நம்மை மதியாரை நாம்மதியோம் ஆயினமை எம்மை யுலகும் எதிர்மதிக்கும் - வரம், தருமதீபிகை 886
நேரிசை வெண்பா
நம்மை மதியாரை நாம்மதியோம் ஆயினமை
எம்மை யுலகும் எதிர்மதிக்கும் - நம்மை
மதியா தவரை மதிப்ப தவரைச்
சதியாகச் செய்த சதி 886
- வரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
நம்மை நன்கு மதியாதவரை நாம் எங்கும் மதிக்கலாகாது; அவ்வாறு மதியாமல் மதிப்போடு நின்றால் எல்லா உலகங்களும் நம்மை எதிர் நோக்கி மதிக்கும்; மதியாதவரை மானம் கெட்டு மதிப்பது அவரைச் சதிவஞ்சமாய்க் கெடுத்த அதிகேடாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்னும் ஆவல் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும் நன்கு உறைந்திருக்கிறது. மதிப்பு என்பது காரணக் குறியாய் மருவி வந்துள்ளது.
தக்க மதியுடையார் உவந்து மதிக்கும் உயர்வே உண்மையான மதிப்பாம். மணிகளின் தரம் அறிந்து மதிப்பவர் போல் மனிதருடைய தராதரங்களைத் தெளிந்த மதியுடையோரே மதித்தருளுகின்றார். தகுதி தெரிந்து தகவோடு மதிப்பவர் தக்கவராகின்றார்.
மதிகேடர் மதித்துப் புகழ்வதும், மதியாது இகழ்வதும் விதி ஆகா. தக்க மேலோர் மதிப்பதே மிக்க மேன்மையாம்.
இன்னிசை வெண்பா
அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால; - நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார் 163
- பெரியாரைப் பிழையாமை, நாலடியார்
உண்மையாய் ஓர்ந்து மதிக்கத் தக்கவர் உணர்வுடைய மேலோரே என இது உணர்த்தியுள்ளது. மதிப்பும் அவமதிப்பும் வெளியிலிருந்து வருவன அல்ல; உள்ளத்தின் தகுதி தகாமைகளின் அளவே மனிதனிடமிருந்து அவை உதயமாகின்றன.
செல்வம் கல்வி அதிகாரம் முதலியன மதிப்பை விளைக்குமாயினும் அவை நீதிநெறிகளோடு தோய்ந்த அளவுதான் தேர்ந்த மதிப்பாம். செருக்கு முதலிய சிறுமைகளோடு கலந்தபோது அவை அவமதிப்புகளையே அடைகின்றன. புல்லிய செல்வன் ஒருவன் நல்ல கல்விமானை நோக்கி ஒருமுறை எள்ளலாய்க் கேலி செய்தான். எவ்வளவு படித்தாலும் பணக்காரரை நச்சித்தான்; பண்டிதர்கள் வருகின்றார் என்று அவன் கிண்டல் செய்யவே புலவர் அவனைப் புன்னகையோடு பார்த்து நன்னயமாயுரைத்தார். அந்த உரையின் வேகம் விவேக ஒளியை வீசியது.
பெரிய அரசன் ஒருவன் மூத்திரம் பெய்யச் சாக்கடைக்குப் போனான்; அந்த அங்கணம் அவனைக் கண்டு களித்தது; மன்னர் மன்னவர் எல்லாரும் என் முன்னே வந்து தலை வணங்கி நிற்கின்றார் என்று சொன்னது; அதைப் போல் உள்ளது நீ சொல்லுவது எனச் சுவையாய்ச் சொன்னார். அவன் உள்ளம் நாணி ஒதுங்கிப் போனான். மதியாத மதிகேடரை மதித்துப் பேசினால் மேலும் அவர் மதிகெட்டு இழிந்து போவர்; அவ்வாறு ஈனமாயிழிந்து போகாதபடி ஞானமடைந்து யாரும் தெளிந்து கொள்ளச் செய்வதே சிறந்த மானமான தேர்ந்த மதிப்பாம்.
நேரிசை வெண்பா
நம்மை மதியாரை நாமுன் அவமதித்தால்
தம்மை யுணர்ந்தவர் தாழ்ந்திடுவார் - செம்மை
தெரியா தவரைத் தெரிய வுணர்த்தின்
மரியாதை யாகும் மதி
இந்த மானச தத்துவத்தை ஈண்டு உய்த்து உணர்ந்து கொள்ள வேண்டும். உண்மையுணர்வே நன்மை தருகிறது. உன்னை மதியாதவனை நீ மதிக்க நேர்ந்தால் உன்னை நீயே அவமதித்தவனாகின்றாய். அந்த அவமானத்தை விளைத்துக் கொள்ளாதே. உன் உள்ளத்தை உயர்த்தி வாழ்வதே எவ்வழியும் நன்மையாம். செம்மையும் சிறப்பும் திண்மையான சிந்தையில் உள்ளன. யாண்டும் தீரனாய் நின்று வீரனாய் விளங்குக.
