இது கூட அரசியல்தான்

இது கூட அரசியல்தான்
குமார் தலை கவிழ்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் மனைவி அவனை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். எல்லாம் போச்சு, என்ற வார்த்தைகள் மட்டும் அவன் வாயில் இருந்து வந்ததை கேட்டாள் “ப்ளீஸ்” போனது போகட்டும் சும்மா கவலைப்பட்டு உடகார்ந்திருக்காதீர்கள் .ம்..என்று நிமிர்ந்தவன் கண்களில் நீர்திவலைகள் திரண்டன.
குமாருக்கு தற்போது நேரம் சரியாயில்லை என தெரிகிறது. அவன் தனியாக தொழில் தொடங்க தந்தையிடம் சண்டையிட்டு பங்கை பிரித்தவன் முதலில் ஒரு ஏஜன்ஸி ஆரம்பித்தான், அது ஆறு மாதம் கூட நடக்கவில்லை. ஓரளவு நட்டத்துடன் மூடிவிட்டான். அதன் பின் ஒரு “டிபார்ட்மெண்டல் கடை” ஒன்று ஆரம்பித்தான் அதுவும் அவன் காலை வாரிவிட்டது. கையிருப்பு கரைந்து கடன் ஏற ஆரம்பித்தது. ஒரு பெரும் தொகை கடன் வாங்கி “ரியல் எஸ்டேட் பிசினஸ்” ஒன்றை ஆரம்பித்தான் அது அரசியல் சூழ்நிலையில் அப்படியே நின்று விட்டது.
மனைவி வீட்டாரும் ஓரளவு வசதியுடனேயே உள்ளனர். தந்தையிடமோ, அல்லது மாமானாரிடமோ ஆலோசனை கேட்கலாம் என்று யோசனை கூறிய மனைவிக்கு உடனே மறுப்பு தெரிவித்து விட்டான். தன்மானம் போய்விடுமாம் மனைவியிடம் இவன் சொன்ன காரணம். இதனால் இவனுக்கு நேர்ந்த விளைவுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.
அங்கண்ணன் கடை பிரியாணீயை சாப்பிட்டு விட்டு வெளியே நின்று சுவாரசியமாய் பல் குத்திக்கொண்டிருந்த என் அருகே “சர்ரென்று” ஒரு கார் வந்து நின்றது. ‘ஏறு வண்டியில்’ அறிமுகமான அதிகார குரலுக்கு அடிபணிந்து காரில் ஏறிக்கொண்டேன். இவர் ஒரு அரசியல் புள்ளி, என்பதும், என் உதவி இவருக்கு தேவை என்பதும் புரிந்து கொண்டேன்.
என்னைப்பற்றி ஒரு சில வார்த்தைகள். நான் சமுதாய மக்களால் வெறுக்கப்படும் தொழிலை செய்து கொண்டிருப்பவன். இந்த காரை ஓட்டி வந்தவனைப்போல் பலருக்கு கை கட்டி அடியாள் வேலை செய்பவன், அடியாட்களையும் சப்ளை செய்து கொண்டிருப்பவன்.
காரில் ஏறியதும் ஒன்றும் பேசாமல் காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தவர் திடீரென்று முன்னால் சென்று கொண்டிருந்த காரைப் பார்த்து “முன்னல் போறவன் யாருன்னு தெரியுதா? நான் சற்று உற்றுப்பார்த்து ஏஜன்சி குமார் மாதிரி இருக்கு” என்றேன். அவனேதான் இப்ப அவன் கூட நாம் கொஞ்சம் விளையாடணும், சொன்னவர் காரை சிறிது வேகப்படுத்தினார். குமாரின் காரை முந்தி சென்று ஒரு வளைவில் சடாரென எந்த சிக்னலும் தராமல் வண்டியை திருப்பினார். பின்னால் வந்த குமார் இதனால் சற்று தடுமாறி “பிரேக்கை” அழுத்தி வேகத்தை மட்டுப் படுத்தினாலும், அது அவனையும் மீறி நான் சென்று கொண்டிருந்த காரின் மீது உரசி நின்று விட்டது .நான் சென்ற காரை ஓட்டி வந்தவர் சடாரென இறங்கி மோதி நின்ற குமாரிடம் வந்து இறங்கு கீழே என்று குமாரை வலுக்கட்டாயமாக இறக்கினார்.
