர் ஒண்செய்
வித்துபய னேயலது வேறுபெறல் ஆமோ? 50
- மார்க்கண்டேயப் படலம், அசுர காண்டம், கந்தபுராணம்
வித்திய விளைவை உழவர் பெறுதல்போல் பொத்திய வினையின் பலனையே இருபாலும் ஒருபாலும் கோடாமல் நுகர்கின்றன என இது குறித்துளது. உறுதி நலங்களை ஓர்ந்து சிந்தனை செய்து உயர்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.