நேரிசை வெண்பா
தம்மை இகழ்வாரை தாமவரின் முன்னிகழ்க;
என்னை அவரொடு பட்டது? - புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!
உறற்பால யார்க்கும் உறும் 117
- மெய்ம்மை, நாலடியார்
வருவன எவையோ அவை வந்தே தீரும்; மதிப்பிழந்து நில்லாதே: உள்ளந் துணிந்து மானத்தோடு உறுதியாய் வாழுக என ஊக்கியிருக்கும் இதன் நோக்கத்தை ஊன்றி உணர்ந்து கொள்க. மானம் உயிரினும் இனியது; அதனைப் பேணி வருவதே ஞானமாகும்.
நான்கு கோடி பொன் பெறும்படியான பாட்டு ஒன்று பாடியிருக்கிறேன்; அந்த அருமைப் பாட்டை உன்னிடம் உரிமையோடு நேரே கூற வந்துள்ளேன் என்று சோழ மன்னனை நோக்கி ஒளவையார் ஒரு முறை உல்லாசமாய்ச் சொன்னார். அரிய பொருளுடைய பெரிய கவி என அங்கிருந்தவர் யாவரும் ஆவலாய் வியந்தார். வேந்தன் அதனை விழைந்து கேட்க நேர்ந்தான். அப்பொழுது அப்பாட்டி பாடிய பாட்டு அயலே வருகிறது.
மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி யுறும் 41
உண்ணீருண் ணீரென்றே ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி உறும் 42
கோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுவதே கோடி யுறும் 43
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி யுறும் 44 ஒளவையார்
இதைக் கேட்டதும் அரசன் மகிழ்ந்தான். நாலுகோடி பொன் தர இசைந்தான்; இந்தக் கவியின் சுவையை நீ அறிந்து மகிழ்ந்ததே எனக்கு நாற்பது கோடி தந்த படியாம்; வேறு யாதும் எனக்கு வேண்டாம் என்று ஒளவை அவனை வாழ்த்திப் போனாள். தரம் குன்றாமல் வாழ்வதே தக்க மேன்மையாம்.
மதிப்பைப் பேணி, மரியாதையைப் போற்றி, நல்லவர்களோடு பழகி, சத்தியத்தைப் பாதுகாத்து வாழுக; அதுவே உத்தம வாழ்வாம் என இது போதித்துள்ளது. இதனைச் சாதித்து எவ்வழியும் தகுதியாக உள்ளத்தை உயர்த்தி வருவது நல்லது.
உலகம் உன்னை நன்கு மதிக்க வேண்டுமானால் உன் உள்ளத்தைப் பண்படுத்தி நல்லவனாய் நீ உயர்ந்து கொள்ள வேண்டும்.
தனக்கு மரியாதை தான்தேடான் ஆயின்
எனக்கவனால் எனன பயன்?
தன் மைந்தனை நினைந்து ஒரு தந்தை இவ்வாறு கூறியிருக்கிறார். மதிப்புடையவன் மணமுடைய மலர்போல் மாண்புறுகிறான்.
The best of lessons is to respect myself. [Southey]
எனக்கு மதிப்பை விளைத்துக் கொள்வதே உயர்ந்த படிப்பு எனச் சதே என்னும் ஆங்கில அறிஞர் இங்ஙனம் குறித்திருக்கிறார். தக்க தகைமை மிக்க மகிமையை விளைத்து வருகிறது.
He that respects not is not respected. [G. H]
மதிப்பைச் செய்து கொள்ளாதவன் மதிக்கப்படான் என இது உரைத்துளது. அரிய மேன்மை இனிய பான்மையால் அமைகிறது. இனிமைப் பண்பு இன்பங்களை அருளுகிறது.
உயர்வும் தாழ்வும் மனிதனுடைய செயல் இயல்களில் மருவியுள்ளன. நல்ல தன்மைகளை வளர்த்துவரின் மதிப்புகள் அங்கே தழைத்து வருகின்றன. உள்ளம் உயர்ந்து வர உலகம் உவந்து வரும். தனது மேன்மை தன்னுள்ளேயே தனிமையாயுளது.
இயல்பு இனிமையானால் உயர்வு உரிமை ஆகிறது என்கிறார் கவிராஜ பண்டிதர்.