குமார் நீ ‘சிக்னல்’ காட்டாததால்தான் வண்டியை மோத வேண்டியதாகி விட்டது என்று சொன்னதை காதில் வாங்காதவன் போல் அதெல்லாம் தெரியாது, என் வண்டிக்கு நீ பதில் சொல்லிவிட்டு போ உறுதியாக நின்று கொண்டான். இப்பொழுதே போலீசுக்கு போன் போடுகிறேன் என்று கைபேசியில் யாரிடமோ பேசினார்.. நான் வழக்கம்போல அடியாளாக அவன் அருகில் நின்று கொண்டேன், எனக்கு இவன் செய்தது அநியாயம் என்று தெரிந்தும்.
பின்னால் “டிராபிக் ஜாம்” ஆகிவிட்டது, அதற்குள் ஒரு கான்ஸ்டபிள் அங்கு வந்து இருவரையும் ஓரங்கட்ட வைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த பொழுது இன்ஸ்பெக்டர் அங்கு வந்து விட்டார். வந்தவர் ஏன் சார் இப்படி வேகமா ஓட்டறீங்க, பின்னாடி இப்படி மோதி வமபை விலைக்கு வாங்கிக்கறீங்க, வேகமாய் சொன்னவரிடம் “சார் இவர் சிக்னல் காட்டியிருந்தா கண்டிப்பா நான் மோதியிருக்க மாட்டேன். என்று சொன்னதை இவர் காதில் வாங்க மறுத்து விட்டார். நான் வந்த காரை ஓட்டி வந்த அரசியல் புள்ளி “சார் ஸ்டேசனுக்கு போயிடலாம்” என்று சொல்ல, அவருடன் இரு கார்களும் போலீஸ் ஸ்டேசன் சென்றன.
குமார் ஸ்டேசனில் உட்கார வைக்கப் பட்டான். குமாரிடம் சார் உங்க வீட்டு நம்பரை கொடுங்க என்று அரசியல் புள்ளி கேட்க எதற்கு? என்று குமார் எதிர் கேள்வி கேட்டான். இந்த விசயத்தை உங்க வீட்டுல சொல்லி அவங்க பொறுப்பு எடுத்துகிட்டா இந்த பிரச்சினைய விட்டுடலாம் சொன்னவனுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்த குமார் வீட்ட்ல எல்லாம் போலீஸ் ஸ்டேசன் வரமாட்டாங்க, அதுவுமில்லாம நானே உறுதி மொழி கொடுக்கிறேன் “உங்க வண்டியை சரி பண்ணித்தர்றேன்” இன்ஸ்பெக்டர் சார் இதிலென்ன தயக்கம் ? உங்க மனைவி இல்லாட்டி உங்க நண்பர்கள் யாரையாவது வரச்சொல்லுங்க, குமார் யோசித்தான் யாரை கூப்பிடுவது? என்று
அதற்குள். போலீஸ் ஸ்டேசனுக்குள் குமாரின் மனைவி, மற்றும் குமாரின் அப்பா, அவன் மாமனார், அனைவரும் உள்ளே பிரவேசித்தார்கள். அவர்களை பார்த்த்தும் குமாருக்கு உயிர் வந்தது போலிருந்தது. குமாரின் மாமனார் அந்த அரசியல் புள்ளியை பார்த்து என்ன மணி என் மருமகன் கிட்டே என்ன தகராறு? சார் இவர் உங்க மருமகனா? அடடா இது தெரியாம போச்சே, இன்ஸ்பெக்டர் சார் தயவு செய்து இந்த பிரச்சினையை இப்படியே விட்டுடலாம், என்றதும் இன்ஸ்பெக்டர் உங்க பிராப்ளம் சரியாயிடுச்சுன்னா அது போதும் என்றவர் சரி கிளம்புங்க, என்றார்.
