காட்டில் கற்ற பாடம்

காட்டில் கற்ற பாடம்
கண்ணாயிரம் அவன் அப்பாவுடன் காட்டுக்கு சென்று அங்கு அப்பா மரங்களை வெட்டுவதை பார்த்து வளர்ந்தவன்.அப்பா அவற்றை சிறிய துண்டுகளாக்கி விற்று அதில் வரும் குடும்பத்தை நடத்திவந்தார். அப்பாவின் கம்பீர தோற்றமும்,அவர் கோடாலியால் பெரும் மரங்களை முறிப்பதும்,அவைகளை சிறியதாக்கி கொண்டு வருவதும் காணும் பொழுது அவன் மனதில் அப்பா எவ்வளவு வலிமையானவர் அவரை யாராலும் வெல்ல முடியாது அதேபோல் தானும் ஆகவேண்டும் என்ற நினைப்பு அவனுக்குள் வளர்ந்தது.
பெரிய மரங்களையும் பார்த்து உன்னை வெகு விரைவில் சிறிய கட்டைகளாக மாற்றிவிடுவோம் என்று மனதில் மகிழ்ந்தவாறு தான் அவன் காட்டுக்குள் செல்வான்.
அவர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று அங்குள்ள தேவியை வணங்குவது வழக்கம்.அவன் அப்பா அவனிடம் கடவுள் பக்தி ரொம்ப முக்கியம், அவர் அளித்த செல்வம் தான் காடு என்றும் அதில் வளரும் மரங்களை அவர் அவர்களுக்கு அளிக்கா விட்டால்,அவர்களது வாழ்க்கைக் குலைந்து போயிருக்கும் என்றும் அவ்வப்பொழுது கூறிவந்ததால், அவனுக்கு கடவுளிடம் பக்தி அதிகமாக இருந்தது.அவன் கோவிலுக்கு போவான்.கடவுளை வணங்குவான்,பின் காட்டுக்கு போவான் .மரங்களை வெட்டி, விறகாக்கி .அதைக் கொண்டு போய் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று விற்பனை செய்வான் .
இதில் அவனுக்கு ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வைத்து நிம்மதியாக வாழ்க்கையை நடத்தி வந்தான்.
ஒரு நாள் அவன் காட்டுக்கு போகும்பொழுது, அங்கே ஒரு நரியை பார்த்தான் .
அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்தில் இழந்துவிட்டது போலத் தோன்றியது ! அது ஒரு ஓரமாக மரத்தடியில் அமர்ந்திருந்தது.
அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம்
" இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?"
அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்.
இப்படி யோசிச்சுகொண்டு இருக்கும் போது அந்த பக்கமா ஒரு புலி வந்தது.அதைப் பார்த்த உடன் ஓடிப் போய் ஒரு மரத்துக்குப் பின்னால் ஒளிஞ்சுகொண்டான், என்ன நடக்குமோ எனக் கவனிக்க ஆரம்பிச்சான்.
அந்த புலி ஒரு பெரிய மானை அடிச்சு, இழுத்துகொண்டு வந்தது ... அதை மெல்ல சாப்பிட்டது .பின் சாப்பிட்டது போக உள்ள மீதியை அப்படியே அங்கேயே போட்டு விட்டு போய்விட்டது.
புலி சென்றதும், கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து நகர்ந்து மிச்சம் இருந்த மானின் உடல் மாமிசத்தை சாப்பிட்டது .. திருப்தியாக மரத்திற்கு அடிக்கு நகரத்து சென்றது.

இவ்வளவையும் மரத்துக்கு பின்னால் நின்று கண்ணாயிரம் பார்த்து கொண்டு இருந்தான்.
அவன் யோசிக்க ஆரம்பிச்சான்
" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ .. தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற எனக்குச் சாப்பாடு போடாமல் விட்டு விடுவானா ? எனக்குக் கடவுள் பக்தி அதிகம்,என்னை நிச்சயம் கைவிடமாட்டான் , நான் எதுக்கு அனாவசியமா வெயில் மழையில் கஷ்டத்தை அனுபவிக்கணும்.? எதுக்கு வேர்வை சிந்தி மரங்களை வெட்டி விறகாய் மாற்றி அதைச் சுமந்து கிராமங்களுக்கு சென்று பாடுபடவேண்டும்.?
இப்படி ஒரு யோஜனை வந்த உடனே மனதிலே ஒரு தீர்மானம் எடுத்தான்.இனி காட்டுக்கு போகப் போவதில்லை என்று.
கோடலியை தூக்கி எறிஞ்சான்,பேசாமல் ஒரு மூலையில் வீட்டில் உட்கார்ந்திருந்தான். கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான் ." கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- என்று நம்பினான் , கண்ணை முடிகிட்டு சில நாட்களில் கோயில் மண்டபத்தில் ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்தான்..
ஒவ்வொரு நாளும் போய்கொண்டே இருந்தது,
சாப்பாடு ஏதும் கிடைக்கவில்லை. பசியால் வாடிப் போனான் . உடம்பு இளைச்சு போச்சு . எலும்பும் தோலுமா ஆயி எழுந்திரிக்க கூட முடியாமல் படுத்துக் கொண்டான்.
ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளைப் பார்த்தான் ... " ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உன் மனம் குளிரவில்லையா,என் நம்பிக்கைப் பொய்யானதா எனக் கதறினான்.
நான் இப்படியே பட்டினி கிடந்து சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே! அதை பார்த்துத் தானே உன்னை நம்பி இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..என்று புலம்பினான். கடவுள் மெதுவா அசிரீரியா சொன்னார்
" முட்டாளே ! நீ பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது நரி கிட்டேருந்து இல்லை ! புலி கிட்டே இருந்து ! " இது உனக்கு எப்படி புரியவில்லை என கூறி பெரிதாக சிரிச்சாராம்.
நாம் யாவரும் கடவுளை குறை கூறி கொண்டே இருக்கிறோம் அவர் படைப்பில் உள்ளவை யாவும் தினமும் நமக்கு ஒரு படிப்பினையை கொடுக்கிறது நாம் தான் அதை புரிந்து கொள்வதில்லை.

எழுதியவர் : கே என் ராம் (8-Oct-21, 2:45 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 154

மேலே