அரசியல் புள்ளி தனியாக இன்ஸ்பெக்டரிடம் சென்று ஏதோ பேசிவிட்டு வந்தார். அதற்குள் குமாரின் மனைவி அவனை அணைத்தாற்போல் நின்று கொண்டாள். அருகில் அவள் தந்தையும் நிற்க, குமாரின் அப்பா இப்ப எல்லாரும் நம்ம வீட்டுக்கு போகலாம், என்று அவர்கள் அனைவரையும் அவர் காருக்கு அழைத்துக்கொண்டு கிளம்பினார். இதை பார்த்தும் பாராத்து போல அரசியல் புள்ளை என்னை அழைத்துக்கொண்டு “வா போகலாம் என்று காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.
காரில் இருவரும் மெளனமாய் உட்கார்ந்திருந்தோம், எனக்கு இதெல்லாம் பிடிக்கவேயில்லை, எதற்கு இந்த நாடகம்? என்னை பொருத்தவரை முடிவு என்பது “காயங்கள்” கைகால்கள் உடைதல் இவைகள் மூலமே முடிவு செய்யப்படும். நான் அவரிடம் என்ன சார் நீங்க எதுக்கு இந்த டிராமா? அதுவும் போலீஸ் வரைக்கும் கொண்டு போய், இந்த இன்ஸ்பெக்டர் வேற இதுக்கு உடந்தை மாதிரி? குமார் இதுவரைக்கும் எந்த தொந்தரவும் கொடுத்ததில்லையே?
மெளனமாய் சிரித்துக்கொண்டவர் ஒரு மணி நேரம் எங்ககூட இரு, அப்புறம் தெரியும் என்று சொன்னவர் உனக்கு பிரியாணி செரிச்சிரிருக்கும் வா ஏதாவது ஒரு ஓட்டல்ல சாப்பிடலாம்.
இருவரும் சாப்பிட்டு விட்டு அவர் வீட்டில் சென்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தோம். ஒரு கார் வெளியே வந்து நிற்க யாரென எட்டிப்பார்த்த எனக்கு திகைப்பாய் இருந்த்து. குமாரின் அப்பாவும், அவர் சம்பந்தியும், வந்து கொண்டிருந்தனர். கூடவே அந்த இன்ஸ்பெக்டரும். வந்தவர்கள் அந்த அரசியல் புள்ளியின் கையை பிடித்துக்கொண்டு மணி ரொம்ப நன்றி, நீயும் இன்ஸ்பெக்டரும் இல்லையின்னா குமாரை உயிரோட எங்களால் பார்த்திருக்க முடியாது என்றனர்.
சார் எங்களால முடிஞ்சதை செஞ்சோம், ஒரே நேரத்தில் இன்ஸ்பெக்டரும், அரசியல் புள்ளியும் சொன்னார்கள். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அவர்கள் கிளம்பி சென்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கேள்விக்குறியுடன் அரசியல் புள்ளியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.
“நான் தொட்டது எல்லாம் தோல்வியில் முடிவதால் இனி நான் உயிரோடு இருந்து பிரயோசனமில்லை” நான் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு காரை எடுத்து கிளம்பிவிட்டான்.
நல்ல வேலை அவன் மனைவி அந்த கடிதத்தை பார்த்துட்டாங்க. உடனே அவள் அப்பாவிற்கு “போன் செய்து” சொல்ல அவர் என்னிடம் சொன்னார். நான் உடனே இன்ஸ்பெக்டரிடம் யோசனை கேட்டேன். அவர் தான் எந்த வழியாக சென்றான் என விசாரித்து அவனை நிறுத்தி வைக்கும்படி யோசனை சொன்னார்கள் அதன்படியே செய்தேன் அவ்வளவுதான்.
அரசியல் செய்வது என்றால் நல்ல விசயங்களே இல்லை என நான் நினைத்துக்கொண்டிருந்த பொழுது இப்படி கூட அரசியல் செய்து நல்லது செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (7-Oct-21, 11:35 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 105

மேலே